Ad

வெள்ளி, 7 மே, 2021

பாலிவுட் தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1500... சல்மான் கானுக்குக் குவியும் பாராட்டுகள்!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பொதுமுடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இக்கட்டுப்பாடுகள் வரும் 15ம் தேதி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரைப்படம் மற்றும் டிவி சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாலிவுட் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு உதவவேண்டும் என்று மேற்கிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் நடிகர்களிடமும், திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டது. இக்கோரிக்கையை ஏற்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 7 ஆயிரம் திரைப்பட தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் போடப்போவதாக அறிவித்துள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ்

இதே போன்று மும்பையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் ஸ்டூடியோ வயதான திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது. அதோடு திரைப்படத்தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள்கள் வாங்கிக்கொடுக்கவும், தடுப்பூசி போடவும் முடிவு செய்துள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஊழியர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள திரைப்படத் தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1500 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான பட்டியலைத் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். கொரோனா முதல் அலையின் போதும் சல்மான்கான் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்திருந்தார்.

சல்மான் கான்

தொழிலாளர்களுக்கு நிதியுதவி கொடுப்பதில் ஊழல் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களது வங்கிக்கணக்கில் பணம் போடப்படுவதாக மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.என்.திவாரி தெரிவித்தார். வேறு நடிகர்களும் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர் என்று திவாரி தெரிவித்தார். சல்மான்கான் தனது தொண்டு நிறுவ்னம் மூலம் மும்பையில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் போன்றோருக்கு தினமும் சாப்பாடு வழங்கி வருகிறார். கட்டுப்பாடுகளால் உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளார்.



source https://cinema.vikatan.com/bollywood/salman-khan-to-donate-rs-1500-to-25000-bollywood-workers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக