Ad

வெள்ளி, 7 மே, 2021

மராத்தா இடஒதுக்கீட்டு சட்டம் ரத்தும் தமிழகத்தின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் நிலையும்!

எந்த ஒரு மாநிலத்திலும் 50 சதவிகதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் 1992-ல் தீர்ப்பு வழங்கியது. மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 2018-ம் ஆண்டு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால், மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீட்டு அளவு 50 சதவிகதத்தைக் கடந்தது. இந்த இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், ``வேலைவாய்ப்பில் 12%, கல்வியில் 13% மராத்தா சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம்” என மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை, அசோக் பூ‌ஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் ``1992-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அதை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பே இல்லை. அதன்படி மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிர அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம். மராத்தா சமூகத்தினருக்கு அதிக இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பில் மராத்தாவுக்கு கூடுதலாக 13% இட ஒதுக்கீடு தருவது சட்டத்துக்கு எதிரானது. மராத்தியர்களான ஓ.பி.சி மக்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு அளிப்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-க்கு எதிரானது. 1992-ல் இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது. மராத்திய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

மராத்தா

இந்தத் தீர்ப்பு தமிழகத்தின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்துமோ என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சமூகநீதியைக் கேள்விக்குள்ளாக்கும் தீர்ப்பு என்று விமர்சனம் செய்துள்ளதோடு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

Also Read: மஹாராஷ்டிரா: மராத்தா சமூகத்துக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு குறித்து திராவிடர் விடுதலை கழக தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகரிடம் பேசினோம் ``69 சதவிகித இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டம் 31-இன் கீழ் 9-வது வகையில் வைக்கப்பட்டுள்ளது. 1994-ல் தனியாக ஒரு சட்டம் இயற்றி அந்த சட்டத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளதால் தற்போதைக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், அதையும் கேள்விக்கு உட்படுத்துவேன் என உச்சநீதிமன்றம் 2008-ல் ஒரு வழக்கில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எப்படித் தீர்மானிக்கிறீர்கள். அதற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. மராத்தா இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருப்பதிலிருந்து, 16 சதவிகிதம் உயர்த்தி அதை 66 சதவிகிதமாக ஆக்குகிறார்கள். இந்திரா சஹானி வழக்கின் அடிப்படையில் 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு செல்லக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருப்பதால் மராத்தா இட ஒதுக்கீட்டைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்.

அன்பு தனசேகரன்

இந்தியாவைப் பொறுத்தவரைப் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். எனவே நம்மால் அகில இந்திய அளவில் ஒரு வரையறையை தீர்மானிக்க முடியாது. அதை மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதனடிப்படையில் தமிழகத்தின் 69 சதவிகித ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கும் சின்ன நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓர் ஆணையத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். தற்போது வரும் அரசு அந்த ஆணையத்தின் மூலம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி அதை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தால் நாம் 69 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே இட ஒதுக்கீட்டை வாங்க முடியும்.

தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தரவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காததால் ரத்தாகவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

1994-ஆம் ஆண்டு, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியிலிருந்தபோது, தமிழக சட்டசபையில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த தீர்மானம் சட்டமாக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த தீர்மானத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர் விஜயனிடம் பேசினோம், “1993-ஆம் ஆண்டில் மண்டல் கமிஷன் சொன்ன 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. 102-வது அரசியல் சாசனச் சட்டத்திருத்தத்தின் படி பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காணும் பணியை மாநில அரசுகள் செய்து வரும் பணியை இனி மத்திய அரசு நேரடியாக மேற்கொள்ளும். மத்திய அரசு மேற்கொள்ளலாம் என ஒரு தரப்பினரும் கூடாது என மற்றொரு தரப்பினரும் கூறியுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமா என்று பார்ப்பதைவிட அரசியலமைப்பின்படி சரியா என்று பார்ப்பதுதான் முக்கியமானது. 1994-இல் தமிழக அரசு அறிவித்த 69 சதவிகித இட ஒதுக்கீடு தவறான அனுகுமுறை. ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகபட்ச இட ஒதுக்கீடு 50 சதவிகிதம் தான் இருக்க வேண்டும் என்று அப்போதே வழக்கு தொடர்ந்தோம். ஆனால், வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது என இப்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது கூட நான் தொடர்ந்த வழக்கிற்கு கிடைத்த தீர்ப்பு இல்லை.

வழக்கறிஞர் கே.எம்.விஜயன்

தீர்ப்பு குறித்து பேசும் சிலர் 69 இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசியலமைப்பில் உள்ள 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருப்பதல் அதை கேள்விக்கு உட்படுத்த முடியாது. எனவே, தமிழக இட ஒதுக்கீட்டிற்கு எந்தப் பிரச்னையும் வராது என்கிறார்கள். ஆனால், அது தவறான கருத்து. 9-வது அட்டவணையில் சொத்து தொடர்பான விவரங்களை மட்டும்தான் சேர்க்க முடியும். அதுமட்டுமல்ல 1974-ஆம் ஆண்டிற்குப் பிறகு 9-வது அட்டவணையில் சேர்க்கப்படும் எந்தச் சட்டத்தையும் நீதிமன்றம் மீண்டும் கேள்விக்கு உட்படுத்தலாம் என 2000-இல் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன்படி பார்த்தால் தமிழக அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீடு 1994-இல் 9-வது அட்டவணையில் கொண்டுவரப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக அரசின் இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு தற்போதைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/supreme-court-refuses-to-re-examine-its-1992-order-setting-quota-limit-at-50-what-about-tn-69

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக