Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

சட்டமன்றத் தேர்தல்: மருத்துவமனை உள் நோயாளிகளுக்குத் தபால் வாக்குரிமை - எழும் கோரிக்கை!

``நூறு சதவிகித வாக்குகள் பதிவாக வேண்டுமென்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளுக்கும் அவர்களை உடனிருந்து கவனித்து வருபவர்களுக்கும் தபால் வாக்குகள் வழங்க வேண்டும்" என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மதுரையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும் ஆர்.டி.ஐ ஆர்வலருமான செய்யது பாபு.

இந்தியத் தேர்தல் ஆணையம்

சமீபத்தில் தமிழகம் வருகை தந்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், தமிழகம்-புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் பற்றி அனைத்து கட்சி பிரமுகர்கள், தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். 1,000 வாக்காளர்களுக்கு ஒன்று என்ற கணக்கில் வாக்குச்சாவடிகளை அதிகப்படுத்துவதாகவும், மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் வசதிகளை அதிகப்படுத்துவது என்றும், 80 வயதைக் கடந்தவர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், நோயாளிகளுக்கு தபால் வாக்குரிமை கேட்டு மனு அனுப்பியுள்ள செய்யது பாபுவிடம் பேசினோம், ``ஒவ்வொரு தேர்தலிலும் நூறு சதவிகித வாக்குப்பதிவு நடைபெறவேண்டும், வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை, உரிமை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. இதற்காக தேர்தல் சமயங்களில் பல கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்கிறார்கள்.

செய்யது பாபு

ஆனால், இப்படி அறிவுறுத்தும் தேர்தல் ஆணையம் அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதில்லை. விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் ஒரு வாக்குகூட வெற்றி - தோல்வியைத் தீர்மாணிக்கக் கூடியது என்பதால் குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமையை அளிக்க வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், அரசு ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுபோன்ற வாய்ப்பு தேர்தல் நேரத்தில் அவசரப் பணியிலும், வெளியே வர முடியாத நிலையிலும் உள்ளவர்களுக்குக் கிடைப்பதில்லை.

உதாரணத்துக்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட ஜந்து லட்சம் பேர் உள் நோயளிகளாக இருந்து வருகிறார்கள். இதுபற்றிய டேட்டாவை நான் சேகரித்துள்ளேன். இவர்களைக் கவனித்துக்கொள்ள உடன் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களும் ஐந்து லட்சம் பேர் வருகிறார்கள். இவர்களால் தேர்தல் நேரத்தில் அவர்களின் வாக்குரிமையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது.

சட்டமன்றத் தேர்தல்

இவர்களின் வாக்கு ஒவ்வொன்றும் மிக முக்கியமானது. அவர்கள் வாழும் தொகுதியில் ஒரு சில வாக்குகள் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கலாம்.

அதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் தபால் வாக்குரிமை அளிக்க வேண்டும். மருத்துவமனையில் இருப்பதால் அவர்கள் வாக்களிக்க தகுதி இல்லாதவர்களாகிவிட மாட்டார்கள்.

மருத்துவமனையில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிடலாம் என அனுமதி அளிக்கும் தேர்தல் ஆணையம் மருத்துவமனையில் உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யாதது ஏன்?

செய்யது பாபு

1984-ம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சர் ஆனார். தற்போது தேர்தல் ஆணையம் முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ளது.

அதுபோல் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், நம் நாட்டுத் தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. வாக்குரிமை உள்ளவர்கள் நாட்டின் எந்த பகுதியிலும் எந்த வாக்குச் சாவடியிலும் வாக்களிக்கலாம் என்ற ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம்

அதுபோல் மருத்துவமனை உள்நோயளிகளுக்கும் அவர்களுக்கு உதவியாளர்களாக இருப்பவர்களுக்கும் வாக்குரிமையை நிறைவேற்ற தபால் வாக்கு வசதியை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்.

இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் உயர்நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன் " என்றார்.

சமீபத்தில் இதுபோல் ரயில்வே ஓடும் தொழிலாளர்களுக்கு தபால் வாக்குரிமை கேட்ட எஸ்.ஆர்.எம்.யூ மதுரை கோட்ட நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கு சட்டத்தில் இடமுள்ளதாகவும் கூறி பதில் அளித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். அதுபோல மருத்துவமனை நோயாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/ballot-vote-for-patients-social-activist-writes-to-ec

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக