Ad

புதன், 24 பிப்ரவரி, 2021

"என் சிவப்புத் துண்டை என் கிட்டக் கொடுத்துடுங்கம்மா..." - எப்படி இருக்கிறார் தா.பாண்டியன்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையிலிருந்து வரும் தகவல்கள் கவலையளிப்பதாகவே இருக்கும் சூழலில், அவரது பேத்தியும் டிவி செய்தி வாசிப்பாளருமான ஹேனா டேனியலிடம் பேசினேன்.

"மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாநாட்டுக்குக் கடந்த வாரம் போயிட்டு மூணு நாள் முன்னாடிதான் சென்னை வந்தார். அப்போ எல்லாம் உடல் நிலையில் எந்தப் பிரச்னையுமில்லை. நேற்று முன்தினம் இரவு லேசா மூச்சுத் திணறல் மாதிரி இருக்குன்னார். டாக்டர் வந்து பார்த்துட்டு மருந்து மாத்திரை தந்துட்டுப் போனாங்க. நேத்து காலையில மறுபடியும் அதேபோல வந்ததாலதான் ஆம்புலன்ஸ் வரவழைச்சு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனோம்.

தா.பாண்டியன் தன் பேத்தி ஹேனா டேனியலுடன்...

நேத்து பகலெல்லாம் மருத்துவமனையில எல்லோருடனும் பேசிட்டுதான் இருந்தார். ஆனா ராத்திரியில இருந்து பேச முடியலைனு சொல்றாங்க. முத்தரசன் சார் மட்டும் அங்கேயே இருக்கார். மத்தபடி பல்வேறு கட்சித் தலைவர்கள் போன்ல விசாரிச்சிட்டிருக்காங்க. இப்ப வென்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டிருக்கு" என்றார் ஹேனா.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தா.பாண்டியனுக்கு சிறுநீரகப் பிரச்னை காரணமாக டயாலிசிஸ் செய்துவந்ததாகத் தெரிகிறது.

மருத்துவமனையில் அட்மிட் ஆனதும் அங்கு அவர் தோளில் போட்டிருந்த சிவப்புத் துண்டை எங்கேயோ எடுத்து பத்திரமாக வைத்திருந்தார்களாம். நேற்று இரவு எட்டு மணியளவில் செவிலியர்களை அழைத்த தா.பா. "என் சிவப்புத் துண்டை என் கிட்டக் கொடுத்துடுங்கம்ம்மா" என்று சொல்லியிருக்கிறார்.

விரைவில் நலம்பெற்று மீண்டுவாருங்கள் தோழரே!



source https://www.vikatan.com/news/politics/how-is-d-pandian-now-after-getting-hospitalized-his-grand-daughter-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக