Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

மாட்டு வண்டியில் மனு வாங்கும் திட்டம்! - கார்த்தி சிதம்பரம் காரிலே முட்டி நின்ற மாட்டு வண்டி

தமிழக சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. வெற்றிக் கனியைப் பறிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர். அகில இந்தியத் தலைவர்களின் வருகையும் தமிழகத்தில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் தேர்தல் பிரசாரப் பணிகள் என்றால் மறுபுறம் மக்களைக் கவரும் வகையில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புப் பணிகளும் கட்சிகளின் சார்பில் தீவிரமாக நடந்துவருகின்றன. மக்களின் மனதில் இடம் பெற வேண்டும் என அரசியல் கட்சியினர் மக்களை சந்தித்து வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் மாட்டு வண்டியில்

காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டி மூலம் மனுக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் மாட்டு வண்டியில் பெட்டி வைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம், ``குஜராத்தில் பெட்ரோல் விலையை ஏற்றி மோடி செஞ்சுரி அடித்ததால் தான் அகமதாபாத்தில் மோடியின் பெயர் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு வைத்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. ஆனாலும் விலையை கட்டுக்குள் வைத்திருந்தனர்.

பா.ஜ.க ஆட்சியில் வரிமேல், வரிபோடுகிறார்கள், குழப்பமான பண மதிப்பிழப்பீடு, ஜி.எஸ்.டி., என பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கையாளாகத அரசாக உள்ளது. தமிழக அரசு நிர்வாக கோளாறு காரணமாக ஓய்வு பெறும் நபர்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் ஓய்வு பெறும் வயதினை உயர்த்தியுள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என எல்லா தரப்பு மக்களையும் ஏமாற்றியதால் தற்போது போராடி வருகின்றனர்" என்றார்.

கொடி அசைத்த கார்த்தி சிதம்பரம்

மாட்டு வண்டியில் மனு வாங்கும் நிகழ்ச்சியை துவங்கும் முன் கார்த்தி சிதம்பரம் மாட்டு வண்டியில் ஏறி கேமராக்களுக்கு போஸ்கொடுத்தார். பின்னர் இறங்கி மாட்டு வண்டியில் மனுக்கள் வாங்க செல்ல வண்டிக்கு கொடி அசைத்தார். அப்போது மாடு வெறித்து தாறுமாறாக ஓடி, கார்த்திசிதம்பரம் காரில் மோதி நின்றது. பிறகு மாட்டு வண்டியை அங்கிருந்து தள்ளி கொண்டு சென்றனர். நல்ல வேளை மாட்டு வண்டியில் ஏறி நிற்கும் போது மாடு தாறுமாறாக ஓடவில்லை என்பது போல் நிம்மதி பெருமூச்சு விட்டனர் காங்கிரஸார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/bullock-cart-scheme-started-by-karthi-chidambaram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக