இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...
ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமம் மரம், செடி, கொடிகள்னு பச்சைப்பசேல்னு இருக்கும். தேவையான மழை, நல்ல விவசாயம்னு அந்தக் கிராமம் ரொம்ப செழிப்பா இருந்ததால, அங்க வாழ்ந்துட்டு இருந்தவங்க எல்லாம் நல்ல வசதியா இருந்தாங்க. அந்தக் கிராமத்துக்கு வெளியே ஒரு பனை மரம் இருந்துச்சு. கிராமத்துக்குள்ள நிறைய பழ மரங்கள், தென்னை மரங்கள் எல்லாம் இருந்ததால இந்தப் பனை மரத்தை யாருமே கண்டுக்க மாட்டாங்க. அதனால, அந்தப் பனை மரம் எப்போ பார்த்தாலும் ரொம்ப வருத்தமா இருக்கும்.
Also Read: காளான்களுக்கு ரியா செய்த சத்தியம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 39
ஒருநாள், கிராமத்தைச் சேர்ந்த ஒரு நாய் நிழலுக்காக அந்தப் பனை மரத்தடிக்கு வந்துச்சு. நாய் தன்னோட நிழல்ல நிக்கிறதைப் பார்த்த பனை மரம் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. உடனே தன்னோட ஓலைகளை வேகமாக ஆட்டி நாய்க்கு விசிறி விட டிரை பண்ணுச்சு. ஆனா, பனை மரம் ரொம்ப உயரமா இருக்கிறதால அந்தக் காத்து கீழ இருக்கிற நாய் மேல படவே இல்ல. உடனே பனை மரம் தன்கிட்ட இருந்து ஒரு நுங்கை நாய்க்கு முன்னாடி போட்டுச்சு. மேல இருந்து கீழ விழுந்த வேகத்துல நுங்கு ரெண்டா பிளந்துடுச்சு. `அட, இதென்ன வெள்ளையா பளபளப்பா இருக்கேன்னு நுங்கை பார்த்த நாய், அதை லைட்டா டேஸ்ட் பண்ணிப் பார்த்துச்சு. டேஸ்ட் பிடிச்சதால அந்த நுங்கை முழுசா சாப்பிட்டுச்சு அந்த நாய்.
இதைப் பார்த்த பனை மரம் இன்னும் ரெண்டு நுங்கை நாய்க்கு முன்னாடி போட்டுச்சு. அதையும் சாப்பிட்டுச்சு நாய். `ஆஹா, இவனுக்கு நம்மளோட நுங்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல. அதனால, அடுத்து நம்மகிட்ட இருக்கிற பனம்பழத்தை இவனுக்கு கொடுப்போம்னு நினைச்சுது பனை மரம். உடனே தன்கிட்ட இருந்த பனம்பழத்தை நாய்க்கு முன்னாடி போட்டுச்சு. இதுவும் ஏதோ சாப்பிடுற பொருள்தான்னு நினைச்சுக்கிட்ட நாய், பனம்பழத்தை ஒரு கடி கடிச்சுது. செம இனிப்பா இருந்துச்சு பனம்பழம். ஒரே மூச்சுல அதை சாப்பிட்டு தீர்த்துச்சு நாய்.
Also Read: காட்டுக்குள்ள நடந்த சுதந்திர தினவிழா... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 38
`அட, இந்த நாய்க்கு நம்மளோட பழமும் பிடிச்சிருக்கு போல'ன்னு நினைச்ச பனை மரம், அடுத்ததா தன்கிட்ட இருந்த பனங்கிழங்கை கீழ போட்டுச்சு. அதையும் ஆசை ஆசையா சாப்பிட்டுச்சு நாய். பனங்கிழங்கு சாப்பிட்டதும் நாய்க்கு தாகம் எடுக்க ஆரம்பிச்சது. மறுபடியும் நுங்கு கிடைக்குமான்னு பனை மரத்தை அண்ணாந்து பார்த்துச்சு நாய். நாயோட நிலைமையை புரிஞ்சுக்கிட்ட பனை மரம், இந்த முறை நுங்குக்கு பதிலா பதநீரை தன்னோட ஓலையில வடிச்சு, அதை முடிச்சுப் போட்டு கீழ போட்டுச்சு. அந்தப் பதநீரை தாகம் தீர குடிச்சிது நாய்.
வயிறு முட்ட நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பதநீர்னு சாப்பிட்ட நாய்க்கு தூக்கம் கண்ணை சொக்க ஆரம்பிச்சிடுச்சு. அப்படியே அந்த மரத்தடியிலேயே படுத்துத் தூங்க ஆரம்பிச்சிது நாய். நாய் மேல வெயில்படாம பார்த்துக்கிச்சு பனை மரம். சாயங்காலமா கண் விழிச்ச நாய், பனை மரத்துக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு ஆசைப்பட்டுச்சு. அதனால, நிமிர்ந்து பனை மரத்தைப் பார்த்துச்சு நாய். ஆனா, ராத்திரி ஆகப்போறதால பனை மரம் லேசா கண்ணசர ஆரம்பிச்சது. பனை மரத்துக்கு தேங்க்ஸ் சொல்லாமப் போறதுக்கு நாய்க்கு மனசு வரலை. அதனால, மரத்துல மேல மெதுவா ஏற ஆரம்பிச்சிது.
தன் மேல யாரோ ஏறுறாங்க அப்படிங்கிறதை உணர்ந்த பனை மரம் கண்ணைத் தொறந்துச்சு. அது கண்ணுல நாய் பட்டுச்சு. `என்ன ஃபிரெண்ட், என்னாச்சு? இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து என் மேல ஏறி வந்திருக்க' அப்படின்னு கேட்டுச்சு. அதுக்கு நாய், `நீ சாப்பிட வெச்சிருந்த உணவையெல்லாம் எனக்குக் கொடுத்திட்டே. அதுக்காக உனக்கு தேங்க்ஸ் சொல்ல வந்தேன்'னு சொல்லுச்சு. `அது என்னோட உணவில்ல. மத்தவங்களுக்கு கொடுக்கிறதுக்காக என்கிட்ட இருக்கிற உணவு'ன்னு பதில் சொல்லுச்சு பனை மரம்.
அப்படியான்னு கேட்ட நாய், `நானும் என் நண்பர்களும் இதுவரைக்கும் உன்கிட்ட இருக்கிற உணவுகளைச் சாப்பிட்டதே இல்ல. இன்னிக்குதான் நான் சாப்பிட்டிருக்கேன். என்னை மாதிரியே என் நண்பர்களும் சாப்பிடணும்னு ஆசைப்படறேன். அதுக்கு நான் என்ன பண்ணணும்'னு கேட்டுச்சு. அதுக்கு பனை மரம், `என்கிட்ட நிறைய பனை விதைகள் இருக்கு. அதையெல்லாம் நான் உன்கிட்ட தர்றேன். நீ அதை ஊர் பூரா விதைச்சிடு. அந்த விதைகள்ல இருந்து என்னை மாதிரியே பனை மரங்கள் வளரும். அதுல இருந்து உங்களுக்குப் பிடிச்ச எல்லா உணவுகளையும் சாப்பிடலாம்'னு சொல்லுச்சு.
பனை மரம் சொன்ன மாதிரியே அதுகிட்ட இருந்து பனை விதைகளை வாங்கிட்டுப் போன நாய், தன் நண்பர்களோட சேர்ந்து ஊர் பூரா விதைச்சது. கொஞ்ச வருஷத்துல அதெல்லாம் முளைச்சு மரங்களாச்சு. அந்த மரங்கள்ல இருந்து பறவைகள், விலங்குகள் எல்லாமும் தங்களுக்குப் பிடிச்ச உணவுகளைப் பறிச்சு சாப்பிட்டுச்சுங்க. இதுக்கெல்லாம் காரணமான அந்த ஒற்றைப் பனை மரமும் நாயும் ரொம்ப நல்ல ஃபிரெண்ட்ஸாயிடுச்சுங்க.
- நாளை சந்திக்கலாம்.
தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
source https://www.vikatan.com/literature/kids/palm-trees-gift-to-dogs-vikatan-bedtime-stories-40
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக