நாற்பது நாட்களில் தமிழகத்தினை அடுத்து ஆளப்போவது யார்? என்பது இறுதியாகப்போகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடியால் அ.தி.மு.க அரசு அவசரக்கோலத்தில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.குறிப்பாக கடைசிநாளில் முதல்வர் அறிவித்த அறிவிப்புகளே அ.தி.மு.கவின் பதட்டத்திற்கு உதாரணம் என்கிறார்கள் அ.தி.மு.க தரப்பினர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல்வாரத்தில் அறிவிக்கப்படும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் தேதியை முன்கூட்டியே அறிவிக்க திட்டமிட்டது தேர்தல் ஆணையம். மற்றொருபுறம் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 3-ம் தேதியே தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதங்கள் பதில் உரை உள்ளிட்டவற்றிக்கு நேரம் வேண்டியிருந்தால பிப்ரவரி 27-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க அரசின் கடைசி பட்ஜெட்டாக இது இருப்பதால் பல திட்டங்களையும் இந்த கூட்டத்தொடரில் அறிவிக்க முதல்வர் திட்டமிட்டிருந்தார். குறிப்பாக சட்டமன்றம் முடியும் 27-ம் தேதி அன்று பல கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடும் திட்டம் இருந்தது. ஆனால், 26-ம் தேதி காலை பத்து மணிக்கு டெல்லி தேர்தல் ஆணையத்திலிருந்து மாலை ஐந்து மாநில தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு இருக்கிறது என்று செய்திக்குறிப்பு வெளியானது. இந்த தகவல் தமிழக அரசுக்கு எட்டியதும் அதிர்ச்சியடைந்துவிட்டது. காரணம், ஏற்கனவே மத்திய அரசு தரப்பிலிருந்து சொன்ன தகவல்“மார்ச் 1-ம் தேதி பிரதமர் தமிழகம் வர இருக்கிறார். அவர் வந்து சென்ற பிறகே தேர்தல் தேதியை அறிவிப்பார்கள்” என்று சொல்லப்பட்டது. அதை பிரதமரும் உறுதி செய்தார். மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தமிழக சுற்றுப்பயணத் முடித்துக்கொண்டு டெல்லி சென்ற மோடியிடம் தேர்தல் ஆணையத்திலிருந்து நாளையே தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளோம் என்று சொல்ல, அவரும் ஓ.கே சொல்லிவிட்டார். இதன்பிறகே இந்த அறிவிப்பு வெளியானது.
26-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் 110-விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்று முதலில் அறிவித்தார். ஏற்கனவே விவசாய கடன் ரத்து செய்து அதற்கான சான்றிதழ்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே விவசாயிகளுக்கு அடுத்த அறிவிப்பை வெளியிட்டு, நானும் ஒரு விவசாயி என்கிற பிம்பத்தை வலுவாக கட்டமைக்கும் வேலையில் இறங்கினார்.
அதோடு ஜெயலலிதாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததே பெண்கள் வாக்குகுள் தான். அதை கையில் எடுக்க முடிவெடுத்த எடப்பாடி நிதித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதன்பிறகே கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை ரத்து செய்யலாம் என்று ஆலோசனை கொடுத்தனர். உடனடியாக இது குறித்து சட்டமன்றத்திலும் அறிவிப்பினை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அதே போல் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையான வன்னியர்களுக்கு உள் இடஒதிக்கீடு குறித்த அறிவிப்ப 27-ல் வெளியிட முடிவெடுத்திருந்தது அரசு. ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போனால், அவசரமாக அதையும் நிறைவேற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை வெளியிடாமல் கூட்டணி குறித்து அறிவிப்பினை எங்களால் வெளியிட முடியாது என பாமக தரப்பும் தெளிவாக சொல்லியுள்ளது. சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தபோதே தைலாபுரத்திலிருந்து அமைச்சர் சி.வி சண்முகத்தினை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது “முதல்வர் தலைமைசெயலகம் சென்றுள்ளார். அங்கு உள்இடஒதிக்கீடு குறித்த ஆலோசனையை முடித்துக்கொண்டு மதியம் அறிவித்துவிடுவார்” என்ற உறுதியைக் கொடுத்துள்ளார்கள்.
இதன்பிறகே 27-ல் தாக்கல் செய்யவேண்டிய உள்இடஒதிக்கீடு மசோதா விவரம் நேற்று மாலை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வர் 110-விதியின் கீழ் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதிக்கீடு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியான அடுத்த அரைமணிநேரத்தில் தமிழகத்திற்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் அரசு அறிவித்த மசோதானை அரசாணையாக வெளியிடுவதில் சிக்கல் இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில். ஆனால்,தங்கள் கோரிக்கையை அரசு அறிவித்துவிட்டதால் பாமக தரப்பும் மகிழ்ச்சியில் உள்ளது. இதை வைத்து வரும் தேர்தலில் ஒரு ரவுண்டு வர திட்டம்போட்டுள்ளது பாமக.
source https://www.vikatan.com/news/politics/emergency-bill-in-half-an-hour-edappadi-at-the-climax-move
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக