5 நாள் ஆட்டத்தைத்தான் டெஸ்ட் கிரிக்கெட் என்போம். அஹமதாபாத்தில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டி கணக்குப்படி இன்றுதான் நடந்துமுடிந்திருக்கவேண்டும். ஆனால், 85 ஆண்டுகளில் இல்லாத அதிசயமாக இரண்டே நாட்களில், இந்தியா - இங்கிலாந்து என இரண்டு மிகப்பெரிய டெஸ்ட் அணிகள் மோதிய போட்டி எந்த சுவாரஸ்யமும் இன்றி நடந்துமுடிந்திருக்கிறது.
5 நாள் நடக்க வேண்டிய டெஸ்ட் போட்டி, வெறும் 5 செஷன்களில் முடிந்து இருக்கிறது. உண்மையிலேயே இது டெஸ்ட் போட்டி ஆட ஏற்ற மைதானம்தானா? இரண்டு செஷன்களில் 17 விக்கெட்டுகள் எல்லாம் விழுமா? ஏற்கனவே அழிந்து கொண்டிருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை, இத்தகைய பிட்சுகள் மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லுமா?!
ஒருபுறம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரலியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள், இந்தப் பிட்சைப் பற்றி குறைகூறிக் கொண்டிருக்க, மறுபுறம் இந்திய முன்னாள் வீரர்களிடம் இருந்து, எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் சமமாக எழுந்துள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம், ஏகப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், பல வகையான பிட்சுகள் என ஏகப்பட்ட சிறப்பம்சங்களோடு குடியரசுத் தலைவர் வந்து தொடங்கி வைத்த போட்டி, கடும் விமர்சனத்தில் முடிந்துள்ளது. உண்மையில் பிரச்னை எங்கேயிருக்கிறது, பிட்ச்சிலா இல்லை பிங்க் பந்திலா இல்லை எதிர்க் கருத்துக்கள் கூறும் முன்னாள் வீரர்களிடமா?!
இந்தியாவில் பிங்க் பந்து டெஸ்ட் சாத்தியமா?
'ரெட் பால்' என்னும் பேரில் காலங்காலமாக இருக்கும் ஜாம்பவான் முன், போட்டிபோட வந்திருக்கும் கைக்குழந்தைதான் 'பிங்க் பால்'.
இந்தக் குழந்தை வளர வேண்டிய நேரமும், போக வேண்டிய தூரமும் நிறையவே உள்ளது. அந்த இடத்தை அது அடையும் வரை, இது மாதிரியான சவால்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும்.
எந்தவொரு நாட்டிலும், டொமஸ்டிக் போட்டிகளில், அதிகளவில் இந்தமாதிரியான பந்துகளைப் பயன்படுத்தி, அதில் இருந்து வரும் தகவல்களைக் கொண்டு பந்தை மேம்படுத்தி, இன்டர்நேஷனல் லெவலில் ஆடும்போட்டிக்கு, எடுத்துச் செல்லலாம். ஆனால் பிசிசிஐ எதையும் முதலில் ஒப்புக் கொள்ளாது. பின்பு காலங்கள் செல்லச் செல்ல, மற்றவர்களைப் பார்த்துத்தான், நாமும் ஓகே சொல்வோம். டிஆர்எஸ் முறையைப் போல!
மற்ற நாடுகள் பிங்க்பால் டெஸ்ட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, நாம் அதெல்லாம் ஒத்து வராது என்று விலகித்தான் நின்றோம். 2018-ம் ஆண்டு, இந்தியா ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகள் ஆடச் சென்றபோது, 'ஒரு டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் ஆட முடியுமா' என்று ஆஸ்திரேலியா கேட்டபோது, இந்தியா மறுத்துவிட்டது.
சில ஆண்டுகள் மற்ற நாடுகளில் நடைபெற்ற போட்டிகளைப் பார்த்தும், பிசிசிஐயின் புதுத்தலைவர் கங்குலியின் முன்னெடுப்புக்குப் பின்னர்தான், இந்திய அணி பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டி சவாலை எதிர்கொண்டது. வங்கதேசத்துக்கு எதிராக, கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில், முடிவு மூன்றே நாட்களில் கிடைத்துவிட்டது.
ஆஸ்திரலியாவில் நடந்த இரண்டாவது போட்டியிலும், முடிவு மூன்றே நாட்களில் கிடைத்துவிட்டது.
தற்போது நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முடிவு இரண்டே நாட்களில் கிடைத்துவிட்டது.
இந்தியா விளையாடிய இந்த 3 போட்டிகள் மட்டுமல்ல, இதுவரை நடந்துள்ள 16 பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளும், 5-வது நாளைப் பார்த்ததே இல்லை என்பதில் இருந்தே பிங்க்பால் டெஸ்ட்டின் தன்மை புரிந்துவிடும். இந்தப் பந்திற்கு வீரர்களும் சரி, மைதானமும் சரி, இன்னும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை.
பிங்க் பந்திற்கு, எந்தவிதமான பிட்ச் தயார் செய்யப்பட வேண்டுமென்ற விஷயத்தில், பிட்ச் வடிவமைப்பாளர்கள், இன்னும் ஆரம்பக்கட்ட நிலையில்தான் உள்ளனர். அதேதான் பிங்க் பந்து தயாரிப்பாளர்களின் நிலையும்.எந்தவிதமான பந்தைத் தயார் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கும் எந்தத்தெளிவும் இல்லை. இப்போதுதான் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இதற்குத் தீர்வு, உள்ளூர் போட்டிகள் அதிகளவில் பிங்க்பந்தில் நடத்தி, அதில் இருந்து வரும் கருத்துகளைக் கொண்டு பந்தும் சரி, பிட்சும் சரி மேம்படுத்தப்பட வேண்டும். அதை செய்யாமல் விளம்பரங்களுக்காகத் தொடர்ந்து பிங்க்பால் சர்வதேசப்போட்டிகளை நடத்துவதில் பிசிசிஐ ஆர்வம் காட்டுவதில்தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.
இந்தியாவில் பிங்க்பந்து டெஸ்ட் போட்டியில் இருக்கும் இன்னொரு பிரச்னை Dew என்றழைக்கப்படும் பனிப்பொழிவு. பொதுவாக ஆஸ்திரலியா, நியூஸிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் பனிப்பொழிவு என்பதே இருக்காது. அதனால் அங்கு நடக்கும் பிங்க்பந்து டெஸ்ட் போட்டிகளுக்கு பிரச்னை இருக்காது. ஆனால், இந்தியாவில் இரவுநேரங்களில் அதிகம் பனிப்பொழிவு இருக்கும். அதனால் பந்து மோசமாகி விடும். பந்துத் தயாரிப்பாளர்கள், இந்த பனிப்பொழிவிற்கு ஏற்றாற்போல் பந்தைத் தயார் செய்தால் மட்டுமே, எதிர்காலத்தில் இந்தியாவில் பிங்க் டெஸ்ட் சாத்தியப்படும்.
அஹமதாபாத் பிட்ச் மோசமா?
இரண்டு நாளில் ஒரு டெஸ்ட் போட்டி முடிகிறது என்றால் அது நிச்சயம் மோசமான பிட்ச்சாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப்பரவி விடுகிறது. அதில் உண்மைத்தன்மை எந்தளவு உள்ளது என்பதை ஆராய்ந்தால்,' பிட்ச் மோசமாக இல்லை மாறாக பேட்ஸ்மேன்கள் சரியான டெக்னிக்கைப் பயன்படுத்தி விளையாடவில்லை' என்பதே உண்மை.
அஹமதாபாத் டெஸ்ட் முடிந்ததும் ரோஹித் ஷர்மா, ''பந்து பயங்கரமாக எல்லாம் திரும்பவில்லை. நாங்கள் சரியான டெக்னிக்கைப் பயன்படுத்தி ஆடவில்லை'' என்றார். பிசிசிஐக்கு ஆதரவாக இப்படி சொன்னார் என்று சிலர் நினைத்தாலும், இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால், விழுந்த 30 விக்கெட்டுகளில், 21 விக்கெட்டுகள், ஸ்ட்ரெய்ட் பாலில்தான் விழுந்துள்ளன. பந்து பயங்கரமாக எல்லாம் திரும்பவில்லை என்பதே உண்மை. அதேநேரம் பந்து மிகப்பெரிய அளவில் பவுன்சும் ஆகவில்லை.
ரோஹித் ஷர்மா இன்னொன்றும் சொன்னார். ''சென்னையில் வைத்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இதைவிட பந்து மோசமாகத் திரும்பியது. அதை எதிர்கொண்டுதான் நாங்கள் சதங்கள் மற்றும் அரைசதங்கள் அடித்தோம். உண்மையில் பிட்சில் பிரச்னையில்லை. எங்கள் பேட்டிங் டெக்னிக்கில்தான் பிரச்னை இருக்கிறது" என்றார்.
பேட்டிங் டெக்கனிக்ஸ்?!
பிங்க் பந்தில் மெழுகுச்சாயம் அதிகம் பூசப்பட்டிருப்பதால், சிவப்புப் பந்தை விட அதிக வேகமாக வருகிறது. பிட்ச் ஆனவுடன், அதை எதிர்கொள்ள இரண்டு அணி பேட்ஸ்மேன்களும் போதிய பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மை.
"இந்திய வீரர்கள் உள்ளுர்ப் போட்டிகளில் ஆடுவதே இல்லை. அவர்கள் பேக்ஃபுட் என்ற ஒன்று உள்ளது என்பதேயே மறந்துவிட்டார்கள். டிராவிட் , லட்சுமணன் போன்ற ஜாம்பவான்கள் அதிக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி, தங்களை ஸ்பின் பந்துவீச்சில் ஆடுவதற்கு நன்கு தயார்படுத்திக்கொண்டார்கள். ஆனால், தற்போது உள்ள அணியில் புஜாராவைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள், உள்ளூர்ப் போட்டிகளில் ஆடுவதே இல்லை, அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை.
டெஸ்ட் அணியில் ஆடும் வீரர்கள், பெரும்பாலும் 3 போட்டிகளிலும் ஆடும் வீரர்களாகவே உள்ளனர். அவர்கள் வருடத்தில், 300 நாட்களும் சர்வதேச போட்டிகளில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ளூர்ப் போட்டிகளில் அதிகளவில் சவாலான சூழ்நிலையில் விளையாடினால் மட்டுமே, இங்கு சிறப்பாகச் செயல்பட முடியும். அதைத்தான் ஆஸ்திரேலியா செய்து கொண்டிருக்கிறது. அங்கு ஸ்டீவ் ஸ்மித் முதல் ஸ்டார்க் வரை அனைவரும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நாம் விராட் கோலி, ரோஹித் ஷர்மா எல்லாம் டெஸ்ட் போட்டிகளில் ஆடிப் பார்த்ததே இல்லை. அதைத்தான் கவாஸ்கரும் வலியுறுத்துகிறார். அதிகமாக உள்ளூர்ப் போட்டிகளில் ஆடுங்கள் என்று தொடர்ந்து சொல்கிறார்.
ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்தில் வைத்து நடைபெற்ற ஆஷஸ் போட்டியில், முதல் நாள் ஆட்டத்தில், 8 விக்கெட்டுகள் எடுத்தபோது, பிட்ச் மோசமாக உள்ளது என்ற குற்றச்சாட்டை யாரும் வைக்கவில்லை. அனைவரும் அற்புதமான ஸ்விங் பௌலிங் என்றுதான் வர்ணித்தார்கள். அதே முதல் நாள் ஆட்டத்தில், இங்கு அக்ஸர் பட்டேல் 6 விக்கெட் ஹால் எடுக்கிறார். அனைவரும் பிட்ச் மோசம் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.
பிட்சை திட்டுவதைவிட்டுவிட்டு பிரச்னையின் ஆணிவேர் என்ன என்பதைப்புரிந்துகொண்டு, அதைச் சரி செய்தால் மட்டுமே, இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
source https://sports.vikatan.com/cricket/what-went-wrong-in-ahmedabads-pink-ball-test
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக