Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

`டூல் கிட்’ வழக்கு... திஷா ரவி கைது ஏன்?; டெல்லி போலீஸின் குற்றச்சாட்டுகள்! - என்ன நடந்தது?

டெல்லி நீதிமன்றம் 21 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான கல்லூரி மாணவி திஷா ரவியை, ஐந்து நாள் டெல்லி போலீஸ் சிறப்பு காவலில் வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு அமெரிக்கப் பாப் பாடகி ரிஹானா, கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

கிரெட்டா தன்பெர்க்

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன், பெங்களூருவைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயதான கல்லூரி மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர், போராட்டங்கள் நடத்தும்போதும், அதில் பங்கேற்பவர்கள் செய்யவேண்டியவை குறித்து வெளியிடப்படும் ஆவணமான 'டூல்கிட்' உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்குப் பகிர்ந்த குற்றத்திற்காக திஷா ரவியைக் கைது செய்தனர்.

பிப்ரவரி 4-ம் தேதி`டூல்கிட்’ உருவாக்கியவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைது பற்றிய செய்தி வெளிவந்தவுடன், இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆதரவு குரல்கள் பெருகி வருகிறது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திஷா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்துக் கொண்டே, பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். `ஃபிரைடே பார் ஃபியூச்சர்’ (Friday for Future) என்ற பெயரில் செயல்படும் போராட்டக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். வீட்டிலிருந்தபடி வேலை பார்த்து வந்த இவர், சமூக வலைதளம் வாயிலாகப் பலரிடம் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கிளர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

சர்ச்சை ஏற்படுத்திய 'டூல்கிட்' :

கிரெட்டா தன்பர்க் தன் ட்வீட்டர் பக்கத்தில் 'டூல்கிட்' ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், இந்தியாவில் களத்தில் உள்ள மக்களால் இந்த டூல்கிட் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பின்பு அதை ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

திஷா ரவி

பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவான பதிவுகள் மூலம் ட்விட்டர் டிரெண்டிங்கை ஏற்படுத்துவது, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகைப்படம், காணொலிகளை வெளியிடுவது ஆகியவை கிரெட்டாவின் டூல்கிட்டில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு எதிராகச் செயல்படுவது, அரசு அதிகாரிகள் மற்றும் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைப்பது, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அவரவர் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள இந்தியத் தூதரகம், ஊடக நிறுவனம் அல்லது உள்ளூர் அரசு அலுவலகம் ஆகியவற்றின் அருகே போராட்டம் நடத்துவது உள்ளிட்டவையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்த டூல்கிட் இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட விரும்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி என்றும் கிரேட்டா தன்பர்க், தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தைத் தூண்டும் சதித் திட்டத்தில் ஈடுபட்டார் என்றும் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

திஷா ரவி கைது ஏன்?

இந்நிலையில், திஷா ரவி வன்முறையைத் தூண்டிவிடுவதாக டெல்லி காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். திஷா ரவி இந்த டூல்கிட்டை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார் என்றும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் ஆதரவு `பொயட்டிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன்' எனும் அமைப்புடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைப் பரப்பும் வகையில் திஷா செயல்பட்டார் என்றும் டெல்லி காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

திஷா ரவி

திஷா ரவியைக் கைது செய்த டெல்லி போலீஸார், அவரை டெல்லி அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். காலிஸ்தான் அமைப்புடன் திஷாவிற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறிய போலீஸார், 21 நாள் காவலில் விசாரணை நடத்த அனுமதி கோரினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேவ் சரோகா அமர்வு திஷாவை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்துள்ளது. திஷாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திஷா, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களில் 2 வரிகளை மட்டுமே திருத்தி, மற்றவர்களுக்கு அனுப்பியதாக நீதிபதியிடம் அழுதபடியே தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.

திஷா ரவி மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தியத் தண்டனை சட்டம் (ஐ.பி.சி பிரிவு 124 ஏ) தேசத்துரோகம், கலவரத்தைத் தூண்டும் நோக்கம் (பிரிவு 153) தவிர, மதம், பிறந்த இடம், இனம் மற்றும் மொழி (153 ஏ) மற்றும் குற்றவியல் சதி (120 பி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்பெர்க்கால் ஆதரிக்கப்படும் `ஃபிரைடே பார் ஃபியூச்சர்' என்ற சுற்றுச்சூழல் பிரசாரத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவரான திஷாவைக் கைது செய்ய டெல்லியிலிருந்து ஐந்து பேர் கொண்ட சைபர் போலீஸ் குழு பெங்களூரு வருவது குறித்து எந்த முன் தகவலும் இல்லை என்று பெங்களூரு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



source https://www.vikatan.com/social-affairs/controversy/climate-activist-disha-ravi-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக