சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனை முதலமைச்சராக்குவது என்று செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று செய்தியாளார்களிடம் பேசிய சசிகலா, ”அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து, ஆட்சியைப் பிடிப்போம்” என்றார். இந்நிலையில் இன்று அ.ம.மு.க செயற்குழு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளான.
கவனிக்கத் தக்க தீர்மானங்கள்:
உண்மையான அம்மா ஆட்சி:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி தான் நடைபெறுகிறது என்பதே அ.தி.மு.க-வினரின் கூற்று. ஆனால் இதை மறுக்கும் வகையில் அ.ம.மு.க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அதில், “ அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் நிறுவதற்கும், கூட்டணி உள்ளிட்ட தேர்தல் முடிவுகளை எடுப்பதற்கும், டி.டி.வி தினகரனுக்கு அதிகாரம் வழங்குகிறோம்.” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீய சக்திகள் :
அ.ம.மு.க தீர்மான அறிக்கையில் தமிழகத்தின் தீய சக்தி தி.மு.க என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க குறித்த அந்த தீர்மானத்தில், “ தீய சக்திகள் அதிகாரத்தை அடைவதற்கும் தமிழகத்தை சுரண்டுவதற்கும் வகுக்கும் வியூகங்கள் அனைத்தும் முறியடிக்கபப்ட வேண்டும். கடந்த கால தி.மு.க ஆட்சி தமிழகத்திற்கு பெரும் பின்னடைவை கொடுத்தது என்று எல்லோர்க்கும் தெரியும்.
ஆட்சியில் இல்லாத போதே, மக்கள் மீது தாக்குதல், வணிகர்கள் மீது தாக்குதல், பெண்ணினத்தை பற்றி அவதூறான பேச்சு என, தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலான தீய சக்தி கூட்டத்திடமிருந்து தமிழகத்தை காக்க வேண்டிய பெரும் கடமை அ.ம.மு.க-வுக்கு உண்டு என்பதை உணார்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அரியணையில் தினகரன்:
ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைக்கவும், அ.ம.மு.க என்னும் ஆயுதம் கொண்டு அ.தி.மு.க-வை மீட்கவும், டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க உழைப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/ammk-resolution-to-make-ttv-dhinakaran-cm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக