புதுக்கோட்டை அருகே குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். இங்கு ஒவ்வொரு வருடமும் மாசித் திருவிழா 2 நாள்கள் சிறப்பாக நடைபெறும். இங்கு கோயிலின் முன்பகுதியில் 35 அடி உயரத்தில் குதிரை சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலையாகவும் கருதப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கோயிலின் முன்பு அமைந்துள்ள குதிரை சிலையின் உயரத்துக்கு ஏற்ப சுமார் 3,000-த்துக்கும் மேற்பட்ட பூ மற்றும் காகித மாலைகள் நேர்த்திக்கடனாக அணிவிக்கப்பட்டன.
முன்னதாக 26-ம் தேதி கோயில் சார்பில் முதல் மாலை போடப்பட்டது. தொடர்ந்து, 27-ம் தேதி அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் கார், லாரி போன்ற வாகனங்களில் கோயிலுக்கு வந்து சிலை உயரத்துக்கு ஏற்ப மலர் மற்றும் காகிதப்பூ மாலைகளை அணிவித்துவிட்டுச் சென்றனர். பிளாஸ்டிக் மாலைகளைத் தவிர்க்க வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதையடுத்து, காகித மாலைகளையே அணிவித்தனர்.
விழாவையொட்டி, கடந்த சில மாதங்களுக்கு முன்பே குதிரை சிலைக்கு மாலை கட்டும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில்தான், தற்போது இந்த பிரமாண்ட மாலைகள் குதிரையின் கழுத்தை அலங்கரித்து நிற்கின்றன.
புதுக்கோட்டை மட்டுமன்றி வெளியூரைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாசித்திருவிழாவில் கலந்து கொண்டு அய்யனாரின் அருள் பெற்றுச் சென்றனர். அய்யனார் சந்நிதியில் அன்னதானம் போடுவதாக வேண்டிக் கொண்டவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
source https://www.vikatan.com/spiritual/temples/pudukottai-garlands-piled-up-for-asias-largest-horse-statue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக