கூகுள் மேப்ஸ் ஆப்பிலிருந்தே பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்தும் வசதியை கூகுள் உருவாக்கியுள்ளது. தற்போது அமெரிக்காவில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் இதற்காக பாஸ்போர்ட் மற்றும் பார்க்மொபைல் ஆகிய நிறுவனங்களுடன் கைகோத்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ளாமல் கூகுள் பே மூலமாகப் பயண கட்டணம் அல்லது பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்தலாம்.
கொரோனா வைரஸ் கொடுத்த தர்ம அடியிலிருந்து வல்லரசு நாடுகளே மீள முடியாமல் இருக்கும் நிலையில், பொது இடங்களில் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் இருக்கவும் பயண நேரத்தைக் குறைக்கவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் மேப்ஸ் செயலியிலிருந்தே நேரடியாகக் கூகுள் பேயில் கட்டணம் செலுத்த முடிவதனால் அதிக செயலிகளை உபயோகிக்க வேண்டிய தேவை இல்லை.
கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் பயணங்கள் தடைப்பட்டு கூகுள் மேப் செயலியின் பயன்பாடும் குறைந்தபோது கூட இதேபோல் கோவிட்-19 ரெட்சோன் அலர்ட்ஸ் என்னும் வசதியை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டது கூகுள். இந்நிலையில் தற்போது நேரடி தொடர்பு இல்லாமல் பார்க்கிங் கட்டணம் செலுத்தவும் பொது போக்குவரத்து கட்டணம் செலுத்தவும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வசதியுடன் கூகுள் மேப்ஸ் நாம் செல்லவேண்டிய இடத்தை அடைந்ததும் பார்க்கிங் அறிவிப்பை பாப்-அப் செய்யும். பின்னர் மீட்டர் எண்ணை உள்ளிட்டு நிறுத்த விரும்பும் நேரத்தைக் குறிப்பிட்டு கட்டணத்தைச் செலுத்தலாம். தேவை என்றால் எளிதாக பார்க்கிங் நேரத்தை அதிகரிக்கலாம். இதே போல பொது போக்குவரத்திலும் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தலாம்.
புதிய வசதிகள் முதற்கட்டமாக அமெரிக்காவின் 400 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி வரும் வாரங்களில் ஐஓஎஸ்-யிலும் அறிமுகம் செய்யப்படும். மேலும், இதை 80 நாடுகளில் விரிவுபடுத்தக் கூகுள் 80 போக்குவரத்து நிறுவனங்களுடன் கைகோக்கவுள்ளது.
பயணத்தில் ஏற்படும் அனைத்து செலவுகளையும் அறிந்து திட்டமிட இந்த வசதி உதவும்.
முன்பதிவாகப் பயண கட்டணத்தைச் செலுத்தவும், வசூலிக்கவும் முடிவதால், வசூலிக்கப்படும் கட்டணங்களைக் குழப்பம் இன்றி பரிமாற உதவும். இவ்வகை புதிய வசதிகள் பயனர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இதன் செயல்பாடு எப்படியிருக்கும், வரவேற்பு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. இதற்கு முன்னர், இப்படியான பல சேவைகள் இந்தியாவில் அடியெடுத்து வைத்தாலும் அவை வெகுவாக மக்களைச் சென்றடையப் பல காலம் எடுத்தன. கொரோனா காலத்தில்தான் டிஜிட்டல் இந்தியா வேகமாக வளர்ச்சி பெற்றது. எனவே இது இந்தியாவில் எந்தளவு எடுபடும், நம் கட்டமைப்புகளுக்கு இது ஏதுவாக இருக்குமா என்பது விவாதத்துக்கு உட்பட்டதே!
source https://www.vikatan.com/technology/tech-news/google-maps-new-feature-allows-you-to-pay-for-parking-and-tickets
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக