Ad

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள்; பா.ம.க கூட்டணி அறிவிப்பு! -தேர்தல் அறிவிப்பும் அதிரடிகளும்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு தமிழகம் வந்திருந்த போது தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்திருந்தது. அதில் பொதுவாக பெரும்பாலான கட்சிகளும் ஏப்ரல் மாதம் 3 -வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன.

தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

ஆனால் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6 -ம் தேதி வாக்குப்பதிவு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சிகள் தங்கல் பணிகளை துரிதப் படுத்தியுள்ளது. நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற சில அரசியல் சம்பவங்களின் தொகுப்பு...

தி.மு.க கூட்டணி:

திமுக அறிவிப்பு

*சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருந்த தி.மு.க மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``தேர்தல் ஆணையத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 7-ம் தேதி நடைபெற இருந்த தி.மு.க பொதுக்குழு கூட்டமும், மார்ச் 14-ம் தேதி திருச்சியில் நடந்த மாநில மாநாடும் ஒத்திவைக்கப்படுகிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Also Read: Live Updates: `தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு; மே 2-ல் ரிசல்ட் !’ - சுனில் அரோரா #Election2021

* மற்றொருபுறம் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் வேகம் எடுத்துள்ளது. தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட தி.மு.க, டி ஆர் பாலு தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில் கே.என் நேரு, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கும் நிலையில் அது விரைந்து இறுதி செய்யப்படும் பணிகளையும் தி.மு.க துரிதப்படுத்தியுள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழு

*தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தி.மு.க கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியதாக ரவி பச்சமுத்து தெரிவித்திருக்கிறார். தி.மு.க கூட்டணியில் தங்கள் கட்சிக்கு கௌரவம் கிடைத்ததாகவும், தி.மு.க மிகச்சிறந்த கட்சி என்றும் குறிப்பிட்ட ரவி பச்சமுத்து, தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

ராகுல் காந்தி

*தி.மு.க கூட்டணியில் தற்போது வரை இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வரும் ராகுல் காந்தி, மூன்று நாள்கள் தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி என தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ராகுல் காந்தி வருகை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டது குறிப்பிடதக்கது,.

அ.தி.மு.க கூட்டணி:

*பா.ம.கவின் நீண்ட நாள் கோரிக்கையான வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி பேசுகையில், ``வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ராமதாஸுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி. இந்த அறிவிப்புக்காக முதல்வர் பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து ராமதாஸ் நாளை(இன்று) அறிவிப்பார்” எனத் தெரிவித்தார். அ.தி.மு.க கூட்டணியில் 28-34 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வருடன் அன்புமணி
துணை முதல்வருடன் அன்புமணி

*பா.ம.கவை தொடர்ந்து பா.ஜ.க-வும் அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்தாத காரணத்தால் அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக சரத் குமார் தெரிவித்தார்.

*அ.தி.மு.க கூட்டணியில் இடம்பிடித்துள்ள பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். 2 நாள் பயணமாக தமிழ்கம் வரும் அவர், இன்று இரவு 10 மணிக்கு சென்னை வர உள்ளார். தொடர்ந்து நாளை காரைக்கால் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் சென்னை வடபழனியில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தங்கள் கட்சிகள் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் எனத் தெரிவித்தனர். மேலும் சரத்குமார் பேசுகையில், ``மக்கள் சேவை என்ற கொள்கையில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கிறேன்” என்றார். மாற்றத்துக்கான முதல் கூட்டணி என்று குறிப்பிட்ட அவர் ரஜினி மக்கள் மன்றத்தினரும் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கமல்

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், இன்னும் கூட்டணி தொடர்பான உறுதியான நிலைபாட்டை எடுக்காத அல்லது அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிடாத மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க, அ.ம.மு.க போன்ற கட்சிகளும் உறுதியான முடிவை எடுக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.



source https://www.vikatan.com/news/election/tn-election-date-announcement-and-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக