மகாராஷ்டிரா வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட்-க்கு, டிக் டாக் நடிகை பூஜா சவான் தற்கொலையில் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. மேலும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் விசாரணை முடியும் முன்பு ராஜினாமா செய்யமாட்டார் என்று சிவசேனா தெரிவித்து வந்தது. திங்கள்கிழமை(இன்று) மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. சஞ்சய் ரத்தோட் ராஜினாமா செய்யவில்லையெனில் சட்டமன்றத்தை நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று பா.ஜ.க எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து நேற்று சஞ்சய் ரத்தோட் தனது மனைவியுடன் சென்று முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாநில அமைச்சர் அனில் தேசாய், அனில் பரப் ஆகியோரும் உடனிருந்தனர். இச்சந்திப்பின் போது சஞ்சய் ரத்தோட் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை கொடுத்தார். இச்சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் ரத்தோட், ``விசாரணை நியாயமான முறையில் நடைபெறவேண்டும். அதன் மூலம் உண்மை வெளியில் வரும். எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என்று எச்சரித்தனர். எனவேதான் நானே இதில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்துள்ளேன். நியாயமான விசாரணை நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன். பா.ஜ.க எனது அரசியல் வாழ்வை அழிக்க பார்க்கிறது. கடந்த 30 ஆண்டுகால அரசியலை எதிர்க்கட்சிகள் அழிக்கின்றன. நியாயமான விசாரணையின் மூலம் உண்மை வெளியில் வரும். பூஜா சவான் தற்கொலையில் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது” என்று தெரிவித்தார்.
என்ன நடந்தது?
பீட் பகுதியை சேர்ந்த பூஜா சவான் என்பவர் சமுக வலைத்தளத்தில் மிகவும் பிரபலம். டிக் டாக் வீடியோ மூலம் பிரபலம் அடைந்தார். இம்மாத தொடக்கத்தில் பீட் நகரில் இருந்து ஆங்கிலம் பேசுவதற்கு கற்றுக்கொள்வதற்காக புனே வந்தார். ஆனால் கடந்த மாதம் 8-ம் தேதி அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இத்தற்கொலையில் அமைச்சர் சஞ்சய் ரத்தோட்-க்கு தொடர்பு இருப்பதாக ஆடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து சஞ்சய் ரத்தோட் ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க கோரிக்கை விடுத்தது. ஆனால் விசாரணை முடியும் முன்பு இது குறித்து முடிவு செய்ய முடியாது என்று சிவசேனா தெரிவித்து வந்தது. புனே பா.ஜ.க மகளிர் அணித்தலைவி அர்ச்சனா பாட்டீல், புனே மாநகர கமிஷனர் அமிதாப் குப்தாவை சந்தித்து பூஜா சவான் தற்கொலை குறித்து முழுமையாக விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பூஜாவின் பெற்றோர் தங்களது மகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் போலீஸார் விபத்து மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/politics/tik-tok-actress-commits-suicide-shiv-sena-minister-resigns
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக