2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் ஆரம்பித்து, உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 எனும் பெருந்தொற்று, இந்தியாவிலும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. நம் தமிழகத்திலும் இதன் தாக்கம் மிக அதிகமாகவே காணப்பட்டு வந்தது.
அதே நேரத்தில், இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் நோய்த்தடுப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறை உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டபின் வரும் மரணம் பற்றிய மருத்துவ உண்மை என்ன?
இந்தியாவில் தற்போது ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் `கோவிஷீல்டு' மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் `கோவாக்சின்' என இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கேரளாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பல் மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து இறந்தது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள மாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மிதா மோகன், கண்ணூர் மாவட்டம் பரியாரம் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பல் மருத்துவம் படித்து வந்தார்.
கடந்த வாரம் மிதாவுக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்டு சில தினங்களில் இவருக்கு தலைவலி, வாந்தி, உடல்சோர்வு இருந்துவந்து, பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது அறியப்பட்டு இருக்கிறது.
இதில் நாம் அறிய வேண்டிய ஓர் உண்மை, இது தடுப்பூசி போட்டுக்கொண்டதால் வந்த விளைவு அல்ல. மாறாக, கேரளாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதுவும் இறந்தவர் பல் மருத்துவ மாணவி. பொதுவாக, பல் மருத்துவ நிபுணர்களுக்கு Droplet infection எனப்படும் தொற்று, நோயாளிகளிடம் இருந்து அதிகமாகப் பரவிட வாய்ப்பு உண்டு. இதை, `நோசோகோமியல் தொற்று (nosocomial infection)' என்போம். அதாவது, நோயாளிகளால் தொற்று பரவிய மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் கிடைக்கப்பெறும் தொற்று எனப் பொருள். இந்த வகையான தொற்று மூலம் சாதாரண சளி, இருமல், வைரஸ் காய்ச்சல் வந்து மறையலாம், சிலருக்கு டிபி எனப்படும் காசநோய்கூட தொற்றலாம்.
காரணம், நோயாளிகளுடைய பற்களை பரிசோதித்து மருத்துவர்கள் சிகிச்சையளிக்கும் நேரத்தில் அவர்களது வாய்ப் பகுதிக்கு அருகில் பணிபுரிவதால், உமிழ்தொற்று எளிதாக இவர்களுக்கு ஏற்படும். மேலும், கொரோனாவுக்கு உமிழ்தொற்று அதிக வாய்ப்பை ஏற்படுத்தும்.
இதுபோன்ற மிக அதிகமான வைரல் லோடு (Viral load) தொற்றுகளுக்கு வாய்ப்புள்ள பல் மருத்துவர்கள் போன்றவர்களுக்கு, தடுப்பூசி போட்டாலும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி இயற்கையாக ஏற்படும் `Natural Infection'தான் இந்தப் பல் மருத்துவ மாணவிக்கும் வந்திருக்கக்கூடும்.
தடுப்பூசியைப் பொறுத்தவரை, தற்போது நமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் இரண்டு தடுப்பூசிகளும், 2 தவணைகள் போடப்பட வேண்டிய ஊசிகள்.
Also Read: #COVID19 தடுப்பூசி: யார் போடலாம், எப்போது ஆன்டிபாடி உருவாகும்... விடையளிக்கிறார் மருத்துவர்! #FAQ
முதல் தவணை போட்டுக்கொண்ட பின்னர், 28 நாளில் இருந்து 8 வாரத்துக்குள் அடுத்த பூஸ்டர் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசிக்கான நோய் எதிர்ப்பு ஆக்கம் உருவாகி வரும் வேளையில் அடுத்த பூஸ்டர் சரியான தருணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் எதிர்ப்பாற்றல் செல்கள் இயக்கம் மேலும் வலுப்பெற்று, நம் உடலில் செலுத்தப்பட்ட தீநுண்ம மாதிரியை முறையாகக் கையாளும் எதிர்ப்பாற்றல் ஆன்டிபாடிகளை (Neutralising Antibodies) அதிகமாக உருவாக்கி, நம் உடல் இயக்கத்துக்குள் தயாராக வைத்துக்கொள்ளும்.
ஆனால், இந்த 2 தவணை கால இடைவெளிக்கு இடையில் நமக்கு இயற்கையாகத் தொற்று ஏற்பட்டுவிட்டால், சிலருக்கு அது மோசமான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அப்படிப் பாதிக்கப்பட்ட ஒருவராகத்தான் இந்த மருத்துவ மாணவியும் இருந்திருக்கக்கூடும்.
அதே நேரத்தில், நமக்கான 2 தவணை தடுப்பூசியும் முழுமையாகக் கிடைக்கப்பெற்று, அவற்றை சரியான கால இடைவெளியில் போட்டுக்கொண்டு, நமக்கு முழுமைபெற்ற எதிர்ப்பாற்றல் வரும் வரை நாம் எச்சரிக்கையுடன் இருந்து விட்டோமானால்... அதற்குப் பின் நமக்கு வரும் தொற்று நிச்சயமாக நம்மை பெரிதும் தாக்கிடாது பாதுகாத்திடலாம்.
இரண்டாம் அலை வருமா?
கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை, 2020 நவம்பர் மாதம் ஒரு வாரம் மட்டும் சிறிது ஏற்றத்தைக் கண்டு, மீண்டும் குறைந்தே வந்தது. ஆனால், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இருந்து நாட்டிலேயே மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. தற்போது மகாராஷ்டிராவுடன் சேர்ந்து மத்தியபிரதேசம், பஞ்சாப், சண்டிகர், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொற்று பெற்றவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது.
இதன் விளைவாக, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் ரூபாய் 200 விதிக்கப்படுகிறது. மும்பை பெருநகரில் ஐந்து தொற்றாளர்களுக்கு மேல் கண்டறியப்படும் பல கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், மகாராஷ்டிராவில் அமராவதி மாவட்டத்தில் அடுத்த ஒரு வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் மாநகரில் மார்ச் 21 வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
Also Read: `இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் ஏன்?' - விளக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன்
கர்நாடகா தனது மாநிலத்துக்குள் வருபவர்களிடம் தொற்று இல்லை என்பதை உறுதிசெய்வதற்கான நெகட்டிவ் ரிப்போர்ட் கேட்கத் தொடங்கிவிட்டது. தமிழ்நாடு தனது கேரள எல்லைப் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அமைத்துள்ளது.
இந்தியாவில் உயர்ந்து வரும் இந்தத் தொற்றாளர் எண்ணிக்கை கொண்ட மாநிலங்களின் பட்டியல் மெல்ல விரிவடைந்து கொண்டே வருவதைக் காண முடிகிறது.
அமெரிக்கா மூன்று அலைகளைச் சந்தித்து, முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர், வியட்நாம் போரில்கூட சந்திக்காத அளவு உயிரிழப்புகளை இந்த ஒரே வருடத்தில் சந்தித்து வருகின்றது.
ஐரோப்பா இரண்டாம் அலையில், முதல் அலையைவிட அதிக இழப்பை சந்தித்திருக்கிறது. இந்தியாவில் தொற்றின் எண்ணிக்கையில் காணப்படும் உயர்வு, இரண்டாம் அலையை நோக்கி நாம் செல்வதைக் காட்டுவதாகவே தெரிகிறது.
ஆனால், நம் நாட்டின் சீதோஷண நிலை மாறுதல்களாலும், வெயில் காலம் நெருங்கி வருவதாலும், இந்த இரண்டாம் அலையானது முந்தைய பெருந்தொற்றுபோல இருக்க வாய்ப்புகள் குறைவுதான். என்றாலும், ஆங்காங்கே சின்னச் சின்ன தொற்று குழுவிடங்கள் வர வாய்ப்பு மிகுதி. அது மாநிலம், மாவட்டம், நகரம், ஒரு சின்ன இருப்பிடம் என எப்படி வேண்டுமானாலும் இருக்கக்கூடும். அதிகமாக மக்கள் கூடும் இடங்கள், சமுதாயக் கூடங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், திரையரங்குகள், விருந்து வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள், சுய கவனம், தனிமனித இடைவெளி, முகக் கவசம் ஆகியவையெல்லாம் உயிர் காக்கும் கவசங்கள் என்பதை உணர வேண்டும்.
ரிவர்ஸ் க்வாரன்டீனின் அவசியம்?
நோய்த்தாக்கத்துக்கு அதிக வாய்ப்புள்ள மூத்த குடிமக்கள், நீரிழிவு மற்றும் இதர வாழ்நாள் நோயுடையவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைக் கட்டுப்படுத்திடும் ரிவர்ஸ் க்வாரன்டீன் (Reverse Quarantine) அவசியமான ஒன்றாகிறது.
Also Read: `உலகப்போர் மரணங்களைவிட, அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் அதிகம்!’ - ஜோ பைடன் உருக்கம்
தற்சமயம் தேர்தல் நெருங்கி வருவதால் இன்னும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அரசுக்கு இருக்கும் பொறுப்பு போலவே ஒவ்வொரு தனிமனிதனும் சுயநலம் பாராது பொதுநல சிந்தனையுடன் செயல்படுவது சிறந்தது.
அடுத்த லாக்டௌன் சாத்தியமா?
ஆறறிவு கொண்ட நாம், லாக்டௌன் இன்றியும் தொற்று பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம் என்றே நான் நினைக்கிறேன். கோவிட்-19 நோய் பற்றியும், அதன் அறிகுறிகள், தற்காப்பு விபரங்கள் குறித்தும், சுகாதாரத்துறையின் பரப்புரை மற்றும் ஊடக விழிப்புணர்வு செய்திகளால் பாமர மக்கள் வரை இப்போது சென்று சேர்ந்திருக்கிறது.
அடுத்த அலை பற்றிய செய்தியை சற்றே முன்னெச்சரிக்கை முனைப்போடு அரசு அறிவிப்பு செய்தால், அதை உணர்ந்து நாம் எச்சரிக்கையாக இருந்துகொண்டால், அதை அரசு சரியாக மேற்பார்வை செய்துவிட்டால் போதுமானது.
தடுப்பூசி கொடுப்பதையும் விரைவாகச் செய்து, அடுத்தடுத்த பாதிப்பைக் குறைத்துவிட்டால் நிச்சயமாக ஊரடங்கு எனும் லாக்டௌனின் தேவை இருக்காது.
ஒரு பெருந்தொற்றைக் கடந்து வந்துகொண்டிருக்கும் நாம், அடுத்த அலையில் மாறுபட்ட வைரஸின் புதிய அறிகுறிகளையும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
Also Read: ஏன் இந்த 3 கொரோனா வேரியன்ட்கள் மட்டும் ஆபத்தானவையாக இருக்கின்றன? - விளக்கும் மருத்துவர்
உருமாறிய கோவிட்-19-க்கான அறிகுறிகள் என்னென்ன?
பழைய கோவிட்-19-க்கான அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, ருசி / வாசம் அறியாமை போன்ற அறிகுறிகள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இவற்றுடன் உருமாறிய தீநுண்மத்தின் அறிகுறிகளாக...
- கண் நோய்
- தோல் பாதிப்பு
- நகம், விரல் நிற மாற்றம்
- தலைவலி
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- பார்வைக் குறைபாடு
போன்றவையும் இருக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
ஆனால், அது பரவும் விதம் மட்டும் எந்த மாறுதல்களுக்கும் உட்படவில்லை என்பது நன்மையாகும். எனவே முகக்கவசம், தனிமனித விலகல், கை சுத்தம், ஆரம்ப நோய்நிலை அறிதல், தடுப்பூசி போட தயாராவது என மேற்கூறிய 5 நோய்த்தடுப்பு முறைகளை சரியாகப் பின்பற்றி, அடுத்தகட்ட நோய் அச்சுறுத்தலில் இருந்து எளிதாக மீள முயல்வோம்.
source https://www.vikatan.com/health/healthy/an-analysis-on-indias-current-covid-19-pandemic-situation-and-its-challenges
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக