Ad

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

``அஞ்சு வருஷமா அலையுறோம்... வேலை கிடைக்கல..!'' - தவிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

புதுக்கோட்டை, இணை இயக்குநர் அலுவலகத்தில் அம்மா மினி கிளினிக் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக, ஒரு கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. அந்தக் கூட்டத்துக்கு இடையே கம்பு ஒன்றை ஊன்றியவாறு, சிரமத்துடன் மாடிப்படி ஏறிக்கொண்டிருந்தார் மாற்றுத்திறனாளி சித்ரா தேவி. அங்கு நின்ற ஒருவர், ``இது மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இல்லம்மா, அம்மா மினி கிளினிக் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறாங்கம்மா" என்றார்.

``தெரியுமுங்க, தெரிஞ்சுதான் வந்திருக்கேன்" என்று கூறியவர் மாடிப்படி ஏறி வரிசையின் கடைசியில் போய் நின்றார். அவரை பின்தொடர்ந்து, கையால் காலைத் தாங்கியபடி மெல்ல, மெல்ல படியில் ஏறிவந்தார் மாற்றுத்திறனாளியான அவரின் கணவர் ரமேஷ்.

சித்ரா தேவியும் ரமேஷும் மாற்றுத்திறனாளி தம்பதி. சித்ரா தேவியின் அருகே சென்ற ரமேஷ், தன் கையில் வைத்திருந்த சான்றிதழ்களை அவருடைய கையில் கொடுத்து, `கண்டிப்பா இந்த முறை வேலை கிடைச்சிடும்' என்று கூறி, சோர்ந்து போயிருந்த சித்ரா தேவிக்கு நம்பிக்கையூட்டினார்.

எம்.காம், டேலி (Tally) படித்திருக்கும் சித்ரா தேவி பல்வேறு அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தும் இதுவரையிலும் வேலை கிடைக்கவில்லை. வறுமையில் தவித்தாலும் மனம் தளராத சித்ரா தேவி, என்றாவது ஒரு நாள் தனக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், மாற்றுத்திறனாளி கணவரின் துணையுடன் வேலைக்காகத் தினமும் ஒவ்வோர் அலுவலகமாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்.

அம்மா மினி கிளினிக் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்த சித்ரா தேவியிடம் பேசினோம்.

``நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் புதுக்கோட்டை பக்கத்துல பெருமாநாடு. கட்டிக்கிட்டுப்போனது இலுப்பூர் பக்கத்துல வீரப்பட்டி. ஒரு வயசு இருக்கும்போதே போலியோ பாதிச்சு, வலது கால் செயலிழந்து போச்சு. ஆரம்பத்துல எல்லாத்துக்கும் அம்மாதான் தூக்கிக்கிட்டு போவாங்க.

அதுக்கப்புறம் கொஞ்சம், கொஞ்சம் தவழ்ந்து என்னோட வேலைகளை நானே பண்ணிக்கிட்டேன். எட்டாவது வரைக்கும் கிராமத்துலேயே படிச்சேன். அதுக்கப்புறம் படிக்க புதுக்கோட்டை போயிட்டு வரணும்ங்கிற சூழ்நிலை வந்திருச்சு. பஸ்லதான் போயிட்டு வரணும்.

நடக்கவே முடியாத புள்ளைய ஸ்கூலுக்கு எல்லாம் அனுப்ப வேண்டாம்னு சொந்தக்காரங்க அம்மாகிட்ட சொல்லிட்டாங்க. எனக்கு படிப்பு மேல ஆர்வம். அதனால, நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல படிக்கணும்னு வைராக்கியமா இருந்தேன். கிட்டத்தட்ட நாலு வருஷம் கஷ்டப்பட்டாலும், நெனச்ச மாதிரி ப்ளஸ் டூ வரை முடிச்சு நல்ல மார்க் எடுத்தேன். ஒரு பக்கம் பணப் பிரச்னை, மறுபக்கம் தீடீர்னு எனக்கு உடல்நிலை சரியில்லாம போக, கல்லூரியில படிக்க முடியாம போச்சு. வீட்டுலேயே முடங்கிக் கிடந்தேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம், வீட்டுக்குப் பக்கத்துலேயே ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில டீச்சர் வேலை இருக்கிறதா தோழி சொல்ல, ஆர்வமா பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க ஸ்கூலுக்குக் கிளம்பினேன்.

கிட்டத்தட்ட 12 வருஷம் அங்க பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன். அந்த ஸ்கூல் நிர்வாகம் எனக்கு ரொம்பவே ஊக்கம் கொடுத்தாங்க. அந்த ஸ்கூல்ல வேலை பார்க்கும்போதே மேற்படிப்பு ஆசையை நிறைவேற்றிக்கிட்டேன். கரஸ்ல மொதல்ல பி.காம் படிச்சேன். அதுக்கப்புறம் எம்.காம் முடிச்சேன். எம்.காம் முடிச்சிட்டு டேலி படிச்சேன்.

எப்படியாவது எனக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சுப்புடணும்னு அம்மாவுக்கு ஆசை. கல்யாணம் வேணாம்னுதான் நான் நெனச்சேன். அம்மா, அப்பா சந்தோஷத்துக்காக ஒத்துக்கிட்டேன். அவரும் மாற்றுத்திறனாளிதான்னு சொன்னாங்க. ரெண்டு
பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்க முடியும்னு ஓகே சொல்லிட்டேன். 2015-ல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கஷ்டம் இருந்தாலும், கணவர் நல்லாவே பார்த்துக்கிறாரு.

எங்களுக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க இருக்காங்க. திருமணத்துக்கு அப்புறம் ஸ்கூல் வேலையிலிருந்து நிற்க வேண்டிய சூழல் உண்டாச்சு. ரெண்டு பேருக்கும் கிடைக்கிற 1,000 ரூபாய் உதவித்தொகையை வெச்சுதான் வாழ்க்கைய நகர்த்துறோம். பிள்ளைங்க பிறந்ததுக்கு அப்புறம் தேவைகள் அதிகமாகிருச்சு. உதவித் தொகையை மட்டும் வெச்சு குடும்பத்தை ஓட்ட முடியாத நிலை. பெத்தவங்களை நம்பியே எத்தனை நாள் இருக்கிறது? எங்கள்ல யாராவது ஒருத்தர் சம்பாதிச்சே ஆகணும்ங்கிற கட்டாயம் வந்திருச்சு.

அவரு எட்டாம் வகுப்புதான் படிச்சிருக்காரு. நான் டிகிரி வரைக்கும் படிச்சிருக்கேன். படிச்ச படிப்புக்கு ஒரு அரசு வேலை கிடைச்சா போதும். பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வந்துடலாம்னு சத்துணவு வேலை, ரேஷன் கடை, சேல்ஸ்மேன் வேலை, கால்நடை ஆய்வக உதவியாளர் வேலைன்னு எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பிச்சேன். எந்த வேலையும் கிடைக்கல.

அரசு வேலைதான்னு இல்ல, தனியார் வேலையும்கூட கிடைக்கல. இதுக்கிடையில குடும்பத்தையும், குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு குரூப் 2, குரூப் 4 எக்ஸாமும் எழுதினேன். ஆனாலும் பலனில்ல.

முன்னாடியாவது, சின்னச் சின்ன வேலைகளை செஞ்சு வீட்டுக்காரரு கொஞ்சம் பணம் கொடுப்பாரு. கொரோனாவுக்கு அப்புறம் அதுவும் சுத்தமா இல்லாம போச்சு. சாப்பாட்டுக்கே சிரமம். அந்த நேரத்துலதான், பக்கத்துல பனியன் கம்பெனி வேலைக்குப் போனேன். பனியன் மடிக்கிற வேலைதான். உழைக்கணும்னு ஆசை இருக்கு. ஆனாலும், தொடர்ச்சியா ஒரே இடத்துல இருந்து அந்த வேலையைப் பார்க்க உடம்பு ஒத்துழைக்கல. ரெண்டு மாசம் பல்லை கடிச்சிட்டு வேலைக்குப் போய் பார்த்தேன். அதுக்கப்புறம் முடியல.

கடினமான வேலையும் பார்க்க முடியல, படிச்ச படிப்புக்கும் வேலை இல்ல. சின்னதா ஒரு பெட்டிக்கடை வெச்சு பிழைக்கலாம்னு மானியத்துல ஒரு லட்சம் லோனுக்கு மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலகத்துக்கு ஏறி இறங்கி 15 லெட்டர் வாங்கி பேங்குல கொடுத்தேன். அந்தப் பணமும் கிடைக்கல.

நாங்க ரெண்டு பேருமே மாற்றுத்திறனாளிகளா இருந்தும், உதவித்தொகையைத் தவிர்த்து வேற எந்தச் சலுகையும் கிடைக்கல. ஒவ்வொரு முறையும் கண்டிப்பா இந்த முறை வேலை கிடைச்சிரும்னு சொல்லி வீட்டுக்காரரு கூட்டிக்கிட்டுப் போறாரு, நானும் விண்ணப்பிக்கிறேன். கடைசியில ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கு" என்று முடித்தார் வேதனையுடன்.

இந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்க்கைக்கு வழி கிடைக்குமா?



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukkottai-disabled-couple-awaits-for-the-job-for-5-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக