புனேவில் ராமன் கைவாட் என்ற விளையாட்டு வீரர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்திலேயே விழுந்து இறந்துபோனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் அருகிலுள்ள நகரில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்று கொண்டிருந்தார் ராமன் கைவாட்.
போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், பௌலர் பந்து வீச எத்தனித்தபோது கையில் பேட்டை பிடித்திருந்தபடியே அப்படியே நிலைகுலைந்து கீழே விழுந்தார். மயங்கி விழுந்தவுடன் மைதானத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அந்த வீரருக்கு வயது வெறும் 25 மட்டுமே.
இப்படி உயிரிழப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தால் பெரும்பாலும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளாகவே இருக்க முடியும். அதிலும் இரண்டு முக்கிய காரணங்கள்தான் நமக்குப் புலப்படுகின்றன. அவை ஒன்று மாரடைப்பு. மற்றொன்று HCM (Hypertrophic cardiomyopathy) எனப்படும் இதயத் தசைகள் பருமன் ஆகும் நோய்.
இளம் வயதில் மாரடைப்பு வரலாம் என்றாலும் விளையாட்டு வீரர்களுக்கென்றே வரும் பிரத்யேக மாரடைப்பு HCM தான். பல விளையாட்டு வீரர்கள் இதனால் இறந்துள்ளனர். இது ஒரு பரம்பரை நோயும்கூட.
மாரடைப்பு:
இக்காலத்தில் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. அதனால் 25 வயதில் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. அப்படி மாரடைப்பு ஏற்பட்டால் வலி இல்லாமலும் சற்று நேரம்கூட உயிருக்குப் போராடாமலும் எப்படி ஒருவர் இறந்து போவார் என்ற கேள்வி எழலாம். அதற்கும் வாய்ப்பு உண்டு.
ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட உடனேயே இதயம் வித்தியாசமாகத் துடித்து அல்லது துடிப்பதை நிறுத்திவிடலாம். இதனால் அதிகம் நேரமில்லாமல் உடனே உயிர் பிரிந்துவிடும். இதனால்தான் மாரடைப்பு வந்தவர்கள் பலர் மருத்துவமனைக்குச் செல்லும் முன்னே இறந்துவிடுகின்றனர்.
அவர்களுக்கு வீட்டிலோ, வெளியிடங்களிலோ மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே மேலை நாடுகளில் உள்ளது போல கரன்ட் ஷாக் வைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் பலரை நம்மால் காப்பாற்ற முடியும். எப்படி அந்த டெக்னிக்கை பயன்படுத்த வேண்டும், எப்படி நெஞ்சுப்பகுதியை அழுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே உண்டாக்க வேண்டும்.
பொது இடங்கள், பூங்காக்கள் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் இந்த ஆட்டோமேட்டிக் ஷாக் கொடுக்கும் கருவியை (Defibrillators) நிறுவ வேண்டும்.
இதயத் தசை பருமன் நோய்:
இதில் இதய சுவர்களின் தசைகள் மிகவும் தடிமனாகிவிடும். பொதுவாக ஓடும்போதோ விளையாடும்போதோ இதயத்தின் சுருங்கும் தன்மை அதிகமாகும். இந்த நோயின் காரணத்தால் இதயத்தில் நடுச்சுவர் அதிகத் தடிமனாவதால் இதயம் சுருங்கி விரியும்போது ரத்தம் இதயத்திலிருந்து வெளியே வருவதில் அடைப்பு ஏற்படலாம்.
அதிகமான தடிமன் இருப்பதால் அதிலிருந்து வித்தியாசமான அசாதாரணமான இதயத்துடிப்புகள் உருவாகி இதயம் நின்று போய்விடக்கூடும். இந்த நோயை வெளியிலிருந்து கண்டுபிடிப்பது கடினம். ஈ.சி.ஜி மற்றும் எக்கோ எடுத்துப் பார்த்தால்தான் தெரியும். ஒருவேளை உயிரிழந்த வீரருக்கு HCM என்று கண்டுபிடிக்கப்பட்டால், இது பரம்பரை நோய் என்பதால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஈ.சி.ஜி மற்றும் எக்கோ எடுத்துப் பார்க்க வேண்டும்.
முன்கூட்டியே இந்த நோயைக் கண்டுபிடித்துவிட்டால் தானாகவே இதயத்துக்கு கரன்ட் ஷாக் கொடுக்கக்கூடிய ஐசிடி (ICD) என்ற கருவியை பேஸ்மேக்கர் பொருத்துவது போல பொருத்திக்கொண்டால் தப்பித்துக்கொள்ளலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் சில பல்கலைக்கழகங்களில் இந்த நோய்க்கென்றே தனி துறையெல்லாம் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நோய் குறித்த விழிப்புணர்வு குறைவுதான்.
- இதய மருத்துவர் திலீபன் செல்வராஜன்
source https://www.vikatan.com/health/healthy/a-cardiologist-explains-how-a-cricketer-died-during-a-cricket-match-due-to-heart-attack
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக