Ad

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

நெல்லை: `பா.ஜ.க - அ.தி.மு.க... தவறான பாதையில் செல்லும் இரட்டை எஞ்சின்!’ - பிருந்தா காரத்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டார்.

லெனின் சிலை அருகே பிருந்தா காரத்

மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பிருந்தா காரத், ”விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வேளாண் சட்டங்களை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத தமிழக அரசு, ஆதரவு கொடுத்தது.

மத்திய அரசு சொல்வதை எல்லாம் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசை எதிர்க்கத் துணிச்சல் இல்லாத அரசு தமிழகத்தில் நடக்கிறது. விவசாய சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளின் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய தமிழகம் வந்த அமித் ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த முடியுமா?

பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதி

தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு எதைச் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. கொரோனா காலத்தில் நாடு முழுவதும் 12 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு 3 பெரும் பணக்காரர்களுக்கு பல்வேறு சலுகைகளைக் கொடுத்ததால் அவர்கள் மட்டும் 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்கிறது. அதனால் சாதாரண மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் சூழலில், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசும் பிருந்தா காரத்

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-வும் இரட்டை என்ஜின் மூலம் இயக்கப்படும் வாகனத்தைப் போலச் செயல்படுகின்றன. அவர்கள் ஒரே பக்கமாக இயங்குவதால் சரியான பாதையில் செல்லவில்லை. இரு கட்சிகளின் ஆட்சியாலும் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை” என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிருந்தா காரத், ``மக்களின் உரிமைகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பறித்து விட்டது. மக்களின் வாழ்வாதாரத்துக்கு மத்திய அரசு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. வேலை வாய்ப்பு முழுமையாக மறுக்கப்படுகிறது.

மாவட்டச் செய்லாளர் கே.ஜி.பாஸ்கரன்

மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகளைப் பொதுமக்கள் அனைவரும் அடையாளம் காணவேண்டும். அந்த அரசுகளை அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அகற்ற வேண்டும். மக்கள் இயக்கம் வலுவடைந்து பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/bjp-and-admk-alliance-parties-are-working-against-common-people-says-brindha-karath

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக