Ad

சனி, 27 பிப்ரவரி, 2021

நாமக்கல்: `கோயிலில் கொள்ளை; காட்டில் பங்கு பிரிப்பு!’ - மொத்தமாக மாட்டிய கொள்ளையர்கள்

கோயில் காவலாளியைத் தாக்கிவிட்டு, கோயில் நகை, உண்டியலை கொள்ளையடித்த கும்பல், காட்டுப்பகுதியில் வைத்து பங்கு பிரித்தபோது, அந்த வழியாக சென்றவர்களிடம் வசமாக மாட்டினர். அதோடு, இந்த கொள்ளைச் சம்பத்தில் ஈடுப்பட்டது மதுரையை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் என்பது, போலீஸாரையும், பொதுமக்களையும் அதிர வைத்திருக்கிறது.

கொள்ளையர்கள்

Also Read: கரூர்: பாதியில் நிற்கும் சாலை; முழுமை பெறாத மைதானம்! - அவசரகதியில் திறக்கப்பட்ட திட்டங்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி சந்தை பகுதியில் இருக்கிறது, சேற்றுக்கால் மாரியம்மன் கோயில். வாரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் மற்றும் விசேஷ தினங்களிலும் இந்த கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த நாள்களில் ஏராளமான பக்தர்கள் இந்த அம்மனை வந்து வழிப்பட்டு செல்வார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கோயிலுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கோயிலில் கொள்ளையடித்த முயன்றிருக்கிறது. அப்போது, அவர்களை தடுத்த, கோயிலுக்கு காவலாக இருந்த காவலாளி கணேசனை தாக்கி, அறைக்குள் வைத்து பூட்டினர்.

பரமத்தி

பின்னர், கோயிலுக்குச் சென்ற அந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அம்மனின் அரை பவுன் பொட்டுத் தாலி, ஒரு கிலோ அளவிலான வெள்ளி கவசம் உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. அறைக்குள் இருந்த கணேசன், நேற்று காலை வெளியில் வந்து கோயில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார். அதோடு, காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த கொள்ளைச் சம்பவத்தை அறிந்த பரமத்தி வேலூர் டி.எஸ்.பி ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உள்ளிட்ட போலீஸார் கோயிலுக்கு விரைந்து வந்தனர். அங்கே விசாரணை நடத்தினர். அம்மன் நகைகளை கொள்ளையடித்தது யார், எப்படி கொள்ளைச் சம்பவம் நடந்தது என்ற கோணத்தில் விசாரணைய தொடர்ந்தனர்.

இதற்கிடையில், அருகில் உள்ள கீரம்பூர் பகுதியில் இருக்கும் காட்டுப்பகுதியில் 3 பேர் பணத்தை குவியலாக கொட்டி, அதனை பங்கு பிரித்துக்கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்துவிட்டு, சந்தேகத்தின் பேரில் அந்த மூன்று பேரையும் விசாரித்தனர். உடனே அவர்கள், 'நாங்க மூணு பேரும் மதுரையை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள். எங்களை காட்டிக்கொடுத்தால், உங்களை சும்மாவிடமாட்டோம். உங்களை கொன்றுவிடுவோம்' என்று மிரட்டியுள்ளனர். அதனால், அந்த கொள்ளையர்கள் மீது கோபமான மக்கள், அவர்களை பிடித்து கடுமையாக தாக்கினர். பின்னர் பரமத்தி போலீஸாரிடம் அவர்கள் மூன்று பேரையும் ஒப்படைத்தனர்.

கொள்ளையர்கள்

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் மூன்று பேரும் மதுரையைச் சேர்ந்த ராஜூ, முருக சூர்யா, கருப்பசாமி என்பது தெரிய வந்தது. இவர்கள் மூவரும் சேர்ந்துதான், பரமத்தி அம்மன் கோயில் காவலாளியை தாக்கிவிட்டு, அம்மன் நகைகளை கொள்ளையடித்தனர் என்பதை கண்டுபிடித்தனர். இவர்கள் மூவரும் மதுரையைச் சேர்ந்த பிரபலக் கொள்ளையர்கள் என்பதும், இவர்கள் மீது பல காவல் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, மூவரிடம் அம்மன் நகையை கைப்பற்றிய போலீஸார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/robberies-caught-after-theft-in-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக