Ad

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

`அமேசான் காட்டில் நிலங்கள் விற்பனைக்கு...'- ஃபேஸ்புக்கில் விளம்பரம்! பின்னணி என்ன?

அமேசான் காடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆம், சரியாகத்தான் படித்தீர்கள். அமேசான் மழைக்காடுகள் விற்பனைக்கு என ஃபேஸ்புக் மார்க்கெட் ப்ளேஸில் (Facebook Marketplace) விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபேஸ்புக் மார்க்கெட் ப்ளேஸ் என்பது நமது பொருட்கள் புதியதோ, பழையதோ அதனை விற்பதற்கான இடம். நமது மொபைலில் இருக்கும் ஃபேஸ்புக் செயலியிலேயே ஒரு பகுதியில் இந்த ஃபேஸ்புக் மார்க்கெட் ப்ளேஸ் இருக்கும். அதில்தான் அமேசான் காடுகள் இருக்கும் இடங்கள் விற்பனைக்கு எனக் குறிப்பிட்டு விளம்பரங்களைப் பதிவேற்றியிருக்கின்றனர்.

அமேசான் காடுகள்

அமேசான் காடுகள் இருக்கும் பகுதியில் இப்படி நடப்பது புதிது அல்ல. இது சட்டவிரோதமாகச் செயல்படும் மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கிறது. உள்ளூர் அரசியல்வாதிகளைக் கையில் போட்டுக் கொண்டு இது போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகின்றனர். காடுகளாக இருக்கும் பகுதிகளை நேரடியாகக் கையகப்படுத்த முடியாது என வித்தியாசமான நடைமுறைப்படுத்துகின்றனர். இதற்கு மறைமுகமாக அங்கு நடைபெறும் பண்ணைத் தொழிலும் உதவிக்கரமாக இருக்கிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் பிரேசில் முதல் மூன்று இடங்களில் இருக்கிறது. மாடுகளை வளர்த்து மாட்டிறைச்சிக் கூடங்களுக்கு அனுப்புவதே அங்குத் தனித் தொழிலாக நடக்கிறது.

முதலில் சட்டவிரோதமாகக் காடுகளில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுகின்றன. பின்னர் மரங்கள் வெட்டப்பட்ட இடங்களை மாடுகளுக்கு மேய்ச்சல் நிலங்களாக உபயோகப்படுத்துகின்றனர். மரங்கள் வெட்டப்பட்ட பின்னர், அந்த இடம் காடுகள் என்ற பட்டியலில் வராது என்ற அடிப்படையில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தயவுடன் அந்த இடங்களை அரசாங்கத்திடம் இருந்து வாங்குகின்றனர், அங்குச் சட்டவிரோதமாக நிலங்களை விற்பவர்கள். இதற்குச் சட்டவிரோதமாக நிலங்களை விற்கும் கும்பல் மட்டுமல்லாது, அங்கே பண்ணைத் தொழில் செய்து வரும் மக்களும் உதவியாக இருக்கின்றனர். அவர்களும் மரங்கள் வெட்டப்படுவதால், அதனை மேய்ச்சல் நிலங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அதனை ஊக்குவிக்கின்றனர்.

Jair Bolsonaro, Brazil President

சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிவதைத் தடுக்க 'IBAMA' என்ற அரசு அமைப்பு இருக்கிறது. ஆனால், தற்போது பிரேசிலின் குடியரசுத் தலைவராக இருக்கும் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) பதவியேற்றதில் இருந்தே அந்த அமைப்பிற்கான நிதி அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுவரை இல்லாத அளவு இவரின் ஆட்சிக்காலத்தில் காடுகள் அழிப்பும், மரங்கள் வெட்டப்படுவதும் 278 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனைப் பற்றிய கேள்விகளுக்கு, "கொரோனா காரணமாக, மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க முடியவில்லை இந்த வருடம் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க சிறப்புத் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்பட இருக்கின்றன" என பதிலளித்துள்ளார் பிரேசிலின் சுற்றுச்சூழல் மந்திரி ரிக்கார்டோ சால்ஸ் (Ricardo Salles).

Also Read: கொரோனாவை உணராத பொல்சானரோ! - தொடரும் அமேஸான் காடழிப்பு

Amazon forests

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட 10-ல் ஒரு உயிரினத்திற்கு அமேசான் மழைக்காடுகள் வாழ்விடமாக இருக்கின்றன. அங்கும் இன்னும் பழங்குடியின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், எதைப் பற்றிய கவலையும் இன்றி அங்கு மரங்கள் சரமாரியாக வெட்டப்பட்டு வருகின்றன. மேலும், அமேசான் நிலங்களை விற்பனைக்கு வைத்த பலரிடம் அந்த நிலங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வமான எந்த ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்திடம் அந்த விளம்பரங்களை நீக்கும் நடவடிக்கை எடுக்கக் கேட்கப்பட்டதற்கு, பொதுவாக எல்லா விளம்பரங்களையும் தங்களால் நீக்க முடியாது என்றும், பிரேசிலின் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

"தினம் தினம் காடுகளை அழிக்கப்படுவதைப் பார்க்க முடியவில்லை. அதிகார வர்க்கமே எங்களுக்கு எதிராக இருக்கிறது. தினமும் காடுகள் சுருங்கிக் கொண்டே செல்கின்றது. இதனைத் தடுக்க முடியாமல் நம்பிக்கை இழந்து இருக்கிறோம். இந்தப் போராட்டம் மிகவும் கடினமாக இருக்கிறது" என அங்குள்ள இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/amazon-forest-listed-for-sale-in-facebook-marketplace

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக