Ad

வியாழன், 25 பிப்ரவரி, 2021

மதுரை: 8,000 அடி உயரம், சூரிய உதயம், சிறந்த தேனீரின் ருசி... குளு குளு கொழுக்குமலைக்கு ஒரு ட்ரிப்!

வளர்ச்சி, வசதி, வர்த்தகம் என்ற பெயரில் இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்கள் அதன் தன்மை மாற்றப்பட்டு செயற்கை முலாம் பூசப்பட்டு வரும் நிலையில், இன்னும் தன் சுயத்தை இழக்காமல் இயற்கையின் அற்புதங்களை தாங்கி நிற்கும் அதிசயமான இடங்கள் மதுரைக்கு அருகில் இருக்கின்றன.

இயற்கையை ரசிக்கவும், நல்ல காற்றை சுவாசிக்கவும், இதற்காக நேரம் அதிகமானாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்களுக்கு பேரின்பத்தை தரும் சுற்றுலாத்தலம்தான் கொழுக்கு மலை!

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கொழுக்குமலை, கடல் மட்டத்திலிருந்து 7900 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கை தன் கருணையை அதிகம் பொழிந்த இம்மலை, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இயற்கையான முறையில் தேயிலை வளரும் தோட்டங்களாக மாற்றப்பட்டது. நம் தொழிலாளர்கள் சிந்திய வியர்வையால் உலகில் சிறந்த தேயிலை விளையும் இடமாக விளங்குகிறது. அன்று முதல் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலாத்தலமாக தற்போது வரை உள்ளது. ஆனாலும் மக்கள் வந்து இயற்கையை ரசித்து செல்ல அனுமதிக்கிறார்கள்.

கொழுக்கு மலை

எப்படிச் செல்வது?

மதுரையிலிருந்து தேனி சென்று அங்கிருந்து 42 கி.மீ மலைச் சாலையில் போடி மெட்டுக்கு பயணிக்க வேண்டும். அங்கிருந்து 18 கி.மீ பயணித்தால் கேரளா இடுக்கி மாவட்டத்திலிருக்கும் சூரியநெல்லியை அடையலாம்.

தற்போது கொரோனா கட்டுப்பாட்டால் தேனி, போடி மெட்டிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துவசதிகள் குறைந்துள்ளது. சொந்த வாகனத்தில் செல்பவர்களுக்கு பிரச்னை இல்லை.

போகும்போதே மலைச்சாலையில் வாகனத்தை நிறுத்தி, இயற்கை அழகை ரசிக்கலாம். எந்த வாகனமாக இருந்தாலும் சூரியநெல்லி வரைதான் செல்ல முடியும். அதற்கு மேல் கொழுக்குமலையை அடைய சூரியநெல்லியிலிருந்து 1 மணி நேர ஜீப் பயணம் மேற்கொள்ள வேண்டும். அதில் செல்ல ஒருவருக்கு ரூ.200 முதல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்டணம் வாங்குவார்கள். சூரியநெல்லியில் நம்ம ஊர் ஆட்டோ ஸ்டாண்ட் போல, ஜீப் ஸ்டாண்ட் இருப்பதால், ஜீப் கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

கொழுக்கு மலை

கொழுக்குமலைக்கும், சூரியநெல்லிக்கும் இடையே அமைந்துள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தின் வழியாகதான் செல்ல வேண்டும். சுமார் 12 கிலோமீட்டர் தூரம் கொண்ட அப்பாதை மிகவும் கரடு முரடாக இருக்கும். அதனால் தான் ஜீப்.

வழியில் கண்களுக்கு எட்டிய தூரம்வரை தேயிலைத்தோட்டம்தான் காட்சியளிக்கும். அத்தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, சத்தமில்லாமல் நகர்ந்து செல்லும் மேகக்கூட்டங்களை ரசித்தபடியே, ஜீப் பயணத்தைத் தொடரலாம். ஒரு கட்டத்தில் தேயிலைத்தோட்டங்கள் மறைந்து காட்டுப்பகுதி வரும். அங்கிருந்து 1 மணி நேர பயணத்தில் கொழுக்குமலை எஸ்டேட்டை காணலாம்.

கொழுக்குமலையில் என்ன ஸ்பெஷல்?

உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டம் என்ற சிறப்பு கொழுக்குமலைக்கு உண்டு. அதுமட்டுமல்ல, முழுக்க முழுக்க இயற்கை முறையில் தேயிலை சாகுபடி செய்யக்கூடிய இடமும் கொழுக்குமலைதான்.

தேயிலைத் தோட்டம்

சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டம் அங்குள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, தேயிலைத் தோட்டத்தின் நடுவே, 1935-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள தேயிலைத்தூள் தொழிற்சாலை இருக்கிறது. அதை நாம் சுற்றிப்பார்க்கலாம். தேயிலையில் இருந்து டீ தூள் எப்படி தயார் செய்யப்படுகிறது, எவ்வளவு வகை தேயிலைத் தூள்கள் உள்ளன, அவற்றை எப்படி தரம் பிரிக்கின்றனர் போன்ற விவரங்களை, அங்குள்ள ஊழியர் நமக்கு விளக்கமாக கூறுவார்.

தேயிலை ஃபேக்டரிக்கு பக்கத்தில் அமைந்துள்ள கடையில் சூடாக டீ சாப்பிட்டுக்கொண்டே, பறவைகளின் ரீங்காரத்தையும், தேயிலைத்தோட்டத்தில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களையும் ரசிக்கலாம்.

கொழுக்குமலை தேயிலை ஆலை

வேறு என்ன ஸ்பெஷல்?

கொழுக்குமலை ஒரு நாள் பயணத்திற்கான இடம் இல்லை. ஒரு நாள் இரவு அங்கேயே தங்க வேண்டும். அப்படித் தங்கினால் மறுநாள் அதிகாலை, நமது பயணமே முழுமைபெறும்.

கொழுக்குமலையில் தங்குவதற்கு என, எஸ்டேட் நிர்வாகம் பல வசதிகளை செய்து வைத்துள்ளனர். நாம் விரும்பினால் டெண்ட் அமைத்து, கேம்ப் ஃபயர் அமைத்துக் கொடுப்பார்கள். அறை மட்டும் போதும் என்றாலும் ஒதுக்கித் தருவார்கள். ஒவ்வொன்றுக்கும் கட்டணம் செலுத்திவிட்டால் போதும். சாப்பாடுக்கு கவலையே வேண்டாம். அங்கேயே சமையல் செய்து சுவையான, சூடான சாப்பாடு கொடுப்பார்கள்.

தனித்தனியாக கட்டணம் செலுத்துவதை விட மொத்தமாக அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் பேக்கேஜ் முறையும் உண்டு. அதில், உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

சூரிய உதயம்:

கடல் மட்டத்திலிருந்து 7900 அடி உயரத்தில் அமர்ந்து சூரிய உதயத்தை பார்ப்பது வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அனுபவம். கொழுக்குமலை பயணத்தின் ஹைலைட்டே அதிகாலையில் சன் லைட்டை பார்ப்பதுதான்.

அதிகாலை 5 மணிக்கு நம்மை எழுப்பும் கொழுக்குமலை எஸ்டேட் ஊழியர்கள், சூரிய உதயத்தைக் காண அழைத்துச்செல்வார்கள். சிறிது தூரம் நடந்துசென்றால், சூரிய உதயத்தைக் காணும் இடம் வரும். வேகமாக வீசும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், இளம் சிவப்பாக காட்சிளித்த அடிவானத்தை பார்த்தபடியே சூரியனை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் அந்த நேரம் நமக்குள் பரவச உணர்வை ஏற்படுத்தும்.

கொழுக்குமலை

குரங்கணி, முதுவாகுடி, டாப் ஸ்டேஷன் வியூ பாயிண்ட், எக்கோ வியூ பாயிண்ட் என பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளது. அங்கெல்லாம் செல்ல, எஸ்டேட் ஊழியர்களை நாம் உடன் அழைத்து செல்ல வேண்டும். வழிதெரியாமல் போகவோ, ஆபத்தான மலைப்பாதை என எந்த பிரச்னையும் கொழுக்குமலையில் இல்லை.

வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், மாலைக்கு மேல் பயணத்திற்கு அனுமதி இல்லை. எஸ்டேட் நிர்வாகத்தினர் சொல்வதை கேட்டு அதன்படி நடந்துகொள்வது நமக்குப் பாதுகாப்பாக இருக்கும். எப்படிப் பயணம் செய்து கொழுக்குமலை சென்றோமோ, அதேபோல மீண்டும் ஜீப் பயணத்தில் சூரியநெல்லி வந்தடைந்து அங்கிருந்து போடிமெட்டு, போடி, தேனி எனக் கடந்து மீண்டும் மதுரை வந்து சேரலாம்.

Also Read: மதுரை: அழகு நிறைந்த வீடு... அமிர்தமான சாப்பாடு... அதுதான் செட்டிநாடு!

போய் வருவது எப்படி?

மதுரையிலிருந்து தேனி - போடி- போடி மெட்டு - சூரியநெல்லி- கொளுக்குமலை. தூரம் -142 கி.மீ

பயண நேரம் 4 முதல் 5 மணி நேரம்.

பொதுப்போக்குவரத்து தற்போது குறைவு. போடி மெட்டிலிருந்து சூரியநெல்லி சென்றுவிட்டால் வாடகை ஜீப் மூலம் கொழுக்கு மலைக்கு செல்லலாம்.

சொந்த வாகனத்தில் செல்வது கூடுதல் வசதி.

சென்று வர ஒரு நபருக்கு உணவுடன் சேர்த்து ரூ.1500 செலவாகும்.



source https://www.vikatan.com/lifestyle/travel/hangout-spots-in-and-around-madurai-a-trip-to-kozhukkumalai-in-theni-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக