நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் நடக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வந்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் ஏற்பாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
ராகுல்காந்தி பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு நான் எப்போது வந்தாலும் என்னை வரவேற்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்களின் அன்பு என்னை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் தமிழக மக்களுக்கு நானும் மகிழ்ச்சியைத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்.
தமிழகத்துக்கு வரும்போது மட்டும் எனக்கு ஏன் ஆனந்தம் ஏற்படுகிறது என்பதை என்னால் சொல்லத் தெரியவில்லை. நீங்கள் எல்லோரும் என் பாட்டி இந்திராவின் மீதும் என் தந்தை ராஜீவ்காந்தி மீதும் வைத்திருந்த அன்பு கூட காரணமாக இருக்கலாம். ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க நான் தமிழ் படிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
தமிழகத்தில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அது என்னை வியக்க வைக்கிறது. தமிழகம் இந்தியாவின் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கும். தமிழகமும் தமிழர்களும் வருங்கால இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பார்கள்.
நாட்டின் மிகப்பெரிய சவாலாக வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. ஆனால் மத்தியில் ஆளும் அரசு பெரும் வணிகர்களுக்கு ஆதரவாக இருக்கிறதே தவிர சிறு, குறு வணிகர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு மூலம் மத்திய அரசு அனைத்துத் தரப்பு மக்களின் பணத்தை களவாடி வருகிறது.
தமிழகத்தை மத்திய அரசு ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி செய்கிறது. பிரதமர் சொல்வதையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்கிறார். மத்திய அரசு என்னை பயமுறுத்தவோ அச்சுறுத்தவோ முடியாது. காரணம் நான் நேர்மையானவன். அதைப் பிரதமரோ அல்லது தமிழக முதல்வரோ சொல்ல முடியுமா? நானும் நீங்களும் சேர்ந்தால் தமிழகத்துக்கு புதிய பாதையைக் காட்ட முடியும்” என்று பேசினார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-nadu-will-lead-the-whole-nation-says-rahul-gandhi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக