காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரி பகுதியில் ராகுல்காந்தி பேசுகையில், "உங்கள் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. இன்று நம் தலைவர் வசந்தகுமாரை பற்றி நினைவு கூர்கிறோம். எதற்காக என்றால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், மற்ற அரசு அவரை மிரட்டினாலும் அஞ்சாமல் அவர் காங்கிரஸ் பின்னால் உறுதியாக நின்றதால் அவரை நினைவுகூர்கிறோம். அவர் எப்போதுமே பின்தங்கிய மக்களுக்காக, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள விளிம்புநிலை மக்களுக்கான உழைத்துக்கொண்டிருந்தார்.
ஏழை குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்தார். ஒரு குடும்பத்திற்கு திருமணம் செய்ய நிதி உதவியாக 10,000 ரூபாய் வீதம் 1,000 குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறார். விதவைகளுக்கு ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்திருக்கிறார். பல்வேறு நீர் நிலைகளை சீரமைத்திருக்கிறார். ஏழைகளுக்கு உணவு அளித்தவர். அவரை போன்ற வலிமை வாய்ந்த, திறமை வாய்ந்த, சக்தி படைத்த மனிதரை இழந்திருக்கிறோம்.
இரண்டு தகவல்களை சொல்ல கடமை பட்டுள்ளேன். முதலில் டெல்லியில் உள்ள மோடி அரசு தமிழ் மொழிக்கோ, தமிழ் கலாசாரத்துக்கோ, தமிழ் நாகரீகத்துக்கு மதிப்பு கொடுப்பதாக இல்லை. இங்குள்ள முதல்வர் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார். தமிழக முதல்வர் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுதாமல் மோடி சொல்வதை செய்பவராக இருப்பது வருத்தமளிக்கிறது. மோடி தொலைகாட்சியை பார்த்து ரசிக்ககூடியவராக இருக்கிறார். தமிழகத்தையும் தொலை காட்சியை பார்ப்பதுபோன்றுதான் பார்க்கிறார். ரிமோட் மூலம் தொலைகாட்சியை மாற்றுவது போன்று தமிழகத்தை மாற்ற நினைக்கிறார்.
தமிழக முதல்வர் ஊழல் செய்ததால் சிபிஐ, வருமான வரித்துறையைவைத்து மிரட்டி வருகிறார். தமிழர்களை தவிர பிறர் ஆட்சி நடத்தினால் தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது வரலாறு. இந்த தேர்தலில் நாம் அதை பின்பற்ற வேண்டும். தமிழ் மக்களை உண்மையாக யார் முன்னிறுத்தி செயல்படுபடுவாரோ அவர்தான் முதல்வராக வரவேண்டும்.
இரண்டாவதாக தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம். நேற்று நான் கவனித்ததில் காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்திய குடிமகன். அந்த நேரத்தில் இந்திய பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்றார். ஆனால் காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதை கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார். காமராஜர் முயற்சியால் தமிழகம் மாட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெருமை காமராஜரை சாரும். அதுதான் தமிழகம் நாட்டின் வழிகாட்டி என கூறினேன்.
மோடியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் சிறுமைபடுத்த முயற்சிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என கொண்டுவர முயற்சிக்கிறார். தமிழ், பெங்காளி ஆகியவை இந்திய மொழி இல்லையா. தமிழ் கலாசாரம் இந்திய கலாசாரம் இல்லையா. தமிழ் மொழி, கலாசாரம் பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன். அனைத்து மொழி, கலாசாரம், மதங்களை காக்க நான் கண்டிப்பாக துணை நிற்பேன். அனைவருக்கும் நன்றி" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-gandhi-campaign-in-kumari
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக