கால்நடைகள், கோழிகள், மீன்கள் ஆகியவை, விவசாயத்துக்கு இணையாக நம் உணவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விலங்குகளின் இறைச்சியை மனித இனம் உண்ணத்தொடங்கிய நிகழ்வு, மனித மூளையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
உலகின் பலகோடி மக்களுக்கு இறைச்சியிலிருந்துதான் தினசரித் தேவைக்கான புரதச்சத்து கிடைக்கிறது. கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை, மீன்பிடித்தொழில் ஆகியவை லட்சக்கணக்கான மக்களுக்கும் இனக்குழுக்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பல இனக்குழுக்களிடம் இருக்கும் ஒரே சொத்து அவர்கள் வளர்க்கும் கால்நடைகள்தான். கிராமப்புறப் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்புக்கும் கோழி வளர்ப்புக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.
காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன்பிடித்தொழில் ஆகிய எல்லாவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்து. ஆனால், பாதிப்பு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. தொழில்மயமாக்கப்பட்ட விலங்குப்பண்ணைகளில் (Industrialized animal farms) ஏற்படும் மாற்றமும், சிறு/குறு பண்ணைகளில் ஏற்படும் மாற்றமும் வெவ்வேறாக இருக்கும். தமிழ்நாட்டுக்குள்ளேயே வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு இன உயிரினங்களை வளர்ப்பவர்களுக்கு பாதிப்பு வேறுபடும்.
பூமியில் இப்போது 23 பில்லியன் கோழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு விநாடியும் உலக அளவில் 2,100 கோழிகள் கொல்லப்பட்டு, பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகின்றன. உணவு, சூழல் மாற்றம், உலகளாவிய ஆரோக்கியம், பல்லுயிரியம் ஆகிய நான்கு கோடுகளும் இணையும் மையப்புள்ளியில் இருக்கிறது கோழிப்பண்ணை என்று குறிப்பிடுகிறது 2019-ல் லான்செட் சஞ்சிகையில் வெளியான ஒரு கட்டுரை. நாளுக்கு நாள் கோழிகளுக்கான தேவை அதிகரித்தபடியே இருக்கிறது. சர்வதேச அளவில் நடுத்தர வர்க்கத்தினரின் விகிதம் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், அதனால் கோழிகளுக்கான தேவை அடுத்தடுத்த தசாப்தங்களில் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கின்றன தரவுகள்.
ஆனால், அதிகரித்துவரும் தேவைக்கேற்ப நம்மால் கோழி வளர்ப்பை அதிகரித்துவிட முடியுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்போது, கோழிகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது, முட்டையிடும் வேகம் குறைகிறது, தீவனங்களை உண்பது குறைந்து, கோழிகள் உணவில் நாட்டமிழக்கின்றன. கோழியை வளர்ப்பதற்கான சராசரி நீர்த்தேவையும் அதிகரிக்கிறது. எதிர்காலத்தில் நீராதாரங்கள் குறையும்போது, கோழிப்பண்ணைகளுக்குத் தேவையான கூடுதல் நீர் எங்கிருந்து வரும் என்பது தெரியவில்லை.
உலகின் பல இடங்களில், விவசாயம் லாபகரமாக இல்லாததால் கோழி வளர்ப்பு உள்ளிட்ட உப தொழில்களை நோக்கி மக்கள் திரும்புவது அதிகரித்துவருகிறது. உதாரணமாக, பெங்களூரைச் சுற்றியுள்ள சிறு கிராமங்களில், தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் வெப்பநிலை அதிகரித்துவிட்டதாலும் விவசாயத்தைக் கைவிட்ட பலர், கோழி வளர்ப்பைக் கையிலெடுத்திருக்கிறார்கள் என்கிறது 2017-ல் வந்த ஒரு ஆய்வுக்கட்டுரை. பலர் கோழிவளர்ப்பை நோக்கி வருகிறார்கள் என்றபோதிலும், அது எதிர்காலத்தில் லாபம் தருமா என்பது கேள்விக்குறிதான்.
குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டும் வளர்க்கப்படும் கோழிகள், இடம் பெயர்க்கப்படும்போது அதீத வெப்பநிலை தாங்காமல் வழியிலேயே இறப்பதும் அதிகரித்துவருகிறது. சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்போது, கோழிகளின் உடலில் இறைச்சிக்கும் கொழுப்புக்குமான விகிதம் மாறுபடுகிறது என்று அறிவியலாளர்கள் உறுதிசெய்திருக்கிறார்கள். அதனால், எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் எடையிலும் சுவையிலும் சத்துக்களிலும் மாறுதல் ஏற்படும்.
காலநிலை மாற்றத்தால் விலங்குகளைத் தாக்கக்கூடிய நோய்களும் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக, நெருக்கடியான இடங்களில் பல்லாயிரக்கணக்கான கோழிகளை ஒன்றாக வைத்து வளர்க்கும்போது, நோய்ப்பரவலும் தீவிரமாக இருக்கும்.
வெப்பநிலை அதிகரிக்கும்போது, மாடுகளின் பால்சுரப்பு விகிதம் பெருமளவில் குறையும். மாடுகள் தீவனம் உண்பதைக் குறைத்துக்கொள்ளும் என்பதால், அவற்றின் எடையும் குறையத்தொடங்கும். அவற்றின் உடல் தசை விகிதத்திலும் மாறுபாடு ஏற்படும். "ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெப்பநிலை அதிகரித்தால் மாடுகளில் பால்சுரப்பு விகிதம் குறையத்தொடங்கும்" என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
சோகம் என்னவென்றால், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில், சராசரி வெப்பநிலை ஏற்கெனவே அந்த அளவைத் தாண்டிவிட்டது! ஆகவே காலநிலை மாற்றம் நாம் தினசரி குடிக்கும் பாலை ஏற்கெனவே பாதிக்கத் தொடங்கிவிட்டது!
ஒவ்வொரு வருடமும் பெரும்புயல்களும் வெள்ளமும் வரும்போது, கால்நடைகளைக் காப்பாற்ற மக்கள் முயற்சி செய்வதையும், அவை நூற்றுக்கணக்கில் அடித்துச் செல்லப்படுவதையும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். தீவிர பருவகால நிகழ்வுகள் ஏற்படும்போது கால்நடைகள் பெருமளவில் இறக்கின்றன. 2000-ல் மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட ஒரு புயல் வெள்ளத்தில் எண்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் என்பதே விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.
மாடுகள் மட்டுமன்றி, ஆடுகள், பன்றிகள் உள்ளிட்ட எல்லா விலங்குகளுமே வெப்பநிலை அதிகரிப்பு, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்படும். அதீத வெப்பநிலை இருக்கும்போது பன்றிகள் எடையிழக்கும், தீவனத்திலிருந்து அவற்றால் எளிதில் சத்துக்களை எடுத்துக்கொள்ள முடியாது. ஆடுகளுக்கும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எல்லாக் கால்நடைகளுக்கும் ஏற்படவிருக்கிற முக்கிய அச்சுறுத்தல் தீவனத் தட்டுப்பாடு. எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுக்கே பஞ்சம் வரலாம் என்கிறபோது, கால்நடைகளுக்கான தீவனங்களிலும் கடும் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது. மேய்ச்சலுக்கான நிலங்கள் குறையும். தீவனங்களை வளர்ப்பதற்கான நிலங்கள் போதுமான அளவில் இருக்காது. காலநிலை மாற்றத்தின் பாதிப்பால், தீவனங்களாகப் பயன்படும் தாவரங்கள், புற்கள் ஆகியவற்றின் வளர்ச்சியும் குறையும்.
எதிர்காலத்தில், விலங்குகளுக்கு உண்டாகும் திடீர் நோய்கள் கால்நடை வளர்ப்பவர்களுக்குப் பெரும் மன உளைச்சலையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும். நோயின் தன்மை புரிவதற்குள் பல கால்நடைகள் இறந்துவிடும் என்பதால் சூழலை சமாளிப்பது சிரமமாக இருக்கும்.
பருவகாலத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் என்பதால் மீன்பிடித் தொழில் காலநிலை மாற்றத்தால் கடும் பாதிப்பை சந்திக்கும். ஏற்கெனவே இந்தியாவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் பொதுவான மீன்வரத்து குறையத் தொடங்கிவிட்டது. கடல்நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, நுண்பாசிகளின் விகிதம் அதிகரித்து, ஆக்சிஜன் அளவு குறையும். ஆக்சிஜன் குறைவாக இருக்கும் பகுதிகளில் மீன்வரத்து குறையும். காலநிலை மாற்றத்தால் பல நிலப்பகுதிகளில் கடல்நீர் உட்புகும் அபாயம் இருப்பதால், நன்னீர் ஆதாரங்களின் உப்புத்தன்மை மாறுபடும். ஆகவே நன்னீர் மீன்பிடித் தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். மத்தி, அயிலா, உள்ளம், சிறிய வகை சூரை மீன்கள் ஆகியவை அதிக அளவில் பாதிக்கப்படும்.
கடல்நீரின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் கூட, மீன்களின் இனப்பெருக்கம் குறைந்துவிடும். கடலில் உள்ள இயல்பான சுழற்சிகள் சீர்குலைவதால், உணவு கிடைக்காமலும் பல மீன்கள் இறக்கும். மீன்குஞ்சுகள் வளர்வதற்கு நர்சரி போல செயல்படும் அலையாத்திக்காடுகள் காலநிலை மாற்றத்தால் அழியும். ஆகவே, மீன்களின் வளர்ச்சி தடைப்படும். மீன்களின் சராசரி நீளம் குறையும். மட்டி, கிளிஞ்சல் போன்ற சிப்பி உணவுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். 2100-ம் ஆண்டுக்குள் கடலின் பல பகுதிகள் ஆக்சிஜன் குறைவான பகுதிகளாக மாறிவிடும் என்பதால் அந்தப் பகுதிகளில் மீன்கள் இருக்காது.
மீன் பண்ணைகளிலும் இதே போன்ற பாதிப்புகள் வரலாம். தீவனத்தட்டுப்பாடு, பேரிடர்களால் பண்ணைகளில் ஏற்படும் நஷ்டம், நோய்த்தாக்குதல் ஆகியவை சில பொதுவான பிரச்னைகளாக முன்வைக்கப்படுகின்றன.
உணவும் மரபும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. நாஞ்சில் நாட்டு விலாங்குமீன் துவரன், கொங்குநாட்டு சிந்தாமணி சிக்கன், மட்டன் உப்புக்கறி, பிரசவித்த பெண்களுக்குத் தரப்படும் பால்சுறா, நாகூரின் இறால் அடை, துவரங்குறிச்சியின் தாளியானா மட்டன் குழம்பு, கோழியாப்பம் என்று வட்டாரத்துக்கேற்ற ஊன் உணவுகள் தமிழ்நாட்டில் உண்டு.
"கார்த்திகை மாதம் சிப்பிகள் அதிகம் கிடைக்கும்", "ஜூலை மாதம் பறவைக்கோலா சீசன்" என்று கடலோர கிராமங்களில் உள்ளவர்கள் மீன்களையும் காலத்தையும் இணைக்கும் நாட்காட்டி ஒன்றை மனதில் குறித்து வைத்திருப்பார்கள். மலைபோலக் குவிக்கப்பட்ட ஊன்சோறு, இரும்புக்கம்பியில் குத்தி சுட்டெடுக்கப்பட்ட ஆட்டிறைச்சி, பீர்க்கங்காயும் நண்டும் போட்ட குழம்பு என்று பலவகையான இறைச்சிகளைப் பேசுகிறது சங்க இலக்கியம். இதுபோன்ற மரபுசார்ந்த வழக்கங்களை சுட்டிக்காட்டும் காலநிலை வல்லுநர்கள், காலநிலை மாற்றத்தால் உணவு வகைகள் மட்டுமல்ல, இந்த மரபும் சேர்ந்தே அழியும் என்கிறார்கள்.
குறிப்பிட்ட வகை உணவுகளுக்கே பழகிய மக்கள், அந்த உணவுப்பொருள் கிடைக்கவில்லை என்றால் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டலாம். உணவுப்பொருள்களின் விலை உயரும்போதோ உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போதோ பிரச்னைகள் ஏற்படலாம். எதிர்காலத்தில் இதை முன்வைத்து உணவுப்பூசல்கள் (Food riots) ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது!
எல்லாவற்றுக்கும் நடுவே ஒரு சில ஆய்வுகள் நம்பிக்கை அளிக்கின்றன. அந்தந்த ஊரில் உள்ள நாட்டு இனங்கள், அயல் இனங்களை விட ஓரளவு காலநிலை மாற்றத்தைத் தாக்குப்பிடிக்கின்றன. இது இனத்துக்கு இனம் கொஞ்சம் மாறுபடுகிறது என்றாலும் நாட்டு இனங்கள் இப்போதைக்கு நம்பிக்கை தருகின்றன. மற்ற கால்நடைகளோடு ஒப்பிடும்போது ஆடுகள் அதிக வெப்பநிலையிலும் தளராமல் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்த ஆராய்ச்சிகளையும் அவை தரும் வழிகாட்டல்களையும் முன்வைத்தே எதிர்காலத்தில் பண்ணைகள் வடிவமைக்கப்படும்.
பண்ணைகளைச் சார்ந்து இருக்காமல் முழுவதுமாக ஆராய்ச்சிக்கூடங்களில் உருவாக்கப்படும் 'டிசைனர் இறைச்சி' (Designer Meat) தொடர்பான ஆய்வுளும் அதிகரித்து வருகின்றன. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஆராய்ந்துவரும் பல வல்லுநர்கள், இந்த டிசைனர் இறைச்சி வகைகள் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிறார்கள்.
"டிசைனர் சிக்கன், டிசைனர் மட்டனா?" என்று நமக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நமக்கு ப்ராய்லர் சிக்கன் என்றால் என்னவென்றே தெரியாது. நரம்பு நீக்கப்பட்ட, தோலுரிக்கப்பட்ட இறால்கள் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் என்பதைக் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம். உணவு அமைப்பில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. ஆகவே, எதிர்காலத்தில் டிசைனர் இறைச்சிகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. அது நம் ஆரோக்கியத்துக்கும் பொருளாதாரத்துக்கும் சாதகமாக முடியுமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
காலநிலை மாற்றத்தால் பல நகரங்கள் மூழ்கும் என்கிறார்களே? அது எப்படி? அதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?
அடுத்த கட்டுரையில் பேசுவோம்!
- Warming Up...
source https://www.vikatan.com/health/food/why-the-designer-meat-will-become-the-future
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக