Ad

சனி, 27 பிப்ரவரி, 2021

அமித் ஷா - மாநில நிர்வாகிகள் சந்திப்பு.. மநீம-வின் உத்தரவு.. வி.சி.க, ம.தி.மு.க-வுக்கு அழைப்பு! - தேர்தல் அப்டேட்ஸ்!

மநீம-வின் உத்தரவு!

மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் தொடர்பான சில முக்கிய இறுதி முடிவுகளை எடுக்க உள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் இன்று மாலை முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து அடுத்த சில நாள்கள் மக்கள் நீதி மய்ய கட்சியின் நிர்வாகிகள் சென்னையிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைமையில் மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் தேர்தல் பணிகளை இறுதி செய்யும் வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றது.

அமித் ஷா மாநில நிர்வாகிகள் சந்திப்பு...!

அமித் ஷா

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பா.ஜ.க முன்னாள் தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்கிறார். தற்போது சென்னையில் தங்கியிருக்கும் அமித் ஷாவை பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து இன்று சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அமித் ஷா உடன் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அழைப்பு!

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை வேகப்படுத்தி உள்ளன. திமு.க.-வைப் பொறுத்தவரையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்திருக்கும் நிலையில், இன்று மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் நிலையில் நாளை தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/news/tamilnadu-election-2021-and-other-current-updates-28-02-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக