Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

சென்னை: `சர்ச்சுக்குப் போகலாம்; கதவைத் திற!’- மனைவியைக் கொலைசெய்த கணவர்

சென்னை மாதவரம் பால்பண்ணையை அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் லாரன்ஸ். இவரின் மனைவி சரோ வெனிஷியா (41). இவர்களுக்கு காயத்திரி லீனா, காவியா என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு சரோவெனிஷா வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

Also Read: நெல்லை: பல்வேறு வழக்குகள்; திருந்தி வாழ்ந்துவந்த இளைஞர் அடித்துக் கொலை! - போலீஸ் விசாரணை

கொலை

அவரைச் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோ வெனிஷியா உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் சரோ வெனிஷியாவை அவரது கணவர் எட்வர்ட் லாரன்ஸ் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து காயத்திரி லீனா மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாமாண்டு படித்து வருகிறேன். எனது தங்கை காவியா, பிளஸ் 2 படித்து விட்டு கல்லூரி படிக்க வசதியில்லாத காரணத்தால் எம்.கே.பி நகரில் உள்ள பைக் ஷோரூமில் வேலைபார்த்து வருகிறார்.

எனது அப்பா எட்வர்ட் லாரன்ஸ் கார்பென்டராக வேலைப்பார்த்து வருகிறார். அவரின் சொந்த ஊர் செங்கல்பட்டு தச்சூர். எனது அம்மாவின் சொந்த ஊர் சென்னை சூளைமேடு. எனது அப்பாவும் அம்மாவும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

கொலை

நாங்கள் பெரிய பிள்ளைகளாகி படிக்க அப்பாவின் வருமானம் போதவில்லை என்பதால், அம்மா அழகு நிலையத்துக்கு வேலைக்குச் சென்றார். எனது தாயார் வேலைக்கு செல்வது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அதுதொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை நடந்துவந்தது. எங்களைப் பிரிந்து அப்பா, பாண்டிச்சேரிக்குச் சென்றுவிட்டார். அதனால், நாங்கள் எருக்கஞ்சேரியிலும் ஈச்சம்பாக்கத்திலும் குடியிருந்தோம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் என் தாயார் மீது சந்தேகப்பட்டு கொண்டு அப்பா எங்களைப் பிரிந்து சென்று விட்டார். கொரோனா காலக்கட்டத்தில் வேலை இல்லாததால் நாங்கள் அப்பாவின் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டோம். பின்னர் பிழைப்புத் தேடி சென்னை வந்தோம். சென்னையில் நாங்கள் தங்கியிருந்த விலாசத்தை உறவினர்கள் மூலம் தெரிந்துக் கொண்ட அப்பா, நானும் தங்கையும் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்மாவிடம் வீண் தகராறு செய்து வந்தார். வேலைக்குச் செல்கிறேன் என்று வெளியே சென்று ஊரைச் சுற்றுகிறாயா என்று மிரட்டியதாக எங்களிடம் அம்மா கூறினார்.

கொலை

மேலும், `உன்னை ஒழித்துக் கட்டினால்தான் பெண் பிள்ளைகள் நன்றாக இருக்கும்’ என்றும் அம்மாவை அப்பா மிரட்டி வந்தார். சில நேரங்களில் எங்கள் முன்னிலையில் அம்மாவை அப்பா தகாத வார்த்தைகளால் திட்டுவார். அப்போது, `என்னைக்கு இருந்தாலும் கத்தியால் குத்தி சாகடிப்பேன்’ என்று மிரட்டுவார்.

13-ம் தேதி மாலை நானும் தங்கையும் ஜவுளி கடைக்குச் சென்றோம். அப்போது அம்மாவையும் அழைத்தோம். அதற்கு அம்மா, உடல்நலம் சரியில்லை என்று கூறிவிட்டார். துணிகளை எடுத்து விட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு 10 மணியளவில் அம்மா போன் செய்தார். `வீட்டின் வெளியில் அப்பா நின்றுக் கொண்டு கதவைத் திறக்கும்படி கெஞ்சுகிறார்’ என்று கூறினார். அதற்கு நானும் தங்கையும் கதவைத் திறக்க வேண்டாம் என்று கூறினோம். அதன்பிறகு அம்மா மீண்டும் போன் செய்து, `சர்ச்சுக்குச் செல்லாம். கதவைத் திற’ என்று கூறுவதாகத் தெரிவித்தார். அதற்கு `கதவைத் திறக்க வேண்டாம்’ என்று நாங்கள் அம்மாவிடம் கூறினோம். அதன்பிறகு நாங்கள் வீட்டுக்கு வந்தபோது அம்மா ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போரடிக் கொண்டிருந்தார். அம்மாவிடம் விசாரித்தபோது அப்பாதான் கத்தியால் குத்தியதாகத் தெரிவித்தார். எனவே அப்பா மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். தலைமறைவாக உள்ள எட்வர்ட் லாரன்ஸை போலீஸார் தேடிவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-husband-over-wife-murder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக