சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன் தனது தேர்தல் அறிக்கையில் வீட்டை நிர்வாகம் செய்யும் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதைக் கேட்ட பலரும் புருவங்களை உயர்த்தியிருக்கலாம். சிலர் இது என்ன முட்டாள்தனமான ஒரு அறிவிப்பு என்றும் கூட நினைத்திருக்கலாம்.
அப்படி நினைத்தவர்கள் `தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தில் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவது குறித்து அருமையாகப் பேசியுள்ளனர் என்ற போஸ்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கலாம். ஆனால், உண்மையில் சமூகத்தில் பெண்களின் உழைப்பு குறித்து `டேக்கிட் ஃபார் கிரான்ட்டடு' என்ற மனப்பான்மையே அதிகம்.
அதனால் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையில் சொன்னது சாத்தியமோ, இல்லையோ குறைந்தபட்சம் அதுகுறித்து ஒரு தேர்தல் அறிக்கையில் பேசவாவது செய்கிறார்களே என்று தோன்றுகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம். சீனாவில் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஐந்து வருடங்கள் அவர் கணவனுடன் வாழ்ந்தபோது அவர் செய்த வீட்டு வேலைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான ஒரு தீர்ப்புதான் எனவே வழக்கம்போல இதுகுறித்து சமூக வலைதளத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த விவாதங்கள் பெரும்பாலும் தீர்ப்புக்கு ஆதரவாகத்தான் உள்ளன. ஆனால், நீதிமன்றம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ள அந்தத் தொகை ஐந்து வருட காலம் அந்தப் பெண் உழைத்ததற்கு எந்த வகையிலும் ஈடாகாது என்றும் பெரும்பாலானோர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வீய்போவில் கிளம்பிய விவாதம்
2015-ம் ஆண்டு சென் என்ற குடும்ப பெயர் கொண்ட அந்த நபர் வாங் என்ற குடும்ப பெயர் கொண்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த ஆண்டு தன் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி பீய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் விண்ணப்பித்திருந்தார்.
ஐந்து வருட காலம் தன் கணவர் வீட்டு வேலைகள் எதிலும் தனக்கு உதவி செய்யவில்லை என்றும், தன் குழந்தைகளைத்தான் மட்டுமே பார்த்துக்கொண்டதாகவும் கூறி தனக்கு இழப்பீடு வேண்டும் என்றும் அந்தப் பெண் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் சென் தன் மனைவிக்கு மொத்தமாக 50,000 யூவான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மாதம்தோறும் ஜீவனாம்ச தொகையாக 2000 யூவான் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விவாகரத்துச் செய்தி முதன்முதலில் சீன ஊடகம் ஒன்றில் பிப்ரவரி 3-ம் தேதி வெளிவந்தது. அதன்பின்னர் இது சீனாவில் பிரபலமான வீய்போ சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஐந்து வருட உழைப்புக்கு வெறும் 50,000 யூவான் என்பது மிகக் குறைவு என்றும், இருப்பினும் ஏதோ ஒரு வகையில் கணவனுக்கும் வீட்டு வேலைகளில் சம பங்குண்டு என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்தட்டும் என்றும் பலர் வீய்போ தளத்தில் பேசி வருகின்றனர்.
மேலும் அந்தத் தம்பதியினர் இருவரின் பெயரிலிருந்த சொத்துகள் இருவருக்குமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இந்தத் தீர்ப்பு இந்த வருடம் சீனாவில் புதியதாக அமலுக்கு வந்த சிவில் சட்டத்தால் சாத்தியமாகியுள்ளது.
அதாவது இந்தப் புதிய சட்டத்தின்படி திருமண வாழ்க்கையில் அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்ளும் துணை அல்லது தன் பொறுப்புகளுக்காகக் கல்வி, பணி வாய்ப்புகளை விட்டுக் கொடுத்த துணை விவாகரத்தின்போது இழப்பீடு கோரலாம்.
source https://www.vikatan.com/social-affairs/women/china-court-orders-man-to-pay-ex-wife-for-her-housework
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக