Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

சசிகலா பெயரைத் தவிர்க்கிறாரா... எடப்பாடியின் எதிர்ப்பு அரசியல் எப்படிப்பட்டது?

தமிழக அரசின் கொடி கட்டப்பட்ட கார்களில் சென்று டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துவிட்டுவந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேச அவர்களில் எவரும் முன்வரவில்லை. `நீங்க பேசுங்க... நீங்க பேசுங்க’ என்று மாறி மாறி சொல்லிக்கொண்டனர். சசிகலாவால் பதவியைப் பெற்றவர்கள் என்பதால், சசிகலாவுக்கு எதிராகப் பேச அவர்களுக்குத் தயக்கமோ, அச்சமோ இருந்திருக்கலாம்.

எடப்பாடி, சசிகலா, பன்னீர்

டி.ஜி.பி-யிடம் அமைச்சர்கள் புகார் அளித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, `அவர்கள் பயப்படுகிறார்கள்’ என்று சசிகலா குறிப்பிட்டார். சிறையிலிருந்து சசிகலா வெளிவரப்போகிறார் என்பது உறுதியான நேரத்தில் டெல்லி சென்று பா.ஜ.க மேலிடத்தைச் சந்தித்த பிறகுதான் சசிகலா பற்றிய தனது கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகத் தெரிவித்தார். ``சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ள நூறு சதவிகிதம் வாய்ப்பு இல்லை'' என்றார் எடப்பாடி.

ஆனால், சிறையிலிருந்து சசிகலா வெளியேவந்த பிறகு, தமிழக அரசியல் களத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தமிழக அரசியலில் ராசாயண மாற்றம் ஏற்பட்டிருப்பதாக டி.டி.வி.தினகரன் அதைக் குறிப்பிட்டார். அப்படியான சூழலில், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்ற ஒருசிலர் மட்டுமே சசிகலா பற்றி கருத்து தெரிவித்துவந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைதிகாத்தார். தேர்தல் சுற்றுப்பயணத்தில் தீவிரமாக இருந்தபோதும், சசிகலா பற்றிய பேச்சுகளை மேடையில் அவர் தவிர்த்துவந்தார்.

இந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பாகத்தான் சசிகலா பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போதும்கூட தினகரனின் பெயரைக் குறிப்பிட்டாரே ஒழிய, சசிகலாவின் பெயரைக் குறிப்பிடாமலேயே அவர் பேசினார். `மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடுவேன். அ.தி.மு.க-வின் தலைமைக்கழகம் செல்வேன் என்று சசிகலா கூறியிருக்கிறாரே?’ என்ற கேள்விக்கு தன்னுடைய கருத்து என்னவென்று சொல்லாமல், `அதற்குத்தான் அமைச்சர் ஜெயக்குமாரும் மூத்த தலைவர் முனுசாமியும் பதில் சொல்லிவிட்டார்களே’ என்றார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி

`சசிகலா வருகை அ.தி.மு.க-வில் தாக்கத்தை ஏற்படுத்துமா?’ என்ற கேள்விக்கும் தனது கருத்தைத் தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி, `அ.தி.மு.க-வில் யார் இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபட விளக்கிவிட்டார். இவர் வந்தால் தாக்கம் ஏற்படுமா என்பதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்..’ என்று நழுவிவிட்டார்.`உங்கள் பிரசாரத்தில் துப்பாக்கியுடன் வந்திருக்கிறார்களே, உங்கள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறதே..‘. என்று கேட்டதற்கு `உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்’ என்று எடப்பாடி பழனிசாமி வேகத்துடன் பதிலளித்தார்.

சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டவர் என்பதனால், சசிகலாவை எதிர்ப்பதற்கு அவர் அஞ்சுகிறாரா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், சசிகலாவின் பெயரைக் குறிப்பிடாததற்கும் சசிகலாவைத் தீவிரமாக எதிர்க்காததற்கும் எடப்பாடி பழனிசாமியின் எதிர்கால அரசியல் கணக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இது குறித்து அ.தி.மு.க செய்தித்தொடர்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேஸ்வரியிடம் பேசினோம்.
``சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ள நூறு சதவிகிதம் வாய்ப்பு இல்லை என்று தமிழக முதல்வர் உறுதியாகக் கூறிவிட்டார். அதைத் திரும்பத் திரும்ப அவர் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனாலும், சசிகலா தரப்பு சில கருத்துகளைச் சொல்லி, அது ஊடகங்களில் விவாதமாக்கப்பட்டு, செய்தியாளர்கள் கேள்வி கேட்பதால் மீண்டும் அந்த விஷயத்தைச் சொல்ல வேண்டிய கட்டாயம் வருகிறது. அதனால்தான், தற்போது சசிகலா, தினகரன் பற்றிய கேள்விகளுக்கு முதல்வர் பதில் சொன்னார். அதை ஒரு பெரிய பிரச்னையாகக் கருதி அது பற்றிப் பேச வேண்டும் என்று தானாக முதல்வர் பேசவில்லை. திரும்பத் திரும்ப அவரிடம் கேள்விகள் கேட்கப்படும்போது மட்டுமே அது பற்றி பேசினார்.

சசிகலா

இன்னொருபுறம், அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க் கட்சிகள் இந்தப் பிரச்னையை ஒரு தந்திரமாகக் கையாளுகின்றன. எனவே, அதற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டியிருக்கிறது. சசிகலா, தினகரன் தரப்பால் ஏதோ பிளவுவந்துவிட்டது போலவும் அதனால் அ.தி.மு.க பலவீனப்படுவதைப்போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்கும் முயற்சி நடக்கிறது. அதை ஒரு கட்சியின் தலைமையால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான், முதல்வர் மறுபடியும் கொஞ்சம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

சசிகலா அ.தி.மு.க-வில் உறுப்பினர் கிடையாது. 2011-லேயே எங்கள் தலைவர் ஜெயலலிதா அம்மாவால் அடிப்படை உறுப்பினர்கூட இல்லாமல் செய்யப்பட்டவர் தினகரன். அம்மா இருந்தவரை அவர் கட்சியிலேயே இல்லை. ஒரு காலகட்டத்தில் சசிகலாவால் கொண்டுவரப்பட்டார். ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால்தான் அ.தி.மு.க-வில் பதவிக்கு வர முடியும். அப்படி அல்லாமல், தலைமைப்பதவிக்கு அவர் வந்தது செல்லாது. அ.ம.மு.க என்பது பதிவுசெய்யப்பட்ட கட்சிதான். அது அங்கீகரிக்கப்படாத கட்சி. அப்படிப்பட்ட கட்சி, அ.தி.மு.க என்கிற மாபெரும் மக்கள் பேரியக்கத்தை மீட்போம் என்று சொல்வது மிகப்பெரிய கேலிக்கூத்து.

மகேஸ்வரி

அமைதியாக செயல்பட வேண்டும் என்பதே அ.தி.மு.க-வின் விருப்பம். ஆனால், அவர்கள் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருந்தால், எங்கள் நிர்வாகிகளும் தொண்டர்களும் சோர்வடைந்துவிடுவார்கள். அ.தி.மு.க கொடியை அவர்கள் பயன்படுத்தியதே எல்லோரிடமும் கவலையை ஏற்படுத்தியது. அதன் பிறகும் அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதால், அதற்கான பதிலை முதல்வர் சொல்லியிருக்கிறார். 'ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியைப் போக விடமாட்டோம்' என்று பேசியிருக்கிறார். எங்கள் அமைச்சர்களும் பதில் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டில் அ.தி.மு.க என்கிற பேரியக்கத்தில் இருக்கிற தலைவர்கள் முதல் தொண்டர்கள்வரை அத்தனை பேரும் உறுதியாக இருக்கிறோம்” என்கிறார் மகேஸ்வரி.

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜென்ராமிடம் பேசினோம். ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறாரா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. யாரும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. `யாரும் யாருக்கும் அடிமை இல்லை’ என்று ஓ.பி.எஸ் கூட சொல்லியிருக்கிறார். அரசு அதிகாரம் முழுவதும் எடப்பாடியின் கையில் இருக்கிறது. அதே நேரத்தில், சசிகலாவுக்கு எதிராக எப்படி அவரால் பேச முடியும். இந்த இடத்தில் அவர் இருப்பதற்கு சசிகலாதானே காரணம்.

முதல்வராக சசிகலாவால் முன்மொழியப்பட்ட நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் உடல்மொழி தொடர்பான காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதில், அன்றைய அவரது உடல்மொழியும் கண்களும் எப்படி இருந்தன என்பதைப் பார்த்தோம். அதை மாதிரியான உணர்வு இப்போதும் அவருக்கு இருக்கலாம். ஆனால், இதையெல்லாம் தாண்டி அரசியல் ரீதியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஜென்ராம்

சசிகலா விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், முனுசாமி, ஆகிய மூவரும் பேசும் கருத்துகளைப் பார்த்தால், அவர்கள் கடினமான ஒரு முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அந்த கடினமான நிலை என்பது பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமா, அல்லது இணைப்பு முயற்சி என்று யாராவது செய்தால், அதில் இவர்களுக்கான பேரம் பேசுவதற்கான தங்கள் வலிமையை அதிகரித்துக்கொள்ளவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சசிகலா தரப்பை அ.தி.மு.க-வில் சேரவிடாமல் செய்தால், தேர்தலில் ஜெயிக்காவிட்டாலும் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று இவர்கள் நினைக்கலாம். அல்லது, எதுவாக இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்கிற மனநிலையில் இவர்கள் இருக்கலாம்.
அல்லது, சசிகலா தனியாகவே நிற்கட்டும்… அது நமக்கு சாதகமாக இருக்கும் என்கிற உத்தியைக்கூட இவர்கள் கையாளலாம் என்று நினைக்கிறேன். அடிப்படையில், எல்லா கதவுகளும் தற்போது திறந்திருக்கின்றன. நகர்வுகளைப் பொறுத்து அவர்கள் முடிவெடுப்பார்கள்” என்றார் ஜென்ராம்.

Also Read: சசிகலாவை பொதுமக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில், அவர் இந்தத் தேர்தலில் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார். முதல்வர் என்கிற அதிகாரம் இன்னும் ஒரு மாத காலம் இருக்கும். அதற்குப் பின்னால், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு இல்லாவிட்டாலும், மத்திய ஆட்சியாளர்களின் அதிகார நிழலில் அவர்களால் இருக்க முடியும்.

எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க-வின் ஆதரவு என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பலமாக இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க என்கிற இயக்கத்தை எந்தளவுக்குத் தங்கள் பிடியில் வைத்திருப்பார்கள் என்பதைப் பொறுத்துதான் இவர்களின் அஸ்திவாரம் இருக்கும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-edappadi-palanichamy-oppose-sasikala-strongly

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக