Ad

வியாழன், 4 பிப்ரவரி, 2021

சசிகலா என்ட்ரியால் குழப்பத்தில் குமரி அதிமுக... ஓபிஎஸ் மகனுக்கு மோடியின் பரிசு! - கழுகார் அப்டேட்ஸ்

சசிகலா அணியில் இணைந்து அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சி கொடுக்கத் தயாராகிவருகிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள். சசிகலாவின் தீவிர விசுவாசியான அய்யப்பன் தலைமையில் மாவட்ட மகளிரணி முக்கியப்புள்ளி, ஒன்றிய நிர்வாகிகள் எனப் பெரும் பட்டாளமே அணி திரண்டுவருகிறது.

சசிகலா

அதோடு, அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவரும் சசிகலா அணிக்குத் தாவ முடிவெடுத்திருக்கிறாராம். சசிகலா தமிழகம் வரும்போது அவரை வரவேற்கச் செல்ல வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். இதைத் தடுப்பதற்காக, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரத்திடம் கட்சித் தலைமை பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. சசிகலா வருகையால் கன்னியாகுமரி அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

குழப்பம் குமரியில் மட்டுமா?

ராக்கெட் ராஜா தலைமையிலான பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர், ஹரி நாடார். `வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் போட்டியிடுவார்’ என்று அக்கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஆலங்குளத்தில் இப்போதே பிரசாரத்தையும் அவர் தொடங்கிவிட்டார். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹரி நாடாரை வருமான வரித்துறையினர் வழிமறித்து, சோதனையிட்டார்கள்.

ஹரி நாடார்

அப்போது, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மூன்றரை கிலோ எடைகொண்ட தங்க நகைகளை ஹரி நாடார் அணிந்திருந்திருக்கிறார். அந்த நகைகளை வாங்கியதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். அதில் சில குளறுபடிகள் இருப்பது தெரியவந்ததால், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள். ‘‘ஆலங்குளம் தொகுதிக்குள்ள அண்ணன் வந்தாலே, அவர் நகையைப் பார்க்கத்தான் பெண்கள் திரண்டு வர்றாங்க. நடமாடும் நகைக்கடையா அண்ணன் ஃபேமஸ் ஆகிட்டார். அது வருமான வரித்துறைக்குப் பொறுக்கலையே...’’ என்பது ஹரி நாடார் ஆதரவாளர்களின் குமுறலாக இருக்கிறது.

நகைக்கு வேட்டுவைக்காம விட்டாங்களேனு சந்தோஷப்படுங்க!

1974 முதல் 1984-ம் ஆண்டு வரை திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் சுவாமியின் நகைகள் அர்ச்சகரின் உடந்தையுடன் சிறிது சிறிதாகக் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் சிக்கியவர்களுக்கு கடந்த ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. அப்போது மீட்கப்பட்ட நகைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. ‘அந்த நகைகளை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த வாரம் வழிகாட்டியிருக்கிறது.

Also Read: புதுச்சேரி முதல்வர்வேட்பாளர் பஞ்சாயத்து முதல் சீமான் ரகசியம் உடைக்கும் ராஜீவ் வரை!-கழுகார் அப்டேட்ஸ்

அதன்படி விரைவில் நகைகள் இந்து சமய அறநிலையத்துறை வசம் வரவிருக்கிறதாம். கொள்ளை குறித்து விசாரணை நடைபெற்ற சமயத்தில், பல போலி நகைகள் அதில் மாற்றிவைக்கப்பட்டதாக விவரம் தெரிந்த முதியவர்கள் சொல்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை வசம் தங்கம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்தான், அதன் உண்மைத்தன்மை வெளியே வரும் என்பதால், இப்போதிருந்தே திருவட்டாறு பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.

திரும்பவும் முதல்ல இருந்தா?

திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குள், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஆகிய ஒன்றியங்கள் வருகின்றன. திருத்தணி தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 60,000 பேர் திருத்தணி ஒன்றியத்துக்குள் மட்டும் வருகின்றனர். இதனால், இதைக் கட்சி அமைப்புரீதியாக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என தி.மு.க கொள்கைபரப்புச் செயலாளர் ஆ.ராசா தலைமையிலான மேலிடப் பார்வையாளர் குழு அறிவாலயத்துக்குப் பரிந்துரைத்ததாம்.

நீலகிரி நடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.

இதேபோல, பள்ளிப்பட்டு ஒன்றியத்தையும் பிரிக்க, பரிந்துரை செய்திருந்தனர். ஆனால், பள்ளிப்பட்டு ஒன்றியத்தை மட்டும் பிரித்த அறிவாலயம், திருத்தணி ஒன்றியத்தைப் பிரிக்கவில்லை. ‘அறிவாலயத்திலிருக்கும் மூத்த நிர்வாகி ஒருவரை திருத்தணி ஒன்றியச் செயலாளர் ஆர்த்தி ரவி சரிக்கட்டிவிட்டதாலேயே, ஒன்றியத்தைப் பிரிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர்’ எனக் கொந்தளிக்கிறது திருத்தணி தி.மு.க. இவ்விவகாரம் புகார்களாக செனடாப் சாலைக்கும் அனுப்பப்பட்டிருக்கிறதாம்.

ஏன் பிரிக்கலைனு பிரிச்சு மேய்வாரா தலைவர்?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியைக் குறிவைத்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் காய்நகர்த்திவருகிறார். இவர், இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான மறைந்த ஊர்வசி செல்வராஜின் மகன். சமீபத்தில் அமிர்தராஜ் தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ‘தொகுதியின் வேட்பாளராக அமிர்தராஜை அறிவிக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, ‘ ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு பணக்கார, வெளியூர் வேட்பாளர் வேண்டாம்.

ஊர்வசி அமிர்தராஜ்

வெளியூர் வேட்பாளர்களை நிச்சயம் தோற்கடிப்போம்’ எனப் பெயர் குறிப்பிடாமல் பரபரப்பு போஸ்டர்கள் ஸ்ரீவைகுண்டம் முழுவதும் ஒட்டப்பட்டன. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. அதில், ‘ஊர்வசி அமிர்தராஜை வேட்பாளராக அறிவிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தன்னிச்சையானது. காங்கிரஸ் கட்சி சட்ட விதிகளுக்கு முரணான அந்தத் தீர்மானம் ஏற்கத்தக்கதல்ல’ என்று புதிதாக மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதனால், தூத்துக்குடி காங்கிரஸில் புகைச்சல் தொடங்கிவிட்டது.

காங்கிரஸ்னா பூசல் இல்லாம இருக்குமா... அதுக்கு தூத்துக்குடி மட்டும் தப்புமா?

மசினகுடியில், உணவு தேடி தனியார் தங்கும் விடுதி வளாகத்துக்குள் வந்த ஆண் காட்டுயானையின் மீது தீப்பந்தத்தைத் தூக்கியெறிந்து கொளுத்திய வீடியோ வெளியாகி அனைவரது கண்களையும் குளமாக்கியது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டு, யானையின் இறப்புக்குக் காரணமான மூவர்மீது வழக்கு பதிவுசெய்த வனத்துறையினர், இருவரைக் கைதுசெய்ததுடன், தலைமறைவான மற்றொருவரைத் தேடிவருகிறார்கள்.

காட்டேஜ்களுக்கு நோட்டீஸ்
காட்டேஜ்களுக்கு நோட்டீஸ்

சம்பவம் நடந்த அந்தத் தனியார் தங்கும் விடுதி, அனுமதியில்லாமல் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்ததைக் கண்டறிந்து இரவோடு இரவாக அதற்கு சீல் வைத்தார்கள். தொடர்‌ விசாரணை மேற்கொண்டதில், மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட தனியார் காட்டேஜ்கள் எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்தது தெரியவந்ததாம். அவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. ‘‘இந்தப் பகுதியில் வாழ்ந்துவரும் அப்பாவிப் பழங்குடிகள் சின்னக் குடிசை போட்டால்கூட உடனே பிரித்தெறியும் அரசு அதிகாரிகள், சட்டவிரோதமாகச் செயல்பட்டுவரும் நூற்றுக்கணக்கான காட்டேஜ்களைக் கண்டும் காணாமல் இருந்தது ஏன்... அவை சட்ட விரோதமாக இயங்குவது இப்போதுதான் தெரிந்ததா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.

இப்போவாவது நடவடிக்கை எடுப்பீங்களா... நோட்டீஸ் விட்டதோட கம்முனு இருந்துடுவீங்களா?

தே.மு.தி.க நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளராக மீனாட்சி சுந்தரம் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். விஜயகாந்துக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதாக தே.மு.தி.க-வினர் கொந்தளிக்கிறார்கள். அதிருப்தியை வெளிப்படுத்தியும், கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லையாம். கோபமடைந்த நெல்லை மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சென்னைக்குப் புறப்பட்டு விஜயகாந்த் வீட்டுக்கு ஊர்வலமாகச் சென்றிருக்கிறார்கள்.

மீனாட்சிசுந்தரம்

காவல்துறையினரின் எதிர்ப்பையும் மீறி ஊர்வலமாகச் சென்றவர்களிடம், அவசர அவசரமாகக் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அப்போது, ‘ஒரு வாரத்தில் மாவட்டச் செயலாளரை மாற்றிவிடுகிறோம்’ என்று உத்தரவாதம் கொடுத்து அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

‘தூக்கி அடிக்குறோம் பாத்துக்க’னு சொல்லி அனுப்பிவெச்சாங்களோ?

கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலின்போதெல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்குத் தேர்தல் செலவுக்காகப் பல ஸ்வீட் பாக்ஸ்களை அ.தி.மு.க ஒதுக்கியது. இந்த முறை அந்த ஃபார்முலா கிடையாதாம். ‘2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்களை ஒழுங்காக வேட்பாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்திருந்தால், சில இடங்களில் நம் கூட்டணிக்கு டெபாசிட் பறிபோயிருக்காது. இந்த முறை கட்சித் தலைமைகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் ஏதும் கொடுக்க வேண்டாம். அவர்கள் வேட்பாளர்களின் கடைசி நேரத் தேவைகளை நாமே பார்த்துக்கொள்ளலாம்’ என்று அ.தி.மு.க தலைமை முடிவெடுத்துவிட்டதாம். இதனால், அ.திமு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைமைகள் கடும் அப்செட் என்கிறார்கள்.

‘வட போச்சே’ மொமென்ட்!

பிப்ரவரி 3-ம் தேதி தனது 41-வது பிறந்தநாளை தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் கொண்டாடினார். பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆசி பெற்ற ரவீந்திரநாத், ‘‘அப்பா உங்களை ரொம்ப விசாரிச்சதா சொல்லச் சொன்னாரு’’ என்றாராம்.

புன்முறுவல் பூத்த மோடி, ‘‘பிப்ரவரி 14 தமிழ்நாடு வரும்போது நேர்ல சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, பேனா ஒன்றையும் ரவீந்திரநாத்துக்குப் பரிசளித்தாராம். தன்னிடம் வாழ்த்து பெற வருபவர்களுக்கு பேனா, சாக்லெட் என்று ஏதாவது ஒன்றைப் பரிசளிப்பது மோடியின் வழக்கம். அந்த வகையில், ரவீந்திரநாத்துக்கும் பேனா பரிசளிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

அப்பா எதிர்பார்க்குற பரிசு மட்டும் இப்போ வரை கிடைக்க மாட்டேங்குதே!



source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-on-sasikala-entry-ops-son-meeting-modi-and-other-various-political-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக