Ad

புதன், 23 டிசம்பர், 2020

புதிய வகை கொரோனா: `இந்தியர்களுக்கு பாதிப்பு குறைவுதான்!' - நிலைமையை விளக்கும் பிரிட்டன் வாழ் தமிழர்

2020-ன் தொடக்கத்தில் சீனாவில் ஆரம்பித்த கோவிட்-19 பெருந்தொற்று தற்போது பிரிட்டனில் மையம் கொண்டிருக்கிறது. தன்மை மாறிய புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், கடந்த சில நாள்களாக பிரிட்டனை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. விமானப் போக்குவரத்துகள், பார்சல் சர்வீஸ் போன்றவற்றை பிரிட்டன் நிறுத்தி வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் டிசம்பர் 31-ம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.

A view of part of Regent Street after Britain's Prime Minister Boris Johnson introduced Tier 4 restrictions for London

இந்நிலையில் பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த பயணிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரைத் தாக்கியிருப்பது தன்மை மாறிய புதிய வைரஸா என்பதைக் கண்டறியும் வகையில் அந்த நபரின் சளி மாதிரி புனேவிலுள்ள தேசிய வைரஸ் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களில் பிரிட்டனிலிருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் என்ன நிலை நீடிக்கிறது என்பதை அறிந்துகொள்ள அங்கு 16 ஆண்டுகளாக செவிலியராகப் பணியாற்றும் அருள் நீதிதேவன் தமிழ்க்குமரனிடம் பேசினோம்...

``பிரிட்டன் தலைநகர் லண்டன் மற்றும் கென்ட் ஆகிய பகுதிகளில்தான் தற்போது கோவிட்-19 பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அதன் காரணமாக அந்தப் பகுதிகளில் பொது முடக்கம் அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் டேக் அவே சர்வீஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. பப், தியேட்டர் போன்ற கேளிக்கைக்கான இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இதற்கு முன்பு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் பரவும் ஆர்நாட் (R0) விகிதம் 1: 4 என்றிருந்தது.

மாற்றமடைந்த வைரஸின் பரவலுக்குப் பிறகு, அது 1:16 என்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சராசரி நோயாளிகளின் எண்ணிக்கை பத்தாயிரத்திலிருந்து 35,000-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், இறப்பு விகிதம் ஒரு சதவிகிதமாகவே நீடிக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை சராசரியாக 1,500 -ஆக உள்ளது.

Britain

நிறுத்தப்பட்ட தடுப்பூசி விநியோகம்

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசி விநியோகம் டிசம்பர் 2-ம் தேதியே தொடங்கிவிட்டது. 40 லட்சம் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய வைரஸ் பரவுவதைத் தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் பணிகள் சில நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதால் நானும் அந்தப் பட்டியலில் இருந்தேன். மூன்று நாள்களுக்கு முன்புதான் மீண்டும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. எனக்கும் முதல் டோஸ் வழங்குவதற்கான மாற்றம் செய்யப்பட்ட தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டங்களுக்குத் தடை!

வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் லண்டனை தவிர்த்து மற்ற மாகாணங்களில் உறவினர்களைச் சந்திக்க போக்குவரத்துக்கு சற்று தளர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனில் நியூ இயர் ஈவ் கொண்டாட்டம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு மக்கள் பொதுவெளியில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்க்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பரவல் அதிகரிக்க காரணம் என்ன?

பிரிட்டனில் செப்டம்பர் 3-ம் தேதியே பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதுதான் வைரஸ் பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சிறிய குழந்தைகளை இந்தத் தொற்று அதிகம் பாதிப்பதில்லை. அப்படிப் பாதித்தாலும் அவர்கள் அறிகுறிகளற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால், அவர்கள் வைரஸை மற்றவர்களுக்கு கடத்துபவர்களாக இருப்பார்கள். பள்ளிக்குச் சென்று வந்த குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று இருந்திருக்கும்பட்சத்தில் அது வெளியே தெரியாது. அதே நேரம் வீட்டிலிருந்த பெரியவர்களைப் பாதிக்கிறது.

வைட்டமின் டி குறைபாடு

பிரிட்டன் குளிர்ப்பிரதேசம் என்பதால் இங்குள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் வீடுகளில் கதவு, ஜன்னல்களைக்கூடத் திறக்க முடியாத நிலை நீடிக்கிறது. அதனால் வீடுகளில் காற்றோட்டம் குறைவாகவே காணப்படுகிறது. இதுவும் நோய்ப் பரவல் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. தற்போது 40 முதல் 60 வயதுடையவர்கள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.

லண்டன் வாழ் தமிழர் அருள் நீதிதேவன் தமிழ்க்குமரன்

இந்தியர்கள் தாக்குப்பிடிக்கிறார்கள்!

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆகியோர் எளிதாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகமுள்ள காரணத்தால் இந்தியர்கள் மத்தியில் பாதிப்பு குறைவாகவே காணப்படுகிறது. முகக்கவசம், தனிமனித இடைவெளி, கை கழுவுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள். வைரஸ் கண்டறியும் பரிசோதனையையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு வாரம் இரண்டு முறை ஸ்வாப் டெஸ்ட் செய்யப்படுகிறது.

குறைய வாய்ப்புள்ளதா?

கோவிட்-19 பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தடைகள் குறித்த அதிகாரபூர்வமான முடிவை இன்னும் இரு நாள்களில் அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நோய்ப் பரவல் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

Regent Street, London

Also Read: பரவும் புதிய வகை கொரோனா வைரஸ், அதிகரிக்கும் நோயாளிகள்... கட்டுப்பாடுகள் விதித்த பிரிட்டன்!

பிரிட்டன் அரசின் சார்பில் நோய்த்தொற்று காரணமாக க்வாரன்டீனில் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகள் இலவசமாகச் செய்யப்படுகிறதாம். வேலையிழப்பைச் சந்தித்தவர்களுக்கு அரசாங்கமே நிதியுதவி வழங்கி வருவதாகவும் அங்கு வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.



source https://www.vikatan.com/health/healthy/tamil-male-nurse-from-britain-explains-impact-of-new-coronavirus-strain-infection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக