Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

10 ஆண்டுகள்; 50 சிறுமிகள்! - உ.பியை அதிரவைத்த அரசு இன்ஜினீயரின் பாலியல் வக்கிரம்

உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட், பாண்டா மற்றும் ஹமீர்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 5 முதல் 16 வயது வரையிலான பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ பதிவை விலைக்கு விற்ற அரசு இன்ஜினீயர் ராம்பவான், சி.பி.ஐ. அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில், 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆறு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2008-ம் ஆண்டு 22,500 ஆக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், 2018-ம் ஆண்டு 1,41,764 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகள் கூறுகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2,023 வழக்குகள் பதிவாகி அம்மாநிலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றது.

பாலியல் தொல்லை

கடந்த 2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2018-ம் ஆண்டைவிட 7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், நாள்தோறும் சராசரியாக 87 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருந்தது. கடந்த ஜனவரி மாதம், என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ள தகவல்கள்களின் அடிப்படையில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்றும், இது முந்தைய ஆண்டை விட 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடங்கி மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் வரை உ.பி-யில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் 50 பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆன்லைனில் விற்ற அரசு இன்ஜினீயர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவற்றை டார்க்நெட் (Darknet) வழியாக உலகெங்கிலும் உள்ள பல்வேறு வலைதளங்களுக்கு விற்பனை செய்த உத்தரப்பிரதேச அரசின் இளநிலை பொறியாளர் ராம்பவான் என்பவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் தரப்பில், ``உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா, சித்ரகூட் மற்றும் ஹமீர்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 5 முதல் 16 வயதுக்குட்பட்ட 50 குழந்தைகளை ராம்பவான் என்ற உ.பி. அரசு இன்ஜீனியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் சித்ரகூட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்பவான், பண்டாவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தனியாக இந்த செயல்களில் ஈடுபடவில்லை என்று சந்தேகிக்கிறோம். அதனால், அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினீயர் ராம்பவான் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 8 மொபைல் போன்கள், சுமார் 8 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், பாலியல் தொடர்புடைய பொம்மைகள், ஒரு லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட லேப்டாப்பை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதிலுள்ள இ-மெயில்களை ஆய்வு செய்ததில், இந்திய மற்றும் வெளிநாட்டு நபர்களுடன் சிறார் வதை (child sexual abuse material) குறித்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/up-government-engineer-alleged-sexual-abuse-of-children

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக