Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

தேனியில் மட்டும் முடக்கப்பட்டதா காங்கிரஸ் கட்சியின் டிராக்டர் பேரணி..! - பின்னணி என்ன?

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளை ஒருங்கிணைத்து தேனி கோடாங்கிபட்டியில் இருந்து நேரு சிலை வரை டிராக்டரில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், பேரணியில் கலந்துகொள்பவர்கள் என சந்தேகிக்கப்படும் விவசாயிகளை நேரில் சந்தித்த போலீஸார், ‘டிராக்டருடன் பேரணியில் கலந்துகொள்ளக்கூடாது’ என நோட்டீஸ் கொடுத்தனர். இப்படி, மாவட்டம் முழுவதும் 266 டிராக்டர் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், டிராக்டரை எடுத்துவந்து போராட்டம் நடத்தக் கூடாது என அறுவுறுத்தப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கே.எஸ்.அழகிரி

இந்நிலையில், இன்று காலை, பேரணிக்கான டிராக்டர்கள் வராததால், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என, தேனி பி.சி.பட்டியில் இருந்து நேரு சிலை வரை ஊர்வலம் நடத்த முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்ததால், ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், காவல்துறைக்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க அரசு மற்றும் ஆளும் அ.தி.மு.க அரசிற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கே.எஸ்.அழகிரி

முன்னதாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் ஆட்சியில் தான் உணவு உற்பத்தியின் வளர்ச்சி ஏற்பட்டது. அந்த வளர்ச்சியை துவம்சம் செய்யவே வேளாண் சட்டத்தையும், அதன் மூலம் ஒப்பந்த விவசாய முறையையும் கொண்டுவருகிறார்கள். இது விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும். எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என சொல்லிக்கொண்டு, ஒப்பந்த விவசாயத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், வேளாண் சட்டத்திற்கு மோடி கொடுக்காத விளக்கத்தையெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இன்று நாங்கள் திட்டமிட்டிருந்த பேரணிக்காக, எங்களுடைய கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் மிரட்டியிருக்கிறார்கள். விவசாயிகளை சந்தித்து, டிராக்டரை எடுத்துவரக்கூடாது என கூறியிருக்கிறார்கள். விவசாயிகள், அவர்களிடம் இருக்கும் வாகனத்தில் வர எதற்கு தடை விதிக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்னர், அ.தி.மு.க ஆண்டு விழாவில், தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் 80 கார்களில் அணிவகுத்துச் சென்றார். அதனை தடுக்காத காவல்துறை விவசாயிகளை மிரட்டிக்கொண்டிருக்கிறது.” என்றார் காட்டமாக.

கே.எஸ்.அழகிரி

டிராக்டர் பேரணி துவங்க இருந்த கோடாங்கிபட்டி பகுதி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தில் தொகுதியான போடி தொகுதிக்கு உட்பட்ட பகுதி. இதனால், பேரணி குறித்து கடந்த ஒருவாரமாக தகவல் திரட்டிய மாநில உளவுப்பிரிவு போலீஸார், 100ற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணியில் கலந்துகொள்ளலாம் என கோட்டைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறது. இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களாக, பேரணிக்கு வருபவர்கள் என சந்தேகிக்கப்படும் டிராக்டர் உரிமையாளர்களை கிராமம் கிராமமாக கணக்கெடுத்து, காவல்துறை தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக, நூற்றிற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் டிராக்டருடன் அணிவகுத்தால், அது தேசிய அளவில் செய்தியாக மாறிவிடும் என்பது ஒருபுறம் என்றால், ஓ.பி.எஸ் தொகுதியில் இப்படியான நிகழ்வு நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே காவல்துறை திட்டமிட்டு பேரணியை முடக்கியதாக குற்றம்சாட்டுகின்றனர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.!

பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, ’மற்ற மாவட்டங்களில் டிராக்டர் பேரணி நடத்தினோம். தேனியில் தான் காவல்துறை சர்வாதிகாரி போல நடந்துகொள்கிறது’ என்றார் கே.எஸ்.அழகிரி. ஊர்வலத்திற்கு முயன்ற கே.எஸ் அழகிரி உட்பட கட்சியினரை போலீஸார் கைது செய்யும் போது ஓ.பி.எஸ்’ற்கு எதிராக கண்டன கோஷங்கள் சற்று அழுத்தமாகவே எழுப்பப்பட்டது.



source https://www.vikatan.com/news/politics/congress-partys-tractor-rally-disabled-because-of-the-ops-assembly-constituency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக