Ad

சனி, 24 அக்டோபர், 2020

சுஷாந்த் வழக்கு: `தகவல்களை நாங்கள் கசியவிடவில்லை!’ - மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணை அமைப்புகள்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம், பாலிவுட்டில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவரது மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரியா உள்ளிட்டோர் கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங்

இதையடுத்து, பாலிவுட்டில் இருக்கும் போதை கலாசாரம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்து, மாநிலங்களவையில், பா.ஜ.க. வினருக்கும், சமாஜ்வாடி கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் வரை ஏற்பட்டது. இந்த வழக்கில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து மத்திய புலனாய்வு பிரிவு (CBI) விசாரித்து வரும் நிலையில், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) விசாரித்து வருகிறது, மேலும் பாலிவுட் நடிகை ரியாவுக்கு எதிரான பண மோசடி குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை (ED) விசாரித்து வருகிறது.

பல்வேறு அமைப்புகள், வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தகவல்களை செய்தி சேனல்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. "உணர்ச்சிமிக்க முக்கியமான விசாரணை தகவல்களை செய்தி சேனல்கள் வெளியிட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தில் சேனல்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும்" ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் குழு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

முதற்கட்டமாக, இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, "சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பான தகவல்களை, அந்த வழக்கை விசாரித்து வரும் புலனாய்வு அமைப்புகள் தான் கசியவிட்டிருக்க வாய்ப்புள்ளது" என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரியா - சுஷாந்த்

இந்த வழக்கு, வெள்ளிக்கிழமை மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திபன்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் அரசுத் தலைமை வழக்கறிஞர் அனில் சிங், "சி.பி.ஐ., அமலாக்கத் துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனமும் தகவல்களை கசியவிட வாய்ப்புகள் இல்லை. எங்கள் பொறுப்புகளை நாங்கள் அறிவோம்" என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், "நடுநிலையோடு செயல்பட்டு வந்த ஊடகங்களில் சில, தற்போது ஒரு சார்புடையவையாக மாறிவிட்டது. சிலர் தங்கள் எல்லை எதுவரை என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் எல்லை அறிந்து அதற்குள் செயல்பட வேண்டும்" என்ற்னர்.



source https://www.vikatan.com/news/judiciary/we-didnt-leak-information-cbi-ncb-ed-tell-bombay-high-court-in-sushant-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக