Ad

வியாழன், 4 பிப்ரவரி, 2021

விராட் கோலி... 1334 நாட்களாகத் தொடரும் நம்பர் 1 சாதனை!

விராட் கோலி என்றதும் புதிய சாதனைகளும், அதிரடி ஆட்டமும்தான் எல்லோரின் நினைவுக்கும் முதலில் வரும்.

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக சாதனைகள் அனைத்திற்கும் புதிய மைல்கல்லை உருவாக்கி வருபவர் ரன்மெஷின் விராட் கோலி. இந்திய அணியில் 2008-ம் ஆண்டு தன் காலடியை பதித்த விராட் இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக இன்று மாறியிருக்கிறார்.

டிசம்பரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் 242 இன்னிங்ஸ் விளையாடிய கோலி அதிவேகமாக 12,000 ரன்களைக் கடந்தார். முன்னதாக சச்சின் 300-வது இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்திருந்தார். இது இல்லாமல், ஒரு நாள் போட்டியில் கோலி 43 சதங்களை விளாசியிருக்கிறார். இது, சச்சினை விட 6 சதங்கள் மட்டுமே குறைவு.

இப்போது சத்தமில்லாமல் விராட் கோலி படைத்திருக்கும் சாதனை, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் தன் பெயரை தக்கவைத்திருப்பதுதான். 2017-ம் ஆண்டு, ஜூன் 11-ம் தேதி டேவிட் வார்னரை 862 புள்ளிகளுடன் பின் தள்ளிய விராட் கோலி இன்று வரை முதலிடத்திலேயே இருந்து வருகிறார். மொத்தமாக இன்று வரை 1334 நாட்கள். இது, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கு மேலாகும்.

தற்போது, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் விராட் கோலி, 842 புள்ளிகளுடன் ரோஹித் ஷர்மா என முதல் இரண்டு இடங்களை இந்திய வீரர்களே தக்கவைத்துள்ளனர். இந்த வரிசையில் மூன்றாவதாக 837 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் இருக்கிறார்.

விராட் கோலி

இதுமட்டுமின்றி ரன்மெஷின் விராட் கோலி டெஸ்ட்டில் 862 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், டி20 போட்டியில் 697 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் இருக்கிறார்.

கிரிக்கெட் வரலாறுகளில், இந்திய அணி சொதப்பும் சமயங்களில் கங்குலி இருக்கிறார், சச்சின் இருக்கிறார், தோனி இருக்கிறார் என்ற ரசிகர் பட்டாளம் இப்போது எங்கள் கோலி இருக்கிறார் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறது. இதற்குப்பெரும் சான்று இந்த சாதனைகளின் பட்டியல்.



source https://sports.vikatan.com/cricket/virat-kohli-continues-to-be-the-number-one-batsman-for-1334-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக