Ad

வியாழன், 4 பிப்ரவரி, 2021

`72 மணி நேரம் முன்பு கொரோனா டெஸ்ட்; செய்யாவிடில் கல்லூரிக்குள் அனுமதியில்லை!' - குழப்பும் கல்லூரிகள்

பிப்ரவரி 8-ம் தேதி, முதல் கல்லூரிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், ``72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து அதற்கான முடிவுகளோடு வந்தால்தான் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்” என சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பப்படுவதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இத்தனை நாள்களாக ஆன்லைனில் செயல்பட்டு வந்த பள்ளி கல்லூரிகள் ஒவ்வொரு கட்டமாக திறக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜனவரி 19-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 8-ம் தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் எனவும் அவற்றைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் இயங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.

கல்லூரி மாணவர்கள்

ஏற்கெனவே 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ``கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வகுப்பில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பின் ஒரு தொகுதிக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் பிரிக்கப்பட வேண்டும். ஆனால் சமூக இடைவெளியைப் பின்பற்றி கூடுதலான மாணவர்கள் அமர்ந்து பயில வகுப்பறையில் கூடுதல் இடம் இருந்தால் கூடுதல் இருக்கைகளை அமைப்பதன் மூலம் அதிக மாணவர்களுக்கு இடம் அளிக்கலாம். இதுபோன்ற நிலையில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள் அமைத்து சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு அறைகளில் கற்றுக் கொடுக்கலாம்.

அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இணையதள வழி- தொலைதூர கற்றல் முறை தொடரும். மாணவர்கள் இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அதற்கு அனுமதி வழங்கலாம். மாணவர்களின் வருகையைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தைச் சார்ந்து இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.” - இப்படியான சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஆனால், 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று வந்தால்தான் பள்ளிக்குள் அனுமதி என்று அதில் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், கல்லூரி திறப்பதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என ரிசல்ட் கொடுத்தால்தான் உள்ளே அனுமதிப்போம் என சில கல்லூரிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பா? தற்போது வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் அப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறதா? அப்படியெனில், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏன் இந்த விஷயம் சொல்லப்படவில்லை என ஏகப்பட்ட குழப்பங்கள்... சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

A health worker takes a nasal swab sample to test for COVID-19

பாதுகாப்பு கருதி தங்கள் பெயர் மற்றும் கல்லூரியின் பெயரை வெளியிடாமல் பேசிய அந்த மாணவர்கள், ``அதிகாரபூர்வமாக இப்படியோர் அறிவிப்பு வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், எங்கள் கல்லூரியில் பரிசோதனை செய்து அதற்கான முடிவோடு வந்தால்தான் அனுமதிப்போம் என்கிறார்கள். அதையும் வெளிப்படையாக அறிவிக்காமல் மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையியில் வாட்ஸ் அப்பில் அனுப்புகின்றனர். அப்படி ஏன் அனுப்புகின்றனர் என்பது தெரியவில்லை. அதுமட்டுமல்ல, 72 மணி நேரத்துக்கு முன்பு ஏன் பரிசோதனை செய்யச் சொல்கிறார்கள் என்பதும் புரியவைல்லை.

பரிசோதனை செய்ததற்குப் பிறகு, கொரோனா வராது என்று என்ன நிச்சயம்? 8-ம் தேதியிலிருந்து தினமும் கல்லூரிக்குச் செல்லவிருக்கிறோம். தொடர்ந்து கல்லூரி செல்லும் ஏதாவதொரு நாளில் கொரோனா ஏற்படலாம் அல்லவா? எல்லாவற்றையும் விடுங்கள்... இத்தனை நாள்களாக நாங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தோம்... கொரோனா பரிசோதனை அவசியம் என்று சொல்லும்போது பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது கொரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதே” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதையடுத்து பல்வேறு கல்லூரிகளைத் தொடர்புகொண்டு இப்படி ஓர் அறிவிப்பு விடப்பட்டிருக்கிறதா என விசாரித்தோம், ``அப்படி எந்த அறிவுப்பும் வரவில்லை. இன்னும் வழிகாட்டு நெறிமுறைகளே எங்களுக்கு வரவில்லை” என்று அதிர்ச்சி குண்டை தூக்கிப் போட்டனர்.

அமைச்சர் கே.பி.அன்பழகன்

Also Read: `முதல் டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?!' - மருத்துவ விளக்கம்

உடனடியாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனைத் தொடர்புகொண்டு இதுகுறித்துக் கேட்டோம், ``72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்தால் நல்லதுதானே... சட்டமன்றத்துக்குச் செல்வதற்கு முன்பு நாங்கள்கூட கொரோனா பரிசோதனை செய்துகொண்டுதான் செல்கிறோம். ஆகையால் அதில் தவறு கிடையாது.” என்றார் கூலாக. `வழிகாட்டு நெறிமுறையில் அப்படி கூறப்பட்டுள்ளதா? இது அதிகாரபூர்வ அறிவிப்பா? இன்னும் வழிகாட்டு நெறிமுறைகளே வரவில்லை என்கிறார்களே...’ என்று கேட்டதற்கு, ``அதிகாரபூர்வமாக அப்படி அறிவித்துள்ளார்களா எனத் தெரியவில்லை. விசாரித்துச் சொல்கிறேன்” என்று இணைப்பைத் துண்டித்தவர் அதன் பிறகு நம் அழைப்பை ஏற்கவில்லை.

தெளிவான அறிவிப்புகளை வெளியிடாமல் மாணவர்களை இப்படி அலைக்கழிப்பது நியாயம்தானா?



source https://www.vikatan.com/government-and-politics/education/confusions-over-colleges-demand-on-students-to-take-the-covid-19-test-prior-to-72-hours

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக