மியான்மரில் ராணுவத்தினரால் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆங் சாங் சூக்கி உட்பட முக்கிய அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் ஆங் சாங் சூக்கியின் தேசிய ஜனநாயக் லீக் கட்சியினர் ஆட்சியில் இருந்த நிலையில்தான், அந்த ஆட்சியை கவிழ்த்து ராணுவத்தினர் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு பிறகு நாட்டில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அரசு தொலைக்காட்சி சேவையும் முடக்கப்பட்டுள்ளது. வங்கி சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து தனது ஆதரவாளர்கள் போராட வேண்டும் எனவும் ஆங் சாங் சூக்கி தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறது ராணுவம்?
2015ஆம் ஆண்டு சூக்கி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வந்தது. அதன்பின் தற்போது 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற வரும் திங்களன்று நாடாளுமன்றம் கூடவிருந்த வேளையில்தான் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது. இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு ராணுவம் சொல்லும் காரணம் தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என்பதுதான்.
2015ஆம் ஆண்டு பெற்ற வெற்றியைக் காட்டிலும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரிதான ஒரு வெற்றியை தான் சூக்கியின் தேசிய ஜனநாயக் லீக் கட்சி பெற்றது. இந்த தேர்தலில் அவர்கள் 83 சதவீத வாக்குகளை பெற்றிருந்தனர். இருப்பினும் ஆட்சிக் கவிழ்ப்பு செய்துள்ள ராணுவம், இப்போது அதிகாரத்தை ராணுவத் தலைவர் ஜெனரல் மிங் ஆங் லெய்ங்கிடம் ஒப்படைத்துள்ளது.
ஓய்வுப் பெறும் தருவாயை நெருங்கும் ஜெனரல் மிங் ஆங் லெய், நியாயமான ஒரு தேர்தலை நடத்தி அதில் வெற்றிப் பெறும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐ.நா இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் என பல்வேறு நாடுகள் ராணுவத்தினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்
மியான்மரின் வரலாறு!
மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யப்பட்டு ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டது என்ற செய்தி இன்றைய தேதியில் நமக்கு புதியதாக இருந்தாலும், அந்த நாட்டிற்கு ஆட்சிக் கவிழ்ப்பு என்பதும், ராணுவ ஆட்சி என்பதும் புதியதல்ல. மியான்மருக்கு 1948ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து விடுதலை கிட்டியது. இருப்பினும் நாட்டில் அமைதி நிலவவில்லை. அதன்பின் 1962ஆம் ஆண்டு அப்போதைய ராணுவத் தலைவர் நி வின் தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து அதிகாரம் ராணுவத்திடம் சென்றது.
அதன் பிறகு 1988ஆம் ஆண்டு ஜனநாயகத்துக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடைபெற்றது அதில், கலந்து கொண்டார் ஆங் சாங் சூக்கி.
கிட்டதட்ட 15 வருடங்கள் வீட்டுக் காவலில் இருந்தவர் ஆங் சாங் சூக்கி. இவருக்கு 1991ஆம் ஆண்டு நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் நடத்தப்பட்டவிதம் குறித்து இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இவர்மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
இவரின் தந்தை ஆங் சாங் நாட்டின் விடுதலை போராட்டத்தில் கொல்லப்பட்டவர். 1988ஆம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற போராட்டத்தில் பாதுகாப்பு படைகள் தனது அடக்குமுறையை காட்டியது, பலர் கொல்லப்பட்டனர். 1989-ம் ஆண்டு ஆங் சாங் சூக்கி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். அடுத்த ஆண்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆட்சியை அவரிடம் கொடுக்க மறுத்துவிட்டது ராணுவம்.
2010ஆம் ஆண்டு வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார் சூக்கி, அதன்பின் 2012ஆம் ஆண்டு இடைத்தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஆனார்.
அதனைதொடர்ந்து 2015ஆம் ஆண்டு சூக்கியின் தலைமையில் அவரின் தேசிய ஜனநாயக் லீக் கட்சி வெற்றி பெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கு அந்த தேர்தல் வித்திட்டது. தேர்தலில் வெற்றி பெற்றாலும் சூக்கியால் நாட்டின் அதிபராக பதவியேற்க முடியவில்லை. இதற்கு காரணம் அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பது. எனவே மியான்மர் நாட்டின் தலைமை ஆலோசகரானார். அவர் அரசமைப்புபடி அதிபராக செயல்படவில்லை என்றாலும், மியான்மரின் உயரிய தலைவராகவே செயல்பட்டு வந்தார்.
சூக்கியின் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ராணுவம் தனது அதிகாரத்தை செலுத்தி வந்ததாகவே கூறப்படுகிறது. மியான்மர் அரசமைப்பு படி நாடாளுமன்றத்தில் கால் பங்கு எண்ணிக்கை ராணுவத்தினருக்கானது. அதேபோல முக்கிய அமைச்சரவையின் பொறுப்புகளும் ராணுவத்தினரிடமே இருக்கும்.
2017-ம் ஆண்டு ரகைன் நகரில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கூறப்பட்டு ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ரோஹிங்கியா இனக்குழு மக்கள் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல நேர்ந்தது.
மியான்மரில் ரோஹிங்கியா இனத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நாவும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது நாட்டில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை செய்து ஒருவரிடத்திற்கு ராணுவம் பொறுப்பிலிருக்கும் என்று கூறியுள்ளது.
source https://www.vikatan.com/news/international/history-of-army-take-over-myanmar-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக