பீகார் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகிவிட்டன. ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க இணைப்பிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைக்கவிருக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து அமைத்த மகா கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. மற்ற கட்சிகள் எட்டு இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன.
இதில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களைக் கைப்பற்றி, பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பீகார் தேர்தலைச் சந்தித்தது. பா.ஜ.க 74 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. இந்தக் கூட்டணியில் அங்கம்வகித்த மற்ற இரண்டு கட்சிகளும் தலா நான்கு இடங்களைப் பெற்றுள்ளன. தொடர்ச்சியாக மூன்று முறை பீகாரின் முதல்வராக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருக்கு இந்தத் தேர்தல் சறுக்கலாகவே அமைந்திருக்கிறது. கடந்த 2015 தேர்தலில் 71 இடங்களைக் கைப்பற்றிய ஐக்கிய ஜனதா தளம் இந்தத் தேர்தலில் வெறும் 43 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. ``இந்தச் சறுக்கலுக்குக் காரணம், ஐக்கிய ஜனதா தளத்தோடு கூட்டணிவைத்திருக்கும் பா.ஜ.க-தான்'' என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் பரவிவருகிறது.
பா.ஜ.க எப்படிக் காரணமாக இருக்கும்?
மத்தியில் ஆட்சிபுரியும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம்வகிக்கிறது லோக் ஜன சக்தி கட்சி. நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், லோக் ஜன சக்தி தனித்துப் போட்டியிட்டது. ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், பல இடங்களில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு விழ வேண்டிய வாக்குகளைப் பிரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி, ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட இடங்களில் மட்டுமே எதிர்த்துப் போட்டியிட்டது. பா.ஜ.க-வை எதிர்த்து வெறும் மூன்று இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.
Also Read: சுஷாந்த் புகைப்படத்துடன் 30,000 மாஸ்க்குகள்... அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறதா பா.ஜ.க?
``தொடர்ந்து 15 ஆண்டுகளாக பீகாரை ஆட்சி செய்துவரும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைப் பலவீனப்படுத்த லோக் ஜன சக்தியைத் தனித்துப் போட்டியிடவைத்து, பா.ஜ.க சூழ்ச்சி செய்திருக்கிறது'' என்கிற பேச்சுகள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பரவலாகச் சொல்லப்படுகின்றன.
இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை இட்டிருந்தார் சிராக் பாஸ்வான். முதல் பதிவில், ``லோக் ஜன சக்தியின் வேட்பாளர்கள் அனைவரும் எந்தவொரு கட்சியின் ஆதரவும், கூட்டணியுமின்றி தனித்துப் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. `பீகார்தான் முன்னுரிமை' என்ற முழக்கத்துடன் நாங்கள் தேர்தலைச் சந்தித்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி வலிமை பெற்றிருக்கிறது'' என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட், `பீகாரில் கட்சியை வலுப்பெறச் செய்வதற்காகத்தான் லோக் ஜன சக்தி தனித்துப் போட்டியிட்டது' என்ற பொருள்படும்படி இருந்தது.
இதைத் தொடர்ந்து இன்னொரு கருத்தையும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் சிராக்.
சிராக் பாஸ்வானின் இந்தப் பதிவு ஐக்கிய ஜனதா தளத் தொண்டர்களைக் குழப்பமடையச் செய்திருக்கிறது. `ஒருவேளை நம் கட்சியை பலவீனப்படுத்த லோக் ஜன சக்தியை பா.ஜ.க பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்படுவது உண்மைதானா?' என்கிற சந்தேகத்தையும் நிதிஷ் குமார் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பேட்டியளித்த சிராக் பாஸ்வான், ``மற்ற கட்சிகளைப்போலவே நாங்களும் அதிக தொகுதிகளை வெல்ல வேண்டுமென்ற நோக்கத்துடனேயே செயல்பட்டோம். ஆனால், இந்தத் தேர்தலில் எங்களது குறிக்கோள், பா.ஜ.க-வை பீகாரில் பிரதான கட்சியாக்க வேண்டுமென்பதுதான். அதற்கான பலன் கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது'' என்று கூறினார். முன்னதாக ``எப்போதுமே நிதிஷ் குமாரை வீழ்த்துவதுதான் லோக் ஜன சக்தியின் குறிக்கோள்'' என்றும் சிராக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: பீகார் தேர்தல்: 375 கோடிஸ்வரர்கள்... 61 `ரெட் அலர்ட்' தொகுதிகள் - அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!
இது தொடர்பாகப் பேசிய பீகார் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுஷில் மோடி, ``20 தொகுதிகளுக்கு மேலாக லோக் ஜன சக்தி கட்சி ஐக்கிய ஜனதா தளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், எங்களுக்கும், லோக் ஜன சக்தி கட்சிக்கும் ரகசியப் புரிதல் இருந்தது என்று சொல்வதெல்லாம் உண்மை கிடையாது. லோக் ஜன சக்தி கட்சி, மத்தியிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடருமா என்பது குறித்து நாங்கள் முடிவுவெடுக்க வேண்டியிருக்கும். ஆனால், பீகாரிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர்கள் இல்லை'' என்று கூறினார்.
இந்தநிலையில் பீகார் தேர்தலைக் கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டும் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன.
மகாராஷ்டிர தேர்தலில் என்ன நடந்தது?
மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகளாகக் கூட்டணியிலிருந்த பா.ஜ.க-வும் சிவசேனாவும், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலையும் கூட்டணியாகவே எதிர்கொண்டன. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் இருக்கின்றன. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும். பா.ஜ.க-வுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. மொத்தமாக இந்தக் கூட்டணிக்கு 161 தொகுதிகள் கிடைத்தன. ஆனாலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது. காரணம், முதல்வர் பதவி வேண்டுமென்பதில் இரு கட்சிகளும் உறுதியாக இருந்தன. பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அனைத்தும் தோல்வியில் முடியவே, பா.ஜ.க-சிவசேனா கூட்டணி முறிந்தது.
Also Read: ஜோ பைடன்: சோகம் நிறைந்த பர்சனல் பக்கங்கள்; சவால் நிறைந்த அரசியல் பக்கங்கள் - அதிபரானது எப்படி?
அதைத் தொடர்ந்து, தங்கள் கட்சியோடு கருத்தியல் முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது சிவசேனா. தற்போது நடந்து முடிந்திருக்கும் பீகார் தேர்தலில் 43 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கும் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி அளிக்க பா.ஜ.க ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது.
பா.ஜ.க-வின் நிலைப்பாடு என்ன?
தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் முன்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த பீகார் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் விஜய்வர்கியா, (Vijayvargiya) ``தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆட்சியமைப்பது குறித்தும், யார் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது குறித்தும் முடிவெடுப்போம்'' என்று பேசியிருந்தார். இதையடுத்து, `தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வராக நிதிஷ் குமார் இல்லாமல் வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறதா?' என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு, ``பா.ஜ.க உறுதியளித்ததைப்போலவே நடந்துகொள்ளும்'' என்று பதிலளித்தார். அதாவது, `வெற்றிபெற்றால் நிதிஷ் குமார்தான் முதல்வர்' என்று பா.ஜ.க ஏற்கெனவே சொல்லியிருந்ததை உறுதிப்படுத்தும்விதமாக அமைந்தது விஜய்வர்கியாவின் பதில்.
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பீகார் மாநில பா.ஜ.வினர், ``பிரதமர் மோடி அலைதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம். பா.ஜ.க பீகாரிலும் சாதித்துவிட்டது'' என்று பல கருத்துகளை முன்வைத்து இந்த வெற்றியைக் கொண்டாடினர்.
இந்தநிலையில் சிவசேனா கட்சியின் ராஜ்ய சபா எம்.பி சஞ்சய் ராவத், பீகார் தேர்தல் தொடர்பாக நேற்று (10.11.2020) சில கருத்துகளைத் தெரிவித்தார். ``நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றால், அவர் நிச்சயம் சிவசேனாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வைவிட நாங்கள் குறைந்த இடத்தில் வெற்றி பெற்றாலும் முதல்வர் பதவியைக் கோரினோம். ஆனால், தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியின்படி பா.ஜ.க நடந்துகொள்ளவில்லை. அதே சூழல் தற்போது பீகார் தேர்தலில் வந்திருக்கிறது. கட்சி பலத்தைப் பார்க்காமல் நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்குவோம் என்று பா.ஜ.க முன்பு கூறியிருந்தது. பீகாரில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. காரணம், வாக்குறுதியை நிறைவேற்றாமல் போனால் என்ன நடக்கும் என்பதை மகாராஷ்டிராவில் சிவசேனா ஏற்கெனவே காட்டியிருகிறது'' என்றார் சஞ்சய் ராவத். மேலும் பேசிய அவர்...
இதைத் தொடர்ந்து இன்று (11.11.2020) காலையில் பேட்டியளித்த பீகார் மாநில பா.ஜ.க-வின் தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால், ``நிச்சயம் நிதிஷ் குமார்தான் முதல்வர். இதில் மறுபரிசீலனை செய்வதற்கான வேலையே இல்லை. கூட்டணியில் பெரியவர், சிறியவர் என்பதற்கான வேலையும் இல்லை'' என்று பேசியிருக்கிறார். இதன் மூலம் நிதிஷ் குமார்தான் பீகாரின் முதல்வர் என்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியிருக்கிறது.
இந்தநிலையில் பீகார் அரசியல் சூழல் குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், ``மகாராஷ்டிராவில் செய்த தவற்றை பீகாரில் மீண்டும் பா.ஜ.க செய்யாது என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், சில மாதங்கள் கழித்து நிதிஷ் குமாரை ஏதாவது காரணம் காட்டி பதவி விலகச் செய்தோ அல்லது ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் சிலரை பா.ஜ.க-வில் இணையச் செய்தோ, தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கும் பணியை பா.ஜ.க செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இவ்வளவு ஏன்... காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வளைத்துக்கூட ஆட்சியமைக்க பா.ஜ.க வேலைகள் செய்யும்'' என்று அதிர்ச்சி தருகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பீகாரில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவுசெய்யுங்கள்..!
source https://www.vikatan.com/government-and-politics/election/is-chirag-paswan-messed-up-nitish-kumar-in-bihar-made-bjps-job-easier
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக