கடந்த மாதங்களில் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகப்படியான கொரோனா தொற்று இருந்தது. இதையடுத்து அங்கு பொதுமுடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். இப்போது எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில், ``அனைத்தும் சாதகமாக நடந்தால் முதல்வரும், துணை முதல்வரும் நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசித்து கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவு செய்வர். ஆனால் கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படாது” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா அரசு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த திட்டமிட்டுள்ளது. தளர்த்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுப்பாடுகளை நான்கு கட்டமாக தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா மூன்றாவது அலை அபாயம் இருப்பதால் கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக தற்போது 11 மணி வரை திறந்திருக்கும் கடைகள் பிற்பகல 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். தற்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக மேலும் சில கடைகள் திறக்க அனுமதிக்கப்படலாம். மூன்றாவது கட்டமாக மதுபான கடைகள், ஹோட்டல்கள், பீர் பார்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்படும். ஹோட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நான்காவது கட்டமாக புறநகர் ரயில்கள், வழிபாட்டுத்தலங்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
கட்டுப்பாடுகளை தளர்த்தும் முன்பாக கொரோனா தொற்றின் அளவு உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று விகிதத்தை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வருவது, இறப்பு விகிதம், ஐ.சி.யு-வில் உள்ள ஆக்ஸிஜன் அளவு போன்றவை கட்டுப்பாடுகளை தளர்த்தும் முன்பு கவனத்தில் கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே மும்பையில் முதல் முறையாக கொரோனா தொற்று 1100-க்கும் கீழே குறைந்துள்ளது. அதே சமயம் 15 மாவட்டங்களில் கொரோனா பரவல் இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது. எனவே இப்பகுதியில் மட்டும் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தொடருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
source https://www.vikatan.com/news/india/corona-restrictions-in-maharashtra-will-be-lifted-in-four-phases
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக