தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது. சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஆளுநர் தனது உரையை தொடங்கும் முன்னதாக, தி.மு.க வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி ஆளுநர் கோரிக்கை வைத்தார். எனினும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க வினர், வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த தி.மு.க. வினர் செய்தியாளரைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், ``ஆளுநர் உரையில் 7 பேர் விடுதலை குறித்த தகவல் எதுவும் இடம் பெறவில்லை. அது குறித்து ஆளுநர் பேசாததால் வெளிநடப்பு செய்தோம். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தி.மு.க முழுமையாக புறக்கணிக்கும்” என்றார்.
தொடர்ந்து தனது உரையை தொடங்கிய ஆளுநர், ``இது ஒரு பேரிடர் காலம். கொரோனா பெருந்தொற்றை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. கொரோனா பரிசோதனை முறையாக செய்யப்பட்ட மாநிலமாக தமிழக திகழ்கிறது. தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என முதல்வர் அறிவித்ததை பாராட்டுகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``கொரோனா காலக்கட்டத்தில் காவல்துறையினரின் செயல்பாடு பாராட்டதக்கது. விரைவில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காவல்துறை தயார் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும்” என்றார்.
Also Read: சட்டப்பேரவை தேர்தல்: தி.மு.க-வில் 8 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அமைப்பு! #NowAtVikatan
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, வேதா நிலையம் நினைவு இல்லமாக்கப்பட்டது, ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்தது உள்ளிட்டவற்றை ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். தமிழ் மொழியை வளர்ப்பது, அரசின்குறிக்கோளாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார் ஆளுநர். `தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமைக்கான விருதை பெற்றுள்ளது. இது முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தை காட்டுகிறது’ எனக் குறிப்பிட்டார் ஆளுநர்.
தொடர்ந்து பேசிய ஆளுநர், ``மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்காமல், தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது. நிவர், புரெவி புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும். ” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-assembly-started-with-governor-speech-dmk-walked-out
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக