Ad

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

கோவில்பட்டி: சின்னையா பட்டம்; காலில் விழுந்த நாதஸ்வரக் கலைஞர்... பதறிய ஸ்டாலின்!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் `உங்கள் தொகுதியில் நான்’ நிகழ்ச்சி, கோவில்பட்டியில் நடைபெற்றது. காலை 10.05-க்கு மேடைக்கு வந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். மேடையிலிருந்து கீழே இறங்கி இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்களுக்கு கை கொடுத்து, செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது, நடந்து செல்லும் வழியில் நின்று ஸ்டாலினைப் பார்த்து கையசைத்து சிரித்த, 5 வயது சிறுமியை அவர் தூக்கினார். மேடையேறிய ஸ்டாலின், சரியாக 10.45 மணிக்கு பேச ஆரம்பித்தார். முன்னதாக சாதனையாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்வு நடந்தது.

ஸ்டாலின்

இதில், நாதஸ்வரக் கலைஞரான மாரியப்பனுக்கு சால்வை அணிவித்த பிறகு, ஸ்டாலின் காலில் விழுந்தார் மாரியப்பன். பதறிப்போன ஸ்டாலின், `யார் காலிலும் விழக்கூடாது. இனிமேல் இப்படிச் செய்யாதீங்க’ எனச் சொன்னார். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த 9 பேர் தங்கள் பகுதிகளின் குறைகளைக் கூறினர். ஆனால், விளாத்திகுளம் தொகுதி பிரச்னை குறித்துப் பேசவில்லை.

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபு, ``தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100 நாள்கள் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். 100-வது நாளில் கலெக்டர் ஆபிஸில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திட பேரணியாகச் சென்றார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும், தடியடி, துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டவர்களுக்கும் அரசு கண்துடைப்புக்காக அரசு வேலை கொடுக்கப்பட்டிருக்கு.

``’நான் யாருக்கும் அடிமை இல்லை. என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது' எனச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் 14-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்பு தைரியமாக பேசத் துணிச்சல் உண்டா? அவரால் பேச முடியுமா?’’ - ஸ்டாலின்

தகுதியின் அடிப்படையில் வேலை தரணும். உயிரிழந்த 13 பேரின் நினைவாக நினைவுத்தூண் அமைக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதிக்கும் இதுபோன்ற ஆலைகளைத் தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெற வேண்டும்" என்றார்.

ஸ்டாலின்

இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், ``நூறு நாள்களாகத் தொடர்ந்து போராடிய மக்களைச் சந்தித்து எந்த அதிகாரியோ, அமைச்சரோ பேசவில்லை. மக்களின் நூறாவது நாள் போராட்டத்தில் காவல்துறையை ஏவி மக்களை காக்கா, குருவியைப் போல சுட்டுக் கொன்றனர். போராட்டத்தன்று கலெக்டர், ஆபிஸில் இல்லாமல் வெளியேறிவிட்டார். `எனக்கே தெரியாது. டி.வியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூடு நடந்ததை தெரிஞ்சுக்கிட்டேன்’ எனச் சொன்னார் முதல்வர் பழனிசாமி. மேலிடத்திலிருந்து உத்தரவு வராமல் எப்படி துப்பாக்கிச்சூடு நடத்த முடியும்? தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளும் வாபஸ் பெறப்படும். ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என்றார்.

Also Read: `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ - நசரேத்பேட்டை #PhotoAlbum

கோவில்பட்டியைச் சேர்ந்த விழித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வெங்கடேசன், ``பெற்றோர்கள் கண் பார்வையற்றவர்களாக இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றவர், ``ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கோரிக்கையை நிறைவேத்துங்க `சின்னையா' " என்றார். `சின்னையா' என அழைத்ததும் ஸ்டாலின் புன்னகைத்தார். இறுதியாகப் பேசிய ஸ்டாலின், ``இதே கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாவும் அமைச்சராவும் இருக்கிறார் கடம்பூர் ராஜூ. அவர் கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றியத் திட்டங்கள் குறித்து சொல்ல முடியுமா? மக்களின் பல பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கு. இவர் மட்டுமல்ல, எல்லா அமைச்சர்களின் தொகுதியும் எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

வாழை, கரும்புகளை எடுத்துச் செல்லும் மக்கள்

என்னைப் பார்த்து முதல்வர் பழனிசாமி `நடிக்கிறேன்' என்கிறார். நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் யாருக்கும் அடிமை இல்லை. என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது' எனச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் 14-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்பு தைரியமாக பேசத் துணிச்சல் உண்டா? அவரால் பேச முடியுமா?" என்றார். பிற்பகல், 12.03-க்கு பேச்சை நிறைவு செய்தார். ஸ்டாலின் கிளம்பிச் சென்றதும், தோரணத்துக்காக கட்டியிருந்த வாழை, கரும்புகளை மக்கள் எடுத்துச் சென்றனர்.



source https://www.vikatan.com/news/politics/mk-stalin-slams-cm-eps-and-minister-kadambur-raju-in-kovilpatti-party-function

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக