Ad

புதன், 1 ஜூன், 2022

கல்குவாரி பள்ளத்தில் மூழ்கி பாட்டி, பேரக்குழந்தைகள் உயிரிழப்பு - திண்டிவனம் அருகே சோகம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா(60). இவரின் மகள் விஜயஸ்ரீயை, அருகில் உள்ள தென்கலவாய் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு 16, 14 வயதில் இரு மகள்களும், 8 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். இவர்களின் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக, தன் தாய்வீடான பெருமுக்கலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார் விஜயஸ்ரீ. இந்த தம்பதியினர் வெளியில் சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மூன்று பேரும்... பாட்டி, புஷ்பாவுடன் இருந்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேர்.

துணிகளை துவைத்துக்கொண்டு வருவதற்காக அருகில் உள்ள கல்குவாரி பள்ளத்திற்கு பாட்டியுன் குழந்தைகள் 3 பேரும் சென்றதாக கூறப்படுகிறது. 4 பேரும் அந்த கல்குவாரி பள்ளத்தில் இறங்கிய போது, எதிர்பாராத விதமாக 4 பேரும் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பள்ளத்தில் மூழ்கியவர்களின் கூக்குரலை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, பிரம்மதேசம் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீரில் மூழ்கிய 4 பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

பின், பிரேத பரிசோதனை செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த பிரம்மதேசம் போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாட்டியுடன் சேர்ந்த 3 பேரக்குழந்தைகளும் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் திண்டிவனம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/grandmother-and-grandchildren-drowned-near-tindivanam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக