Ad

சனி, 21 நவம்பர், 2020

சி.பி.ஐ துஷ்பிரயோகம்: ஒரே குட்டையில் ஊறிய கட்சிகளா காங்கிரஸும் பா.ஜ.க-வும்?

மாநில காவல்துறையால் கையாள முடியாத மிகவும் சிக்கலான வழக்குகளை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ-யின் விசாரணைக்கு உட்படுத்துவது நடைமுறையில் இருந்துவருகிறது. அத்தகைய, நாட்டின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., மத்திய ஆட்சியாளர்களின் கைப்பொம்மையைப்போல செயல்படுகிறது என்ற விமர்சனம் நீண்டகாலமாக இருந்துவருகிறது. `எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கும், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் தங்கள் அதிகாரத்தைச் செலுத்துவதற்கும் சி.பி.ஐ-யை மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்’ என்பது முக்கியமான குற்றச்சாட்டு.

உச்ச நீதிமன்றம்

டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ செயல்பட்டுவருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள யூனியன் பிரதேசங்களில் மட்டுமே எந்த அனுமதியும் இல்லாமல் சி.பி.ஐ-யால் வழக்குகளை விசாரிக்க முடியும். ஆனால், மாநிலங்களில் சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலைக் கட்டாயம் பெற வேண்டும். மாநில அரசுகள் சி.பி.ஐ-க்கு பொது ஒப்புதல் அளிப்பது வழக்கமான நடைமுறை.

சி.பி.ஐ அமைப்பின் செயல்பாடுகள் மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டின. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி வந்த பிறகும் அதே குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படுகிறது. இத்தகைய சூழலில், எதிர்க் கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்களில், சி.பி.ஐ விசாரணைக்கான பொது ஒப்புதல் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. இது மத்திய ஆட்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சி.பி.ஐ., தன் அதிகார வரம்பை மீறி, அரசியலமைப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து, கேரளாவில் எந்தவொரு வழக்கையும் விசாரிப்பதற்கு மாநில அரசிடம் சி.பி.ஐ அனுமதி பெற வேண்டும் என்றும், சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொது ஒப்பதலைத் திரும்பப் பெறுவது என்றும் கேரள அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது

உத்தவ் தாக்கரே

எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் ஆந்திராவிலும் மேற்குவங்கத்திலும் சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொது ஒப்புதல் 2018-ம் ஆண்டு வாபஸ் பெறப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் பஞ்சாப், ராஜஸ்தான், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருக்கும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சி.பி.ஐ-க்கான பொது ஒப்புதல் கடந்த சில மாதங்களில் வாபஸ் பெறப்பட்து.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கு, அர்னாப் கோஸ்வாமியை ஆசிரியராகக்கொண்ட தனியார் தொலைக்காட்சி மீதான டி.ஆர்.பி முறைகேடு தொடர்பான வழக்கு ஆகியவற்றை சி.பி.ஐ விசாரிப்பதற்கான முயற்சி நடைபெற்றது. இந்தநிலையில், சி.பி.ஐ விசாரணைக்கான பொது ஒப்புதலை உத்தவ் தாக்கரே அரசு வாபஸ் பெற்றுவிட்டது.

இத்தகைய சூழலில், ஊழல் வழக்குகளில் மாநில அரசின் அனுமதி பெறாமல், சி.பி.ஐ பதிவுசெய்துள்ள வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து நவம்பர் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. `மாநில அரசுகளின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கு மாநில அரசுகளின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும். மாநில உரிமை பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு மாநில சுயாட்சி மற்றும் மாநில உரிமைகளை விரும்புவோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கண்ணதாசன்

இந்தத் தீர்ப்பு குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். ``என்.ஐ.ஏ என்பது அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பு மாதிரி. அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்துக்குமான சட்டங்கள் வேறுபட்டாலும், இந்த அமைப்பு எல்லா இடங்களிலும் விசாரணை செய்து வழக்கு நடத்தலாம். அதுபோலத்தான் என்.ஐ.ஏ-வையும் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்தில் இருக்கிறது.

சி.பி.ஐ என்பது தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய புலனாய்வு அமைப்பு. அது, முழுக்க முழுக்க மத்திய அரசின் கண்ணசைவில் செயல்படும் அமைப்பாக மாறிவிட்டது. இரண்டு, மூன்று மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால், அதற்கு சி.பி.ஐ விசாரணை கேட்லாம் அல்லது அதிகாரமிக்கவர்களால் நியாயம் கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தால், அந்த வழக்குக்கு சி.பி.ஐ விசாரணை கோரலாம். ஆனால், என்ன நடக்கிறதென்றால், குறிப்பிட்ட ஒரு வழக்கை நீர்த்துப்போகச் செய்ய வேண்டுமென்று மத்திய ஆட்சியாளர்கள் முடிவுசெய்துவிட்டால், அதை சி.பி.ஐ-க்கு மாற்றிவிடுகிறார்கள். பயங்கரவாத நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட என்.ஐ.ஏ என்ற அமைப்பின் செயல்பாடுகளும் தற்போது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன.

உச்ச நீதிமன்றம்

பயங்கரவாத நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான அமைப்பு என்று கொண்டுவரப்பட்ட என்.ஐ.ஏ அமைப்பு, இப்போது பொருளாதாரக் குற்றங்களையும் விசாரிக்க ஆரம்பிக்கிறது. கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கை என்.ஐ.ஏ-வும் விசாரிக்கிறது. இது அந்த மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல். இன்னொருபுறம், என்.ஐ.ஏ-வுக்கு இணையாக சி.பி.ஐ-யைக் கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது. இது மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல்” என்றார் கண்ணதாசன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரிடம் பேசினோம். ``என்.ஐ.ஏ செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது. அந்த அமைப்பு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
சட்டம், ஒழுங்கு என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அதில் தலையிடுவதுபோல என்.ஐ.ஏ இருப்பதால், ஆரம்பத்திலேயே அதைக் கடுமையாக எதிர்த்தோம்.

ரவிக்குமார்

ஒரு பயங்கரவாத நடவடிக்கை பல நாடுகள் சம்பந்தப்பட்டதாக இருக்குமானால், அதை மத்திய அரசு கையாள வேண்டிய அவசியம் ஏற்படும். அப்போது, அந்த வழக்கை என்.ஐ.ஏ போன்ற அமைப்பிடம் மாநில அரசு ஒப்படைக்கலாம். அப்படி இல்லையென்றால், மாநில அரசே அதைச் செய்ய முடியும். மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஒரு வழக்கை நேரடியாக என்.ஐ.ஏ எடுத்துக்கொள்வது சரியான அணுகுமுறை கிடையாது” என்றார் ரவிக்குமார்.

Also Read: `பான் மசாலா கடைபோல் ஆகிவிட்டது சி.பி.ஐ!’ - பா.ஜ.க அரசைச் சாடிய மகாராஷ்டிரா அமைச்சர்

இது குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் புரட்சிக்கவிதாசனிடம் பேசினோம், ``சுய லாபத்துக்காக மத்திய அரசால் சி.பி.ஐ தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்டது. அது முழுக்க முழுக்க உண்மைதான். ஆனால், மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நிலைமை மாறிவிட்டது. இப்போது சி.பி.ஐ-க்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனம் அரசியல்ரீதியானது. மாநில அரசைக் காட்டிலும் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுக்கக்கூடிய விஷயங்களில் சி.பி.ஐ-யும் ஒன்று. அதைக் காலிசெய்வதன் மூலமாக மீண்டும் சமஸ்தானங்களின் ஆட்சியைக் கொண்டுவர சிலர் நினைக்கிறார்கள். அவர்களின் கருத்தாகத்தான் தற்போது சி.பி.ஐ-க்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் பார்க்க வேண்டும்.

புரட்சிக்கவிதாசன்

அதேபோல என்.ஐ.ஏ மீதான விமர்சனங்களும் தவறானவை. முன்பெல்லாம் மாநிலங்களில் விசாரணை நடத்துவதற்கு மாநில அரசுகளிடம் அனுமதி வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதில், ஊழல் விளையாடியது. பாரபட்சம் இருந்தது. ஆனால், என்.ஐ.ஏ வந்த பிறகு அந்தப் பிரச்னையே இல்லை. உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால், உடனடியாக எங்கு வேண்டுமானாலும் சென்று விசாரணையிலும் நடவடிக்கையிலும் என்.ஐ.ஏ இறங்குகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று சொல்கிறார்கள். ஆனால், மத்தியில் கூட்டாட்சி என்பதை மறுதலித்துவிட்டு, மாநிலத்தில் சுயாட்சி என்று பேசுவது சரியல்ல” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-misusing-of-cbi-and-supreme-court-judgement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக