Ad

வியாழன், 4 பிப்ரவரி, 2021

`மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது!’ - உயர் நீதிமன்றம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கி நினைவு இல்லமாக மாற்றத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வேதா நிலையம் இல்லம்

வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் முக்கியப் பங்காற்றிய முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் வீடுகள் நினைவு இல்லங்களாக மாற்றிப் பராமரிக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமும் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Also Read: ஜெயலலிதா வீட்டில் என்ன இருக்கிறது?

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு, தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டம் இயற்றியது சரிதான். ஆனால், இன்னும் எத்தனை காலங்கள் இப்படி நினைவு இல்லங்கள் அமைக்கப் போகிறீர்கள்? என்று கேள்வியெழுப்பினர். மேலும், அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லங்களாக மாற்றிவிடமுடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

நிதித்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய பல நீதிபதிகள் இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நீதிமன்றம் முழுவதும் சிலை வைத்தால் என்ன ஆகும்? - சென்னை உயர் நீதிமன்றம்.

அதேபோல், இப்படி மறைந்த முதல்வர்களுக்கு நினைவு இல்லங்கள் அமைக்கப்படுவது தொடர்ந்தால், அமைச்சர்களின் வீடுகளையும் நினைவு இல்லங்களாக மாற்ற வேண்டிய நிலை வரும் போல் உள்ளது. தமிழக அரசின் இந்த செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது. இந்த வழக்கு தொடர்பாகத் தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/madras-hc-raises-question-over-vedha-nilayam-memorial-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக