Ad

வியாழன், 4 பிப்ரவரி, 2021

காஞ்சிபுரம்: கல்குவாரி விபத்தில் ஒருவர் பலி; சிகிச்சையில் மூவர்! -பாறை சரிவில் பலர் சிக்கித்தவிப்பு?

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதூரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இன்று காலை வழக்கம்போல குவாரிக்கு வேலைக்கு வந்த பணியாளர்கள், வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர். அப்போது, எதிர்பாராதவிதமாக, குவாரியில் கற்கள் சரிந்து விழத் தொடங்கின.

காஞ்சிபுரம் கல்குவாரி விபத்து

கற்கள் விழுவதைப் பார்த்த தொழிலாளர்கள், அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. இருந்த போதிலும், விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஐந்து டாரஸ் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவை சிக்கியுள்ளன. இதுவரை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதிகமானோர் சிக்கியிருக்கலான் என்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாறை சரிவில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பெரும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் அதை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. அருகில் உள்ள கல்குவாரிகளில் உள்ள இயந்திரங்களைக் கொண்டுவந்து பாறைகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். விபத்து நடைபெற்ற இடம் மிகவும் குறுகிய பாதை என்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கல்குவாரி விபத்து

மிகவும் ஆழத்தில் குவாரி அமைந்துள்ளதால் மீட்பு வாகனங்கள் அங்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறுத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

தீயணைப்புத் துறை வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்தில் முகாமிட்டிருக்கின்றன. பாதுகாப்புப் பணிகளுக்காக நூற்றுக்கணக்கான காவலர்களும் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த குவாரியில் தமிழகம் மட்டுமல்லாது மாற்ற மாநில தொழிலாளர்கள் பலரும் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், அனுபவம் இல்லாத நபர்களைக் கொண்டு வெடி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால்தான் குவாரிகளில் அடிக்கடி விபத்து நடைபெறுவது தொடர் சம்பவமாக உள்ளது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/accident/kanchipuram-quarry-accident-kills-2-more-than-20-trapped-in-a-cliff

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக