நம்மில் பெரும்பாலானவர்கள் அரிசி உணவுகளையே அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்கிறோம். எப்போதும் வெள்ளை அரிசி உணவுகளை எடுப்பதற்கு பதிலாக சிறுதானியங்கள், மருத்துவ சத்துள்ள மற்ற அரிசி வகைகள் என எடுத்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் மேம்படும். கூடவே வித்தியாசமான, சுவையான உணவையும் உண்ணலாம். அந்த வகையில், ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்து கூறுகிறார் மேட்டூரை சேர்ந்த ஃபிசியோதெரபிஸ்ட் விஜயா.
கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்முறை
- ஒரு டம்ளர் (250கிராம்) கருப்பு கவுனி அரிசி எடுத்து மூன்று முறை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு டம்ளர் அரிசிக்கு 8 டம்ளர் தண்ணீர் அல்லது அதற்கு மேலும் எடுத்துக் கொள்ளாலாம். 12 டம்ளர்க்கு மிகாமல் எடுத்து 12 மணி நேரம் ஊறவைக்கவும்(சாதாரண தண்ணீர் அல்லது சுடுநீர்).
- அரிசியை வேகவைக்கும்போது, எவ்வளவு அரிசி எடுக்குறோமோ, அதனுடன் 5 மடங்கு தண்ணீர் கஞ்சிக்குக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்.
- 5 மடங்கு தண்ணீருக்குக் குறைவாகப் பயன்படுத்தக்கூடாது.
- மறுநாள் குக்கரில் அரிசியுடன் 100 கி பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு, சிறிதளவு சீரகம், 5 மிளகு, 5 பல் பூண்டு, 10 to 15 நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிதளவு மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கடலெண்ணெய் அல்லது சமையல் எண்ணெயுடன், அரிசியின் அளவில் 5 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக 20 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் குக்கரை மூடி 12 விசில் வரை விட்டு குக்கரை இறக்கிவிட்டு, குக்கரை திறந்ததும் உப்பு சேர்க்கவும். உப்பை முதலிலேயே அரிசியுடன் சேர்த்தும் வேக வைக்கலாம்
- அதிக நேரம் கருப்பு கவனி அரிசியை வேக வைத்தால் ருசி அதிகமாக இருக்கும். மேலே கூறியுள்ள பொருள்கள் இல்லாமல், அரிசியை மட்டும் வேக வைத்தும் கஞ்சி செய்யலாம்.
கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்
மற்ற அரிசி வகைகளான வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசி போன்றவற்றில் இருப்பதை விட கருப்பு கவுனி அரிசியில் குறைந்த அளவு மாவுச்சத்தும், அதிக அளவு புரதமும், இரும்பு சத்தும் உள்ளது. இதில் உள்ள விட்டமின் இ கண்கள் மற்றும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
முக்கியமாக கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து உணவுக்குப் பின் ரத்த சர்க்கரை உயராமல் சீராக இருக்க உதவுவதுடன், செரிமானப் பிரச்னைகள், வாயு சம்பந்தப்பட்ட பிரச்னை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையையும் சரி செய்யக்கூடியது. கூடவே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள சக்தி வாய்த்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நீரிழிவு, இதய நோய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை தடுக்கவல்லது.
source https://www.vikatan.com/lifestyle/how-to-make-porridge-from-karuppukauni-rice
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக