Ad

புதன், 15 பிப்ரவரி, 2023

ஓசூர்: அரசு அனுமதி வழங்க லஞ்சம் கேட்ட தாசில்தார், துணை தாசில்தார்; கைதுசெய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் தனியார் மழலையர் பள்ளி அமைந்திருகிறது. இந்தப் பள்ளியை மஞ்சுளா என்பவரிடமிருந்து ஓசூர் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த அரவிந்த் வாங்கியிருக்கிறார். இந்தப் பள்ளியின் நிர்வாகி அரவிந்த், பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்காக, வருவாய்த்துறையில் விண்ணப்பித்தார். கடந்த, 11–ம் தேதி ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் பள்ளியில் ஆய்வு செய்திருக்கிறார்.

இந்த நிலையில், தாசில்தார், துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோர், அரசு அனுமதி கொடுக்க ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பள்ளி நிர்வாகம், ரூ.42 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில், அரவிந்த் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாரளித்திருந்தார். நேற்று, ரசாயனம் தடவிய ரூ.42 ஆயிரத்தை, தாசில்தாரிடம் வழங்கும்படி, அரவிந்திடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர்.

லஞ்சம்

போலீஸாரின் ஆலோசனையின்படி, அரவிந்த் தாலுகா அலுவலகத்துக்குச் சென்று, தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோரைச் சந்தித்துப் பணத்தைக் கொண்டுவந்ததை தெரிவித்திருக்கிறார். அப்போது, இருவரும், அலுவலக உதவியாளா் திம்மராயனிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறியிருக்கின்றனர்.

இதையடுத்து அரவிந்த் பணத்தை அலுவலக உதவியாளரிடம் கொடுத்த நிலையில், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி வடிவேல், இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர், தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி, உதவியாளர் திம்மராயன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணை நடத்திய போலீஸார், தாசில்தார், துணை தாசில்தாரை சிறையில் அடைத்தனர்.

கைது

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்டம் முழுவதிலுமுள்ள வருவாய்த்துறை, ஆர்.டி.ஓ, பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறித்து, புகார்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தாசில்தாரும், துணை தாசில்தாரும் அதிரடியாக கைதுசெய்யப்பட்டதால், அரசு துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/corruption/police-arrested-tahsildar-and-deputy-tahsildar-for-demanding-bribe-in-hosur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக