வாழ்நாள் முழுக்க உடலுக்குத் தேவையானதை உற்பத்தி செய்து, தேவையில்லாதவற்றை வெளியேற்றும் உடலின் அதிசயங்கள் சிறுநீரகங்கள். நம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளான சிறுநீரகங்கள், ரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருள்களை பிரித்து, சுத்திகரித்து, அவற்றை வெளியேற்ற உதவுகின்றன.
பொதுவாக, நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. வலது சிறுநீரகம் கல்லீரலுக்குக் கீழேயும், இடது சிறுநீரகம் மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறது.
சிறுநீரகத்தில் கல்!
சிலருக்கு சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்னை இருக்கும். இதனை சரியானமுறையில் கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்யும். தவறான உணவுமுறைகளாலும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததாலும் அசைவ உணவுகள் அதிகம் உண்பதாலும், ஆஃக்சலேட், யூரிக் அமிலம் போன்றவை உடலில் அதிகரித்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகின்றன.
சிறுநீரகக் கோளாறுகள் முற்றும்போது டயாலிசிஸ் முறையில் கழிவு உள்ள ரத்தத்தை வெளியேற்றிவிட்டு, நல்ல ரத்தத்தைத் திரும்பச் செலுத்தும் சிகிச்சைமுறை தரப்படுகிறது. சிறுநீரகக் கோளாறுகள், மிகவும் முற்றிய நிலையில் சிறுநீரகச் செயலிழப்பு நிகழ்கிறது. இதற்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதுதான் ஒரே தீர்வு.
சிறுநீரகம் காப்பது எளிது!
சரியான முறையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்து, மருந்துகளும் சரியான முறையில் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தால் 15-20 வருடங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.
அத்துடன், போதுமான அளவு தண்ணீர் பருகுவது, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, வருடம் ஒருமுறை சிறுநீரகப் பரிசோதனை செய்து கொள்வது, நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் உண்பது போன்றவற்றால் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றலாம்.
நீங்கள் மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியது ஒன்றுதான்... ஆரோக்கிய வாழ்க்கை முறையால் சிறுநீரகம் காப்பது அனைவருக்கும் எளிதானது!
தகவல்கள்: டாக்டர் முத்துவீரமணி, சிறுநீரக மருத்துவர்
source https://www.vikatan.com/health/being-aware-can-prevent-kidney-failure
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக