லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி செய்தி ஊடகம், `இந்தியா: மோடி கேள்வி' (India: The Modi Question) என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. குஜராத் கோத்ரா சம்பவத்தில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடியின் பங்கு குறித்து அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்ததால், மத்திய பா.ஜ.க அரசு அதை இந்தியாவில் தடைசெய்தது. இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் `ஆய்வு' (Survey) எனும் பெயரில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு நடத்தியது. தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த ரெய்டு, பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டிவருகின்றன.
குறிப்பாக, ``மத்திய அரசை, மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் ஊடகங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசுத் துறைகளைப் பயன்படுத்தும் போக்கின் தொடர்ச்சிதான் இது!" என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, எதிர்கருத்து தெரிவித்த எந்தெந்த ஊடக நிறுவனங்களிளெல்லாம் இதுபோன்று ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை பார்க்கலாம்...
2021 - டைனிக் பாஸ்கர்:
கடந்த 2021 ஜூலை மாதம், நாட்டின் முன்னணி செய்தித்தாள் குழுமங்களில் ஒன்றான டைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar) நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் (Income tax department) சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கான காரணம், டைனிக் பாஸ்கர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகவும், பங்குச்சந்தை விதிகளை மீறியதாகவும் வருமான வரித்துறை விளக்கம் தெரிவித்தது.
ஆனால் இதற்கு காரணம், ``கொரோனா தொற்றின்போது அரசாங்கம் செய்த தவறான நிர்வாகத்தையும் அதன் விளைவால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் பற்றியும் டைனிக் பாஸ்கர் செய்தி நிறுவனம் விரிவான அறிக்கையை வெளியிட்டது. மேலும், டைனிக் பாஸ்கர் நிறுவனத்தின் தேசிய ஆசிரியர் ஓம் கௌர், கொரோனா உயிரிழப்புகள் பற்றி நியூயார்க் டைம்ஸில் `கங்கை இறந்தவர்களைத் திருப்பித் தருகிறது. அது பொய் சொல்லவில்லை' எனும் தலைப்பில் கட்டுரையும் (Op-ed) எழுதியிருந்தார். இவையெல்லாம் மத்திய அரசுக்கு எதிராக இருப்பதாகக் கருதிய அரசு, தங்கள் துறைகளிலிருந்து வரும் அரசு விளம்பரங்களைக்கூட டைனிக் பாஸ்கருக்கு கொடுப்பதை குறைத்துவிட்டது!" என டைனிக் பாஸ்கர் ஆசிரியர் கூறியதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்தது.
2021 - பாரத் சமாச்சார்:
அதேபோல, கடந்த 2021-ம் ஆண்டில் லக்னோவைச் சேர்ந்த பாரத் சமாச்சார் (Bharat Samachar) செய்தி அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ``கொரோனா இரண்டாவது அலை குறித்து ஆழமான செய்திகளை வெளியிட்டதும், உத்தரப்பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க அரசின் தொற்றுநோய் மேலாண்மை சீர்கேடுகள் குறித்து கடுமையான விமர்சனக் கேள்விகளை பாரத் சமாச்சார் நிறுவனம் தொடர்ந்து எழுப்பிவந்ததும்தான் இந்த ரெய்டுக்கான காரணம்" என எடிட்டர்ஸ் கில்ட் தெரிவிக்கிறது. மேலும், ``இது ஒரு மிரட்டல் தந்திரம்" எனவும் விமர்சித்தது.
2021 - நியூஸ் கிளிக்:
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டிபென்டண்ட் ஊடக நிறுவனம்தான் நியூஸ் கிளிக். கடந்த 2021 செப்டம்பர் மாதம் இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் (Enforcement Directorate) திடீர் சோதனை நடத்தினர். நியூஸ் கிளிக் நிறுவனம் மட்டுமல்லாது அந்த ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. இந்த திடீர் ரெய்டுக்கு காரணமாக, நியூஸ் கிளிக் நிறுவனம் சில சந்தேகத்துக்குரிய நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொண்டு பணமோசடி வழக்கில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. எனவே, நியூஸ் கிளிக்கின் உரிமையாளர்கள் செய்த சில பொருளாதாரக் குற்றங்களுக்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், இது ஒரு `வழக்கமான சோதனையே' என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது. ஆனால், பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகளை நியூஸ் கிளிக் முன்னணியில் நின்று கவரேஜ் செய்ததும், அந்த வீடியோக்களை மில்லியன்கணக்கானவர்கள் பார்த்து ரியாக்ட் செய்ததும்தான் காரணம் எனச் சொல்லப்பட்டது.
2021 - நியூஸ்லாண்ட்ரி:
அதே காலகட்டத்தில், டெல்லியிலிருந்து செயல்படும் நியூஸ்லாண்ட்ரி (Newslaundry) செய்தி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அலுவலக செய்தியாளர்கள் அனைவரின் செல்போன்களும் ஸ்விட்ச்-ஆஃப் செய்யப்பட்டு மேசைமீது வைக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும், பணியாளர்கள் யாரும் அலுவலகத்தைவிட்டு வெளியேறவும் அனுமதி மறுக்கப்பட்டது. முக்கியமாக, நியூஸ்லாண்ட்ரி இணை நிறுவனர் அபிநந்தன் சேக்ரி, அவருடைய வழக்கறிஞரை அழைக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்றும், அவரது செல்போனை சோதனை அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், ``சட்ட ஆலோசனையைப் பெறாமல் நான் இணங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது!" என தனது ட்விட்டரிலும் விமர்சித்திருந்தார். இந்த ரெய்டுக்கான காரணம், நியூஸ்லாண்ட்ரி நிறுவனமும் தொடர்ந்து டெல்லியில் போராடிய பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கொரோனா தொற்று உயிரிழப்பு குறித்தும் செய்தி வெளியிட்டு வந்ததுதான் எனக் கூறப்படுகிறது.
2020 - கிரேட்டர் காஷ்மீர்:
கடந்த 2020 அக்டோபர் மாதம், ஜம்மு-காஷ்மீரின் முன்னணி ஆங்கில நாளிதழான கிரேட்டர் காஷ்மீர் (Greater Kashmir) அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) திடீர் சோதனை நடத்தியது. மத்திய பா.ஜ.க அரசின் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது, சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்துசெய்தது உள்ளிட்டவைக் குறித்து செய்தி வெளியிட்டது. எனவே கிரேட்டர் காஷ்மீர் நிறுவனத்தின்மீது இந்தச் சோதனை முன்னோட்டம் நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
2018 - தி குயின்ட்:
உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் இன்டிபென்டண்ட் ஊடகமாகச் செயல்பட்டுவரும் தி குயின்ட் (The Quint) ஊடகத்தின் அலுவலகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், குயின்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான ராகவ் பால், ரிது குமார் ஆகியோரின் இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2017 - என்டிடிவி:
பா.ஜ.க ஆட்சி அமைந்தபோது, முதன் முறையாக 2017-ம் ஆண்டு, இந்தியாவின் முன்னணி செய்தி ஊடகமான என்டிடிவி(NDTV) அலுவலகங்கள்மீது சி.பி.ஐ சோதனை நடத்தியது. மேலும், என்டிடிவி நிறுவனர்களான பிரணாய் ராய், அவரின் மனைவி வீடுகளிலும் சிபிஐ சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ``என்டிடிவி நிறுவனர்கள் ஐசிஐசிஐ வங்கியில் 48 கோடி ரூபாய் மோசடி செய்த காரணத்தால் சோதனை நடத்தப்பட்டது" என சிபிஐ தெரிவித்தது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த என்டிடிவி நிறுவனம், ``நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை; ஏழு ஆண்டுகளுக்கு முன்பே என்டிடிவி கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டது. ஆதாரமின்றி முறையான விசாரணையின்றி இந்த சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இது சுதந்திர ஊடகங்களுக்கு எதிரான ஒரு சூனிய வேட்டை. மேலும், பத்திரிகைச் சுதந்திரத்தின்மீதான அப்பட்டமான அரசியல் தாக்குதல்!" என கடுமையாக விமர்சித்தது. (கடுமையான நெருக்கடிகள் காரணமாக என்டிடிவி நிறுவனர்களான பிரனாய் ராய், ராதிகா ராய் தங்கள் பதவியை ராஜினாம செய்ய, தற்போது என்டிடிவி நிறுவனத்தின் பங்குகள் அதானி வசம் கைமாறியிருக்கின்றன)
இது தவிர கடந்த 2022-ம் ஆண்டு டெல்லி, மும்பையிலுள்ள தி வயர் (The Wire) அலுவலகத்திலும், அதன் ஊழியர்களுடன் தொடர்புடைய வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல, பா.ஜ.க ஆட்சியில் பத்திரிகை நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பத்திரிகையாளர்களும் குறிவைக்கப்பட்டனர் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ``கடந்த ஆண்டு நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க-வின் நுபுர் ஷர்மாவை முதன் முதலாக பொதுவெளியில் அம்பலப்படுத்திய ஆல்ட் நியூஸ் (Alt News) நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர், 2018-ம் ஆண்டு அவர் பதிவிட்ட ஒரு ட்வீட்டுக்காக கைதுசெய்யப்பட்டார்.
அதே போல, 2020-ம் ஆண்டு, ஹத்ராஸ் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைசெய்யப்பட்டது தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான் இரண்டு ஆண்டுகள் சிறையில் வைத்தது உத்தரப்பிரதேச அரசு. மேலும், கௌரி லங்கேஷ், பன்சாரே, கல்புர்கி உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்களும் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடந்தவைதான்" என்கிறார்கள்.
பா.ஜ.க ஆட்சி அமைவதற்கு முன்பாக, 2013-ம் ஆண்டு உலக ஊடக சுதந்திரத்தில் 142-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 2022-ம் ஆண்டில் 150-வது இடத்துக்கு பின்னோக்கிச் சென்றிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/list-of-indian-press-media-raided-under-bjp-government-detailed-report-on-press-freedom-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக