அதானி குழுமம் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், ஜனவரி 24-ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பிய இந்த ஆய்வறிக்கையால், அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட பங்குகள் சீட்டுக்கட்டுகள் போல மளமளவென சரிந்தன. அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி என்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் கடந்த 3 வாரங்களில், 94,000 கோடி ரூபாய் மூலதனத்தை இழந்திருக்கின்றன. உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற நிலையில் இருந்த அதானி, 24-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையை அதானி குழுமம் முற்றிலுமாக நிராகரித்ததுடன், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் சதி என்றும் குற்றம்சாட்டியது. எனினும் அதானி குழுமத்தின் விளக்கத்தை எதிர்க்கட்சிகள் நிராகரித்திருப்பதுடன், மோசடிகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தின. எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ போன்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகள் அதானி குழுமத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின.
அதானி குழுமம் குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசிய உரையும் விவாதங்களுக்கு வித்திட்டது. பிரதமர் மோடியையும் அதானியையும் தொடர்புப்படுத்தி ராகுல் காந்தி பேசியது முழுமையாக அவைக்குறிப்பில் ஏற்றப்படாமல் வெட்டப்படும் அளவுக்கு பிரச்னை முற்றியது. அதானி விவகாரம் குறித்து மத்திய அரசுத் தரப்பிலோ, பாரதிய ஜனதா கட்சி சார்பிலோ பேசுவதையே தவிர்த்தனர். இந்த விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து மோசடி குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென விஷால் திவாரி பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதானி குழும மோசடிகள் தொடர்பாக விசாரிக்க கோரி முகேஷ் குமார் என்பவரும், அதானி பங்குகள் செயற்கையாக சரிவடைய காரணமாக இருந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.எல்.ஷர்மாவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து விசாரித்த உச்ச நீதிமன்றம், பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபிக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதில் பதில் மனுத்தாக்கல் செய்த செபி, அதானி குழும மோசடிகள் குறித்து கண்காணித்து வருகிறோம் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூரும் அதானி குழுமத்தின் மோசடிகள் குறித்து விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இவரது மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யத் தயார் என மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மத்திய அரசின் யோசனையை ஏற்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எந்தத்துறையின் பரிந்துரையும் ஏற்க போவதில்லை எனக் கூறிவிட்டனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றமே அமைக்கும் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இந்த விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மையை உச்ச நீதிமன்றம் விரும்புகிறது, உச்ச நீதிமன்றம் அமைக்கும் வல்லுநர் குழுவுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்று அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு மத்திய அரசுக்கு பின்னடைவு என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்திருக்கின்றன. “சீலிடப்பட்ட அறிக்கையை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டிருந்தால் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்படாமல் போயிருக்கவோ அல்லது பொதுவெளியில் அம்பலமாகாமலோ இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் அதானி குழுமம் செய்த மோசடிகள், அதானி குழுமமும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் அடைந்த ஆதாயம், அதானி குழுமத்தில் பெரு முதலீடு செய்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு போன்றவை முறையாக வெளிப்படாமல் போயிருக்கும். நல்ல வேளையாக உச்ச நீதிமன்றமே நிபுணர் குழுவை அமைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது. குழுவின் விசாரணையையும் உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும். அப்போதுதான் விசாரணை நியாயமாக நடைபெறும்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க மாநிலங்களவை எம்.பி-யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், “உச்ச நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது. சீலிடப்பட்ட கவர்களில் அறிக்கை சமர்பித்தால் என்னவாகும் என்பதை ஏற்கெனவே ரஃபேல் உட்பட பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம். அதில் வெளிப்படைத்தன்மையே இருக்காது. எனவே உச்ச நீதிமன்றமே நிபுணர் குழுவை அமைக்கப்போவதாக கூறியிருப்பது ஆரோக்யமான முடிவு. அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளும் இருப்பதால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு வெளிப்பட்டுவிடும் எனக் கருதி, மத்திய அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையோடு இருக்க பயப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருப்பதால், பொறுத்திருந்து பார்ப்போம் ” என்றார்.
ஆனால் இதில் மத்திய அரசுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என்கிறது பா.ஜ.க தரப்பு. இது தொடர்பாக கருத்துகேட்க அந்தக் கட்சியினரை தொடர்புகொள்ள முயன்றபோது, “அதானி விவகாரத்தில் மறைக்கவோ, பயப்படுவோ எதுவும் இல்லை என ஏற்கெனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிவிட்டார். அதுதான் எங்கள் நிலைப்பாடும். தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் கடந்து போவது நல்லது” என்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/adani-case-setback-for-central-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக