கல் ஒன்று கடவுளாவது என்பது சாதாரண விஷயமல்ல. விக்ரகம் செய்யக் கல்லைத் தேடி எடுப்பது முதல் அதை சிற்ப சாஸ்திர விதிகளின்படி வடிப்பது வரை பல்வேறு படிநிலைகளும் விதிமுறைகளும் உள்ளன. அதன்பிறகே ஆகம விதிகளின்படி அதற்குக் கண் திறந்து, ஆவாஹனம் செய்து கருவறையில் தெய்வமாகப் பிரதிஷ்டை ஆகிறது ஒரு சிற்பம்.
இது குறித்து அறிந்துகொள்ள மதுரை பசுமலையில் இருக்கும் கலைவாணி சிற்பக் கலைக்கூடத்தை அணுகினோம். அதன் உரிமையாளர் திரு.முருகன் சிற்பக் கலையின் படிநிலைகளைப் பொறுமையாக விளக்கினார்.
"சுவாமி விக்ரகம் செய்வதற்குக் கருங்கல்தான் சிறந்தது. சிலையைச் செய்வதற்கு முன், அந்தக் கருங்கல்லில் ஓட்டை ஏதேனும் உண்டா என்று ஜலவாசம் செய்வித்து சோதிப்போம். கருங்கல்லில் பஞ்சபூதங்களும் அடங்கி இருப்பதால், அதற்கு உயிரோட்டம் அதிகம். எனவேதான் கோயிலினுள் வைக்க ஏற்றதாக இருக்கிறது.
சில கருங்கற்களில் வெயில் பட்டு வெடிப்பு ஏற்படக்கூடும். சில கற்களுக்கு வெடிபடாத உறுதித்தன்மை இருக்கும். அதனால் இவற்றை, 'ஆண் கல்' என்கிறோம். இந்தக் கற்களை கோயில்களில் தூணாக வடிப்பர்.
இன்னும் சில கற்கள், மண்ணுக்குள் இருக்கும். இவை குளிர்ச்சியாக இருக்கும். இவற்றை 'பெண் கல்' என்கிறோம். இந்தக் கற்கள் கருவறையில் வைக்க ஏற்றவை. எனவே, இந்தக் கற்களில்தான் தெய்வச் சிலைகளை வடிப்போம்.
இதுவரை 1,000-க்கும் மேல் தெய்வச் சிலைகள் வடித்திருக்கிறோம். கடவுள் அருளால் எந்தச் சிக்கலும் வந்ததில்லை.
சிலை செய்யத் தொடங்கிவிட்டால் அசைவம் கூடாது. நுட்பமான வேலைகள் செய்வதால் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். எந்த தெய்வ விக்ரகத்தைச் செய்கிறோமோ, அந்த தெய்வத்தின் நட்சத்திரம் பார்த்து, மந்திரத்தைச் சொல்லி, வணங்கி, மஞ்சள் தண்ணீரை ஊற்றிய பின் கையில் அடுப்பு கரி வைத்து சுவாமி உருவத்தை வரைவோம்.
பின் செம்மண்ணைப் பூசுவோம். ஒவ்வொரு விக்ரகமும் அதன் அளவுக்கேற்றப்படி செய்யப்படும் கால அளவு மாறுபடும். ஒவ்வொருமுறையும் விக்ரகத்துக்கு விக்ரகம் முக வடிவில் சிறிதேனும் மாறுபடும். அதனால்தான் கோயில்களில் காணப்படும் விக்ரகங்களின் தோற்றத்திலும் சிறிதளவேனும் மாறுபாடு காணப்படும்.
விக்ரகங்களின் அளவு என்பது, அதை ஸ்தாபிக்கும் கருவறை அளவைப் பொறுத்து அமையும். ஆகம விதிப்படி விக்ரகத்தை ஒரே கல்லில்தான் செய்ய வேண்டும். ஒட்டு வேலைகள் கூடாது. சிலையில் சிறு கீறல் இருந்தால்கூட, அதன் உயிரோட்டம் போய்விடும்.
எனவே விக்ரகங்களைச் செய்து முடித்து அதை பிரதிஷ்டை செய்வதற்கு முன் அதன் தன்மையை சோதிப்போம். புண்ணிய நதிகளின் நீரில் அந்தச் சிலையை 48 நாள்கள் ஜலவாசத்தில் வைத்திருப்போம். பிறகு வெப்பம் அறிய தான்ய வாசத்தில் 48 நாள்கள் வைத்திருப்போம். முன்பெல்லாம் ரத்ன வாசம், தன வாசம், வஸ்திர வாசம், சயன வாசம் என ஆறு வாசமும் 288 நாள்களும் விக்ரகம் வைக்கப்படும். இப்போது அப்படி வைப்பதில்லை.
பிரதிஷ்டை செய்வதற்கு முன் 48 நாள்கள் பூஜை நடக்கும். திருமேனி செய்தபிறகும் பூஜைகள் நடைபெற்று, காலையிலும் மாலையிலும் தீபாராதனை காட்டப்படும். பிறகு அதற்கு பின் 15 நாள்கள் சந்தனக் காப்பு போட்டு சோதிப்போம். அதற்கு பின் தர்ப்பைக் குழியில் விக்ரகத்தை வைப்போம். இயல்பாகவே தர்ப்பைக்கு எதிர்மறை சக்திகளை அண்டவிடாமல் தடுக்கும் சக்தி உண்டு. முறையான ஆராதனைகள் ஹோம வழிபாடுகள் நடைபெற்ற பிறகு திருமேனியைப் பிரதிஷ்டை செய்து அதன் கண்களைத் திறப்போம். இந்த 50 நாள்களில் நாங்கள் வெளியே செல்லமாட்டோம்.
ஸ்பரிசவாதி எனும் கடைசி வாசத்தில் தெய்வச்சிலைகளின் பாகங்களுக்கு வேதமந்திரங்கள் ஓதப்பட்டு, புனிதப் பொருள்களால் உருவேற்றப்படுகிறது. சம்பந்தப்பட்ட தெய்வத்தைக் கலசத்தில் ஆவாஹணம் செய்து, அதைத் திருமுழுக்காட்டி முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது.
கற்சிலைகள் உயிரோட்டம் உள்ளவை, எனவே நிறப்பூச்சுக் கூடாது. காரணம் நிறப்பூச்சுக்களில் ரசாயனங்கள் இருக்கும். விக்ரகங்கள் செய்து முடித்ததும், குளிர்ச்சியாய் இருக்க நல்லெண்ணெய்யை ஊற்றிக் காப்பிடுவோம். துளசி, பச்சைக் கற்பூரம், மஞ்சள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதற்கு அபிஷேகம் செய்வோம். அந்தத் தீர்த்தத்தை மக்கள் அருந்தும்போது எந்த நோயும் அவர்களை அண்டாது என்பது நம்பிக்கை.
விக்ரகங்கள் மட்டும் அல்லாது பரிவாரத் தெய்வங்களுக்கான தேர்களையும் செய்துவருகிறோம். தமிழ்நாடு மட்டுமன்றி குஜராத், ஆந்திரா என்று இந்தியா முழுவதும் பல கோயில்களுக்குச் செய்துக் கொடுத்துள்ளோம். கிராமக்கோயில்களில் கருப்பச்சாமி, அய்யனார் சிலைகள் முதல் பெருமாள், ஆஞ்சநேயர், சிவன், சண்டிகேஸ்வரர், துர்கை என சகலவிதமான தெய்வத் திருமேனிகளையும் செய்துள்ளோம்.
எல்லோரும் வந்து வழிபட்டுத் தங்கள் பிரார்த்தனைகளை இறக்கி வைக்கும் தெய்வ மூர்த்தங்களை ஏனோதானோ என்று வடித்துவிட முடியாது. பக்தியும் ஒழுக்கமும் முழுமையாக இருந்தால் மட்டுமே ஒரு தெய்வவடிவம் ஒழுங்காக அமையும். இதுவரை எந்த பின்னமும் இல்லாமல் உருவாகி வந்துள்ளது. அதுவே எங்கள் மீது கடவுள் கருணையோடு இருக்கிறார் என்பதற்கான சாட்சியாக எடுத்துக்கொள்கிறோம்" என்றார் முருகன்.
source https://www.vikatan.com/spiritual/gods/how-an-ordinary-rock-is-becoming-a-statue-of-god
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக